கைதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லையா? நாகர்கோயில் சிறையில் சிறை அதிகாரிகள் அடித்து வியாபாரி கொலை சிபிசிஅய்டி குற்றப்பத்திரிகை தாக்கல்!

3 Min Read
- Advertisement -

நாகர்கோவில், அக். 15- கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் (35), தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர் திடீரென உயிரிழந்தார்.

விசாரணையில், சிறையில் இருந்த சபரிவர்மன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி இரவில் தொடர்ந்து சத்தம் போட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிறை வார்டன்கள், அங்கு சமையல் வேலை முடித்துவிட்டு வந்த 8 கைதிகளைத் தூண்டிவிட்டு சபரிவர்மனை தாக்கச் செய்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்பாக ஜெகன் (முதன்மை வார்டன்), சுரேஷ் என்ற திருமலைநம்பி (தலைமை வார்டன்), சிவக்குமார் (சிறைக் காவலர்), விஷ்ணு, சாரதி (என்ற) கிராஸ் சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித் மற்றும் அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

89ஆம் நாளில் சிபிசிஅய்டி காவல் துறையினர் 11 பேருக்கும் எதிராகப் பலத்த ஆதாரங்களுடன் கூடிய 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். சிபிசிஅய்டி காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: சபரிவர்மனின் உடற்கூறாய்வு மற்றும் வேதியியல் ஆய்வக அறிக்கையில், சபரி வர்மனின் உடலில் எந்தவித நஞ்சோ அல்லது விஷத் தன்மையோ இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

சிறைக்குள் அவர் மீது நடத்தப்பட்ட சரமாரியான தாக்குதலில் உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் தொகுப்பால்தான் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது என்று மருத்துவ அறிக்கை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சபரி வர்மன் மதுப்பழக்கம் உடையவர் என்பதால், சிறைக்குள் அடைக்கப் பட்டதும் அவரால் இயல்பாக இருக்க முடியாமல் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். நள்ளிரவில் கூச்சலிட்டு, சக கைதிகளின் படுக்கை விரிப்புகளை தண்ணீரில் நனைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அவரது சத்தத்தைக் கட்டுப்படுத்த சிறை நிர்வாகம் சார்பில் தூக்க மாத்திரை வழங்கப்பட்ட போதிலும், அவருக்குத் தூக்கம் வரவில்லை. தூக்க மாத்திரை கொடுத்த பின்னரும் அவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் சிறை அறைக்குள் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சிறையில் சிறை விதிகளின்படி வன்முறையில் ஈடுபடும் கைதிகளைப் பூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சங்கிலியின் (லீடிங் செயின்) கொக்கி உடைந்திருந்ததால், காவலர்கள் மற்றும் சக கைதிகள் அவரது பையில் இருந்த லுங்கியை இரண்டாகக் கிழித்துக் கயிறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

நள்ளிரவு 11:30 முதல் 12 மணி வரை அவரது கை, கால்கள் லுங்கியால் கட்டப்பட்டு கடுமையாகத் தாக்கப் பட்டுள்ளார். பின்னர் கட்டுகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கூச்சலிட்டதால் நள்ளிரவு 2:30 மணியளவில் இரண்டாவது முறையாக அவரது கைகளையும் கால்களையும் பின்புறமாகச் சேர்த்து வைத்து மிக இறுக்கமாகக் கட்டிப் போட்டுள்ளனர். சிறையில் இருந்த முதன்மை வார்டன் ஜெகன் மற்றும் கைதிகள் 2 முதல் 3 பேர் சபரி வர்மனைத் தரதரவென இழுத்துச் சென்று தரையில் தள்ளி, அவரது கைகள் மற்றும் மார்புப் பகுதியில் கால்களால் ஏறி மிதித்துக் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் முதன்மை வார்டன் ஜெகனின் காலணி முக்கிய ஆதாரமாக சேர்க்கப் பட்டுள்ளது. கை,கால்கள் இறுக்கிக் கட்டப்பட்டு தரையில் கவிழ்ந்த நிலையில் கிடந்த சபரி வர்மன், தாக்கப்பட்ட காயங்களின் வலி தாங்க முடியாமல் தொடர்ந்து கதறி அழுது புலம்பியுள்ளார். நீண்ட நேரம் அசைய முடியாத நிலையில் தரையில் கிடந்ததால் அவருக்குத் தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு மேல் கூச்சல் அடங்கியதால் அனைவரும் தூங்கிவிட்டனர்.

அதிகாலை 5:30 மணிக்கு வழக்கமான வருகைப் பதிவின் போது காவலர்கள் எழுப்பியபோது, சபரி வர்மன் அசைவற்று அதே நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறைத்துறையினர் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையிலான சிறைச்சாலை சிசிடிவி காட்சிகளை சிபிசிஅய்டி காவல் துறையினர் ஆய்வு செய்து தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அதில் கைதிகள் மற்றும் காவலர்களின் நடமாட்டம், தாக்கப்பட்ட நேரம், கட்டப்பட்ட விதம், அசைவற்றுப் போன தருணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் அசைக்க முடியாத சான்றுகளாகப் பதிவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேசமணிநகர் காவல் துறையினரின் ஆரம்பக்கட்ட கைது நடவடிக்கைகள் சட்டப்படி இருந்தபோதிலும், கிளை சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு கைதிகள் மற்றும் காவலர்களின் அலட்சியத்தாலும், கொடூரத் தாக்குதலாலுமே சபரி வர்மன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு சிபிசிஅய்டி தனது குற்றப்பத்திரிகையில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *