பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனுடைய வெளிச்சம் வந்தால்தான், அறியாமை இருட்டுப் போகும்!
பெரியாருடைய கருத்தியல், தத்துவம் என்பது காலங்காலமாக தேவைப்படுகிற ஓர் அறிவியலைப் போன்றது!
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தத்துவம் உலகம் எங்கும் இருக்க வேண்டும்!
சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்று, இந்தியாவுக்குள்ளே
பல தாக்கங்களைச் செய்திருக்கின்றது!
பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனுடைய வெளிச்சம் வந்தால்தான், அறியாமை இருட்டுப் போகும்! பெரியாருடைய கருத்தியல், தத்துவம் என்பது காலங்காலமாக தேவைப்படுகிற ஓர் அறிவியலைப் போன்றது! சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்று, இந்தியாவுக்குள்ளே பல தாக்கங்களைச் செய்திருக்கின்றது! ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தத்துவமும் உலகம் எங்கும் இருக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்
இரண்டாம் நாள் மாநாடு!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 11, 12 ஆகிய நாள்களில் நடைபெற்ற அய்ந்தாவது பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டின் இரண்டாம் நாளில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலிமூலம் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தோழமைக்கு உரிய மாநாட்டுப் பேராளர்களே!
ஆற்றல் மிகு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க இருக்கக்கூடிய அருமை ஜப்பான் தோழர்களே!
இதற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்திருக்கக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பைச் சார்ந்த அருமை மிகு ஊக்கமிகு தலைவர் ஆற்றல் மிகு டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே!

இந்த நிகழ்ச்சியை முன்னாலே நிறுத்திய அருமை நண்பர்கள் செந்தில்குமார், கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான அருமைத் தோழர்களே! தாய்மார்களே, பெரியோர்களே, டோக்கியோவிலே இருந்து உள்ளூ ரிலே இருந்து கலந்து கொண்டிருக்கக்கூடிய குடும்பம் குடும்பமாக வந்திருக்கக்கூடிய தோழர்களே! உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய அன்பு வணக்கம்.
சமுதாய மாற்றத்தை, சிந்தனை மாற்றத்தை உருவாக்கக்கூடிய
ஓர் அற்புதமான களம்!
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெரிய சமுதாய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய, ஒரு சிந்தனை மாற்றத்தை உருவாக்கக்கூடிய ஓர் அற்புதமான ஒரு களம்தான் இந்த மாநாடு.
என்ன சிந்தனை மாநாடு என்று சொன்னால், நான் என்னுடைய முதல் நாள் உரையிலே குறிப்பிட்டதைப் போல, மிகப்பெரிய ஆபத்து வருகின்ற ஒரு சூழலை உருவாகி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும், மற்றவர்கள் மத்தியிலும் ஒரு பண்பாட்டுத் திணிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கி றார்கள். இதுதான் நம்முடைய பண்பாடு என்று.
பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனுடைய வெளிச்சம் வந்தால்தான், அறியாமை இருட்டுப் போகும்!
‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ என்பதை மாற்றி, எல்லோரும் அங்கே தனித்தனிதான் என்று சொல்ல வேண்டிய ஒரு வருணாசிரமத்தை, மிக நளினமாகப் புகுத்திக் கொண்டிருக்கிற ஆபத்து வருகிற கார ணத்தாலும், புதுப் புது மூடநம்பிக்கைகளை ஏற்றுமதி செய்து, இங்கே இறக்குமதி செய்யக்கூடிய ஆபத்து இருக்கிற காரணத்தாலும் தான், பெரியார் என்ற அந்தப் பகுத்தறிவுப் பகலவனுடைய வெளிச்சம் வந்தால்தான், அறியாமை இருட்டு மிகப்பெரிய அளவிற்கு போகும். ஆனால், சமூகத்திலே இங்கே இருக்கக்கூடிய ஒற்றுமைகளை எல்லாம், அந்த வாய்ப்புகளை எல்லாம் குலைக்கக்கூடிய அளவில் சிலர் இருக்கிறார்கள்.
ஏன், பெரியாருடைய சிந்தனை தேவை?
இன்னும் கேட்டால், எந்த மண்ணில் நீங்கள் பிறந்து, எந்த மண்ணிலிருந்து இங்கே வந்து, இந்த மண்ணோடு ஒன்றி சிறப்பாக, மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களோ, வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெருமையோடு இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதோ, அந்த வாய்ப்புகளையே மாற்றக்கூடிய அளவிற்குப் பல முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. அந்தப் பெயரிலே ஒன்று ஒன்றுபட்டிருக்கிறோம். ஆனால், செயலிலே ஒன்றுபட்டிருக்கக்கூடிய மகிழ்ச்சிகரமான ஒரு தொடர்ச்சி வாழ்க்கை உங்களுக்குத் தொடர்ந்து அமைய வேண்டும். அதற்குக் குறுக்கே இப்போது பெரிய தீய சக்திகள், பிற்போக்கு சக்திகள், இன்னும் மதவெறி சக்திகள், ஜாதிவெறி சக்திகள் வருகின்றன என்பதால்தான், பெரியாருடைய சிந்தனை தேவை!
பெரியாருடைய கருத்தியல், தத்துவம் என்பது காலங்காலமாக தேவைப்படுகிற
ஓர் அறிவியலைப் போன்றது!
அதுமட்டுமல்ல, தன்னம்பிக்கையை மனிதர்கள் பெற வேண்டும். எல்லாம் ‘தலையெழுத்து’ என்று கருதிக்கொண்டு, நம்முடைய வாழ்க்கை அழித்து கொண்டிருக்கிற நேரத்தில், ‘எதுவும் நம்முடைய கையிலே இல்லை’ என்ற அந்த மிக முக்கியமான ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை மாற்ற வேண்டுமானால், அதற்குப் பெரியார் தேவை! பெரியாருடைய கருத்தியல், தத்துவம் என்பது காலங்காலமாக தேவைப்படுகிற ஓர் அறிவியலைப் போன்றது. அறிவியல் எப்படி வளர்ந்து கொண்டே இருக்கிறதோ, அறிவியல் எப்படி சமூக விஞ்ஞானமாக இருக்கிறதோ அதுபோலத்தான்.
சமூக விஞ்ஞானத்தினுடைய விளைவு எந்த அளவிற்கு தாக்கங்களை உருவாக்கி இருக்கிறது? ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இயக்கம் சுயமரியாதை இயக்கம். அதே மாதிரி, திராவிடர் இயக்கம் அதற்கு முன்பு தொடங்கப்பட்டு, சமூக அநீதியை எதிர்த்து, சமூக நீதியை வற்புறுத்திய இயக்கம். இரண்டையும் இணைத்தது திராவிடர் கழகம். அதை அரசியல் ரீதியாகக் கொண்டு போனது திராவிட முன்னேற்றக் கழகம் என்று இருந்தாலும் கூட, இது அரசியல் பகுதிகள்; சமூக மாற்றங்கள். ஆனால், எல்லாவற்றையும் விட, மனிதர்கள் நாம். எல்லாவற்றையும் விட சமத்துவக் குறிகோள் நமக்கு அமைந்திட வேண்டும் என்பதற்காகத்தான், மிகப்பெரிய அளவிற்குத் தந்தை பெரியார் தன்னுடைய பயணங்களைத் தொடங்கினார்.
‘பெரியார் உலகமயம்’ என்று நாம் சொல்லும் போது, அவர் எப்போது அதை உருவாக்கினார்? அவரே அதை உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டார். இது ஓர் அதிசயமானது.
தோட்டப்புறத் தொழிலாளிகள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றார் பெரியார்!
சுருக்கமாகச் சொன்னால், 1929 ஆம் ஆண்டில், மலேயாவுக்குத் தோட்டப்புறத் தொழிலாளர்களைச் சந்திக்கக்கூடியதிலிருந்து தொடங்கி, பிறகு 1954 ஆம் ஆண்டில், பர்மாவிலே, அதேபோல சிங்கப்பூர் நாட்டிற்கு இரண்டாம் முறையாகச் சென்றார். ஒரே ஒரு மாற்றம், அது என்னவென்றால், முதல் முறையாக அவர் சென்றபொழுது, அந்த மக்கள் மிகப்பெரிய அளவுக்குத் தொழிலாளிகளாக, வெறும் கங்காணிகளால் அழைக்கப்பட்ட தொழிலாளிகளாக இருந்தபோது, சிங்கப்பூர் உதாரணத்தைச் சொல்லுகிறேன். 1929–இல் நம்மில் பலர் பிறக்காத காலம். அந்த காலகட்டத்திலே, அவர் அங்கு சென்று, தோட்டப்புறத் தொழிலாளிகள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றார். பெரும் நகரங்களுக்கோ, மற்ற பகுதிகளுக்கே அவர் போகவில்லை. அங்கே வாழக்கூடிய, மக்கள் வதியக்கூடிய சூழலை அவர் புரிந்து கொண்டு, அந்த மக்களுக்கு அறிவுரை கூறினார்.
‘‘வெறும் கள்ளுக்கடைக்குச் சென்று, இருக்கும் பணத்தைக் கொண்டு குடித்துக் கொண்டிருக்காதீர்கள்; அதேபோல, நீங்கள் ஏதோ ஒரு குட்டிச்சாமியை வைத்து கொண்டு, அதிலே உங்களுடைய நேரத்தை வீணாக்கவேண்டாம். ஆனால், வேலை வாங்கும் எஜமானர்கள், இந்த இரண்டையும் வைத்தால், அவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள் என்று, ஓபியேஷன் என்று சொல்லக்கூடிய அந்த ஒரு போதையை உருவாக்குவதில் இருந்தார்கள். அதை எதிர்த்துக் கண்டித்து, ‘‘நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். வெட்டுகின்ற அந்த பால்மரக் கத்தியைத் தூக்கி எரியுங்கள், உங்களின் பிள்ளைகளின் கைகளில் பேனா இருக்க வேண்டும்’’ என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.
உலகத்தில் எந்தத் தலைவருக்கும்
அந்த வாய்ப்புக் கிடையாது!
இதே மலேசியாவில், அடுத்தத் தலைமுறையினரைப் பார்ப்பதற்குப் பெரியார் அவர்கள் மலேசியாவிற்குப் போகும்போது, அந்தத் தாக்கம் மிகப்பெரிய அளவுக்கு ஏற்பட்டு, அந்த ஒரு நோக்கமும் நிறைவேறி, அந்தப் பிள்ளைகள் அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள். எந்தச் சமூகத்தில் அவர் அறிவுரைகளைச் சொல்லிவிட்டு வந்தாரோ, அது பூத்தது, காய்த்தது, கனிந்தது. அதை அவரே பார்த்தார்; உலகத்தில் எந்தத் தலைவருக்கும் அந்த வாய்ப்புக் கிடையாது. அவரை வரவேற்றார்கள், சிங்கப்பூரில் மிகப்பெரிய ஒரு தாக்கம் என்று சொல்வதற்கு இரண்டு, மூன்றை மட்டும் வேகமாகச் சொல்லுகிறேன்.
ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குங்கள்!
இது சிங்கப்பூர் நாட்டிலே நேஷனல் யூனிவர்சிட்டியில் ‘‘Indians in Singapore, 1819-1945 : diaspora in the colonial Port City’’ என்று புத்தகத்தை Rajesh Rai எழுதி இருக்கிறார். ஒரு தலைவனுடைய பயணம், அது ஏற்படுத்திய தாக்கம், அதனுடைய நோக்கம், அதனால் விளைவுகள் சிறப்பாக இருந்தன. ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குங்கள் என்று பெரியார் அவர்கள் வேண்டுகோள் விடுத்து, உருவாக்கி, இன்றைக்கு மிகப்பெரிய ஆய்வாக அது இருக்கிறது.
சிங்கப்பூரிலே மட்டுமல்ல, அதேபோல பெரியார் அவர்கள், மலேசியாவுக்குச் சென்றிருந்த நேரத்திலே, அங்கே எப்படிப்பட்ட ஒரு தாக்கம் ஏற்பட்டது என்பதைப் பற்றி, நியூசிலாந்தில் உள்ள ஆக்லாண்டில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தைச் சார்ந்தவர், அங்கே போய் ஆய்வு செய்து, பெரியாரைப் பற்றி, அவருடைய தாக்கம் மிகப்பெரிய அளவுக்குத் தமிழர்கள் மத்தியிலே ஏற்பட்டு, பெரிய மாற்றம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரியாருக்குச் சுற்றுலாவும் அல்ல;
கற்றுலாவும் அல்ல அது!
இதுபோன்று, எந்தத் தலைவருடைய வருகையும் இப்படி இருந்ததில்லை. ‘‘சென்றார்கள், பார்த்தார்கள், திரும்பினார்கள்’’ என்று இருக்கும். பெரியாருக்குச் சுற்றுலா அல்ல; கற்றுலாவும் இல்லை. கற்றுக் கொடுக்கின்ற, மக்களைத் திருத்தி, அவர்களுக்குப் புது வாழ்க்கையைத் தரக்கூடிய பகுத்தறிவுள்ள ஒரு வாழ்க்கையை, தன்மானம் உள்ள வாழ்க்கையை, ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கையை, மூட நம்பிக்கையை அழிக்கக்கூடிய வாழ்க்கையை, எல்லோ ருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வாழ்க்கையை அவர்கள் உருவாக்கினார்கள். அதற்கு இது ஓர் ஆதாரம். ‘‘Class, Race, and Colonialism in Peninsular Malaysia: A Political History of Malaysian Indians’’ by Michael Stenson…
ஒரு தலைவருடைய பயணம் எப்படி மாற்றத்தைத் தந்தது என்பதற்கு உதாரணம்!
இதைப் பற்றிச் சொல்கிற நேரத்திலே, இந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்து ஒருவர் எழுதியிருக்கிறார். ‘‘மலேயா முதல் மலேசியா வரையில் தமிழர்கள் வரலாறு: அடையாளத்தைத் தேடி’’ என்ற தலைப்பில், நண்பர் சந்திரசேகரன் எழுதியிருக்கிறார். அவரே நேரடியாக வந்து, இந்த நூலை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். பாராட்டினோம், அவர் மலேசியாவிலே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நூலில் ஒரு பகுதி, தந்தை பெரியாருடைய பயணங்கள், ஒரு தலைவருடைய பயணம் எப்படி மாற்றத்தைத் தந்தது என்பதற்கு இது போதும்.
பெரியாரின் வருகை, தமிழர்களிடையே புதிய சிந்தனையையும், புத்துணர்ச்சியையும் ஊட்டியது!
தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மனமாற்றம், பெரியார் வந்து சென்ற பிற்பாடு உணர்வுவயப்பட்டு எழுகிறார்கள். மனமாற்றம் இன்னொரு காரணம். 1929 இல், தந்தை பெரியார் மலேயா வருகையாகும். இந்த மனமாற்றம், எது திருப்பம் என்று சொன்னால், தாக்கம் வருகையாகும். சிங்கப்பூரிலும், மலேயா முழுவதிலும் பெரியார் கலந்து கொண்ட கூட்டங்கள் மூலம், இதுவரை எந்தத் தலைவரும் செய்திராத அரியதொரு காரியத்தைப் பெரியார் செய்தார். அடிமட்ட தமிழ்த் தொழிலாளர்களை நேரடியாகப் பெரியார் சந்தித்ததுதான் அது. பெரியாரின் வருகை, தமிழர்களிடையே புதிய சிந்தனையையும், புத்துணர்ச்சியையும் ஊட்டியது. மலேயாவையும், சிங்கப்பூரையும் தம் தாய்நாடாக ஏற்று வாழுமாறு சென்ற இடங்களில் எல்லாம், பெரியார் வலியுறுத்தினார். அவருடைய எழுச்சி மிகு பேச்சால், கவரப்பட்ட கோ.சாரங்கபாணி, ‘‘முன்னேற்றம்’’ என்ற பத்திரிகையை 1929 ஆம் ஆண்டிலும், ‘‘தமிழ் முரசு’’ என்ற முதல் தமிழ்ப் பத்திரிகையையும் தொடங்கினார்கள். அதுமட்டுமல்ல, 1932 ஆம் ஆண்டில், ஆண்டுகள் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார்கள். தமிழ் மொழி அங்கே சிறப்பாக வளர்வதற்கும், தமிழ் மொழியில் ஏடுகள் பரவுவதற்கும் வித்திட்ட மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புக்கு பெரியாருடைய தொண்டர்கள்தான் காரணம். கலைத்துறையிலே மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியது; பெரியாரின் வருகையின் தாக்கம் பற்றி, தொழிலாளர் இலாகா அதிகாரிகள் அளித்திருக்கும் அறிக்கை – கெசட். அதனை உறுதி செய்வதற்காக உள்ள இந்தத் தொழிலாளி இலாகாவின் மாதாந்தர அறிக்கையில், ஜூன் மாதம், 1956, பக்கம் 13 இல் காணக் கிடக்கிறது. ‘‘1930 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்கள், பெரியாரின் வருகையை ஒட்டி ஏற்பட்ட தாக்கங்களின் விளைவு’’ என்று, அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். தொழிலாளர் மத்தியிலே செல்வாக்குப் பெற்ற இளம் தலைவர்கள் அங்கே பலர் இருந்தாலும் கூட, இந்தப் பெரியாருடைய வளர்ச்சிதான், தாக்கம் தான் இதற்குக் காரணம் என்று சொன்னார்கள். இதை சிங்கப்பூர் நாடு ஒரு பெரிய அளவிற்கு, அந்த நாட்டு அரசாங்கத்தார் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள், வரலாற்று ஆவணமாக.
‘‘திராவிடர், தமிழர், இந்தியர் –
மாறி வரும் அடையாளங்கள்!’’
அதிலே, திராவிட இயக்கம் வந்த பிற்பாடுதான், திராவிட சமுதாயத்தினரிடையே விளைவுகள் ஏற்பட்டுத்தான் தெளிவான மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதை அருள் மகிழன், சிறந்த ஆய்வறிஞர்கள் நளினா கோபால் ஆகியோர் தொகுத்துள்ளனர். அதிலே இருக்கக்கூடிய ஒரு பகுதி – சிறப்பான கட்டுரை. ‘‘திராவிடர், தமிழர், இந்தியர் – மாறி வரும் அடையாளங்கள்’’ என்ற தலைப்பிலே. சுருக்கமாகச் சொன்னால், தமிழினம் குறித்து பிரிட்டிஷாரின் சிறுமைப்படுத்தும் மதிப்பீடுகள் ஆழமாக புரையோடிப் போயிருந்த ஜாதி அமைப்பு – பெரியார் போவதற்கு முன்னாலே – ஜாதி அமைப்பு, பொருளாதார அடிப்படையினால், வர்க்க வேறுபாடுகள் ஆகியவை, சிங்கப்பூரிலும், மலேயாவிலும் தமிழ்ச் சமுதாயத்தைப் பொதுவாக, ஊக்கமற்ற, சோர்வுற்ற சமூகமாக ஆக்கி இருந்தன. இந்தச் சூழ்நிலையில் தான், சமூக சீர்திருத்த சுயமரியாதை இயக்கங்கள் எழுச்சியுடன் சிங்கப்பூரிலும், மலேயாவிலும் தொடங்கின. சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், அவற்றின் பின்னணியில் இருந்த பெரியாரும், மக்களின் எழுச்சிக்கு முக்கிய காரணிகள் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய
கருத்தாக்கங்கள் உருவாயின!
ஒன்று, இவர்கள் தங்களுடைய தீவிரமான கருத்துகளால், பெரிய அளவுக்கு போர்க்குணம் மிக்க நிலைப்பாட்டாலும், சாமானிய தமிழன் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது. இக்கருத்தாக்கம், தாழ்த்தப்பட்ட ஜாதிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினராக கவனப்படுத்துவதற்கு அமைந்தது. திராவிடர், திராவிடர் அல்லாதார் என்ற இருமையை, மொழியை, பிரச்சினைகளை வலிமையாகக் கட்ட மைத்து, அதன் மூலமாக பெரும் இயக்கத்துக்கு வந்தது. சுயமரியாதைச் சீர்திருத்தம், தமிழ், திராவிட என்ற ஜாதியற்ற, தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்ட அந்த இயக்கத்தின் அடித்தளமாக அமைந்திருந்ததால், சிங்கப்பூரிலும், மலேயாவிலும் சீர்திருத்தம் வேண்டியிருந்த தமிழர்களை அவ்வியக்கம் வெகுவாகக் கவர்ந்தது. ஜாதிய வர்க்கப் பிரிவு என்று சொல்லக்கூடிய அந்தக் காலகட்டத்தில், சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாயம், முன்னேற்றத்தையும், பொதுவான பண்பாட்டு அடையாளத்தையும், அவர்கள் விரும்பியது போலவே சுயமரியாதை இயக்கத்தினுடைய கருத்தாக்கங்கள் உருவாயின’’ என்று மிகச் சிறப்பாக சொல்லுகிறார்கள்.
இப்படி ஏராளமானச் சான்றாவணங்களோடு சொல்ல லாம். பெரியாருடைய பயணங்கள் ஆய்வுக்குரியவைகளாக இருக்கின்றன. சமூக மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தலைவரால், ஒரு தனி மனிதராக தொடங்கப்பட்ட அந்த சுயமரியாதை இயக்கத்தால், எவ்வளவு அழகான மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டுமானால் நண்பர்களே, இன்னொன்றைச் சொல்ல வேண்டும்.
சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்று, இந்தியாவுக்குள்ளே பல தாக்கங்களைச் செய்திருக்கின்றது!
இந்தியாவிலே, எத்தனையோ மாற்றங்கள் சுயமரி யாதை இயக்கத்தால் வந்திருக்கின்றன. தெருவில் நடக்க முடியாதவர்கள், நெருங்கக் கூடாதவர்கள், நாய் போகலாம், பன்றி போகலாம், கழுதை போகலாம், ஆறறிவு படைத்த மனிதன், உழைக்கின்ற மனிதன், இன்னுங்கேட்டால், அந்தக் கோயிலைக் கட்டியவன், அது இருக்கின்ற தெருவில் நடக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதை மாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஒன்றாக உண்ணக்கூடாது, சிறு பிள்ளைகளைக் கூட பிரித்து வைத்த நேரத்தில், அதை எதிர்த்துப் போராடியவர் தந்தை பெரியார். ஒவ்வொரு காலகட்டமாக, அந்த இயக்கம் வெற்றி பெற்று, வெற்றி பெற்று, இன்றைக்கு இந்தியாவுக்குள்ளே பல தாக்கங்களைச் செய்திருக்கின்றது என்பது, அது ஒரு தனி வரலாறு.
பெரியார்தம் சிந்தனைகள் உலக மயமாவது என்பது உறுதி!
அதுமட்டுமே அல்ல, இன்னொரு செய்தியைக் குறிப்பாக உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், ஒரு தாக்கம், எண்ணிப் பாருங்கள். சுயமரியாதை இயக்கம், இந்தியாவுக்குள்ளே ஏற்படுத்திய தாக்கத்தின் உச்சக்கட்டம் எது தெரியுங்களா?
‘‘தமிழ்நாட்டில் காந்தி!’’
காந்தியார் அவர்கள், தன்னுடைய துணைவியார் கஸ்தூரிபாய் அம்மையாரோடு அவர் சென்னைக்கு வந்து தங்குகிறார். அப்படி அவர் சென்னைக்கு வரும்போது, மயிலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டிலேதான் தங்குவார். அவருடைய வீட்டின் திண்ணையில் தான் காந்தியார் அனுமதிக்கப்படுவார். ‘‘திண்ணையில் தான் உட்காருவேன்’’ என்று காந்தியாரே, சொல்லி இருக்கிறார், ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்ற நூலில்.
இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன: காந்தியார்!
அதற்குப் பிறகு, அவரிடத்தில் கேட்கிறார்கள், இரண்டாவது முறை தமிழ்நாட்டிற்கு வருகிறார். 1926 ஆம் ஆண்டிற்குப் பிறகு வருகிறார். அப்படி அவர் வரும்போது, பன்னீர்செல்வம் உள்பட தஞ்சையிலே சந்தித்து, ‘‘அய்யா, பார்ப்பனர்கள் – பார்ப்பனரல்லாதார் பிரச்சினை என்பது வேகமாய் இருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் இப்போது பேசினால், பெரியார் அதை விரும்புகிறார். அழைத்துப் பேசலாமே?’’ என்று சொன்ன போது, காந்தியார் சிரித்துக் கொண்டே சொல்லுகிறார், ‘‘அதை இப்போது பெரிதாக வளர்ந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. காரணம் என்னவென்றால், முன்பெல்லாம், நான், மயிலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டிற்கு வந்து தங்கினால், திண்ணை யில்தான் அமர்ந்திருப்போம்; இப்போது சமையலறை வரையில் எங்களை அழைத்து, அவர்கள் அன்போடு உபசரிக்கிறார்கள் என்று சொன்னால், இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன’’ என்று சொல்கிறார். நாசுக்காகச் சொல்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய தாக்கம்தான்!
அந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? அதனுடைய தாக்கம், யாருடைய தாக்கம்? சுயமரியாதை இயக்கத்தி னுடைய தாக்கம்தான்.
எனவே, சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், தெருத் திண்ணையிலே உட்கார வைத்திருந்த ‘தேசப்பிதா’ காந்தியை வீட்டினுள்ளும், சீனிவாச அய்யங்காருடைய வீட்டு அடுப்பங்கரை வரையிலே கஸ்தூரிபாய் காந்தியையும் அனுப்பிய இயக்கம், இந்த இயக்கம், அதனுடைய தாக்கம்.
அதுமட்டுமல்ல, இது ஓர் உதாரணம், இப்படி எத்தனையோ சொல்லலாம். பெண்கள், வெறும் கரண்டிகளையே பிடித்துக் கொண்டிருந்த கரங்களுக்கு, அவர்கள் பேனாவை பிடிக்கக்கூடிய அளவிற்கு மட்டுமல்ல, காவல்துறையில் அவர்கள் துப்பாக்கியைப் பிடிக்கக்கூடிய அளவிற்கு வாய்ப்புக் கொடுத்தது இந்த இயக்கமும், பெரியாருடைய தத்துவங்களும், அந்தத் துணிவும், அந்த ஆய்வும், தன்னம்பிக்கையும் தான்.
அந்தத் தன்னம்பிக்கை எப்படிப்பட்டது?
மயில்சாமி அண்ணாதுரை!
சுயமரியாதை இயக்கத்திற்கு என்ன அடிப்படை என்பதற்கு இன்னொரு முக்கியமான உதாரணம், பெரியார் உலக மயம் மட்டுமல்ல; பெரியார் விண்வெளி மயம் என்று கூட சொல்லலாம். இவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும், உயர்த்திச் சொல்வார்களோ என்று நினைக்கலாம்; அப்படி இல்லை, உங்களுக்குத் தெரியும், மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், சிங்கப்பூரில் ஆற்றிய அருமையான சொற்பொழிவு, அற்புதமான ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. ‘‘பெரியாரும் – அறிவியலும்’’ என்ற நூலில் அவர் சொல்லுகிறார், ‘‘நான் மற்றவர்களைப் போல, படித்துக் கொண்டிருந்தேன்; பின் பெரியார் மாணவனாகப் படித்தேன்; அப்படிப் படித்தபோது, வித்தியாசமாக இருந்தது. என்னை வெகுவாக இழுத்தது’’ என்றார்.
என்ன சொல்லுகிறார் என்றால், மாணவர்களைப் பார்த்துச் சொன்னார், ‘‘நீங்கள் எல்லாம் வெறும் செக்கு மாடுகளாக இருக்காதீர்கள், சுற்றிச் சுற்றி வந்து. ரேஸ் குதிரைகளாக இருங்கள்’’ என்று தந்தை பெரியார் சொன்னார். அந்த உணர்வுகளை எல்லாம் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கிற போது, நான் சிந்திக்க ஆரம்பித்தேன். சுதந்திரமாக சிந்தித்துப் பார், உன்னுடைய அறிவை நீ நம்பு! துணிந்து முடிவெடு என்று சொல்லும்போது, சந்திரனில் தண்ணீர் கிடையாது என்றெல்லாம் சொல்லி, அதோடு நிறுத்திவிட்டார்கள். ஆய்வுகள் அதற்கு மேலே இல்லை என்று முடிவு செய்துவிட்ட பிறகு, ஏன் நாம் மேலே ஆய்வு செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன். முடிவெடுத்து, சிந்திக்க ஆரம்பித்தேன். அதனுடைய விளைவாகத்தான், நிலவில் சென்று, அதை ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு சந்திராயன் உருவானது’’ என்று அவர் சொன்னார்.
பெரியாருடைய சிந்தனைதான் காரணம்!
எனவே, மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், சந்திராயன் மயில்சாமியாக ஆவதற்கும், சிறப்புமிகுந்த விஞ்ஞானியாக ஆவதற்கும், அவர் சாதனை உலகளாவிய அளவிற்குப் பாராட்டைப் பெறுவதற்கும், யார் காரணம் என்றால், பெரியாருடைய சிந்தனை தான் அதற்குக் காரணம்!
இது, இரண்டாவது ஆக்கமாகும். இப்படி பல ஆக்கங்களை, நிலவில் நீர் இருக்கிறது என்று ஆய்ந்து சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரு விஞ்ஞானியை உருவாக்கக்கூடிய அளவுக்கு வந்தார்கள்.
‘இனி வரும் உலகம்!’
‘இனி வரும் உலகம்’ என்ற சிறிய நூலை எடுத்துக் கொண்டால், பெட்ரோல் இல்லாமல், வண்டி மின்சாரத்தில் ஓடும் என்று சொன்னார். இன்றைக்கு மின்சாரக் கார்களிலே நீங்கள் பயணம் செய்கிறீர்கள். அது மட்டுமல்லல, தமிழ் மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மயம் என்ற வடமொழி கலாச்சாரம், ஆரிய கலாச்சாரம் வேறு; திராவிட கலாச்சாரம் வேறு. திராவிடம் ஒன்றுபடுத்துவது; ஆரியம் வேறுபடுத்துவது; இவ்வளவுதானே தவிர, இரத்த பரிசோதனையோ, பேதமோ கிடையாது. ஒன்றுபடுத்தக்கூடிய அந்தக் கலாச்சாரத்தின் மொழியை அவர்கள் இழிவுபடுத்திய நேரத்திலே தான், தந்தை பெரியார் மொழியின் ஆக்கம், அவசியம்பற்றி எடுத்துக் கூற ஆரம்பித்தார். தனிப்பட்ட முறையிலே மொழி என்பதை விட, மொழி ஒரு பண்பாட்டுப் போர்க் கருவியாக இருக்க வேண்டும் என்று சொன்னார். தமிழுக்கு அவர்கள் கொடுத்திருக்கிற ஆக்கம், இன்றைக்குத் தமிழ் தனித்து இயங்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. பண்பாட்டு அடிப்படையிலே அதை அழிக்க வேண்டும் என்று சூளுரைத்துச் சிலர் முனைந்தபோது, அதற்குப் பெரியார் அவர்கள் எதிராகப் போராட்டக் களத்தில் நின்றவர், அது ஒரு பக்கம்.
தமிழ்மொழியை, செம்மொழியாக ஆக்கியவர் கலைஞர்!
இன்னொரு பக்கம், ஹிந்தி எதிர்ப்பு மற்றவற்றைச் சொல்வார்கள். தமிழுக்கே வளர்ச்சியை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு வர வேண்டுமானால், இந்த செயற்கை நுண்ணறிவு இருக்கிற காலத்திலே அடிப்படையானது என்ன? மொழி வளர வேண்டும் என்று சொன்ன நேரத்திலே, மொழியைப் பரப்ப வேண்டும். தமிழ்மொழியை, செம்மொழியாக கலைஞர் அவர்கள் ஆக்கினார்கள், பெரிய சாதனை. அதற்குப் பிறகுதான், வடமொழியே செம்மொழி என்று ஆயிற்று. அதுவரையிலே அவர்கள், ‘எங்களுடைய மொழி, செம்மொழி, செம்மொழி’ என்று கட்டுக்கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தமிழ் மொழிச் சீர்திருத்தம் –
எழுத்துச் சீர்திருத்தம்!
அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், அதைவிட மிக முக்கியமான ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், தமிழ் மொழி, உலகத்துக்கு கணினித் தமிழாக ஆக வேண்டும். இன்றைக்கு அந்நிலை வந்துவிட்டது. இன்றைய யுகம், கணினி யுகம். இதிலே பார்த்தீர்களேயானால், தமிழ் மொழியை சீர்திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் எழுத்துகளைத் தந்தை பெரியார் துணிந்து சீர்திருத்தினார். எத்தனையோ தமிழ் அறிஞர்கள், எத்தனையோ இலக்கண மேதைகள், எத்தனையோ மொழி வல்லுநர்கள் இருந்தும் கூட, அதில் கை வைக்கப் பயந்தார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், 4 ஆம் வகுப்பு மட்டுமே படித்த பெரியார், பகுத்தறிவுப் பகலவனாக, பட்டறிவினுடைய உருவமாக இருக்கின்ற காரணத்தால்தான், ‘‘துணிந்து எதிலும் இறங்கு, எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படாதே! இமயமே எதிர்த்தாலும், நான் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன், செய்து காட்டுவேன், வென்று காட்டுவேன்’’ என்று அவர்கள் செய்ததினுடைய விளைவுக்கு ஒரே ஓர் உதாரணம், தமிழ் மொழிச் சீர்திருத்தம் – எழுத்துச் சீர்திருத்தம்.
‘‘செயற்கரிய செய்வர் பெரியார்!’’
சிங்கப்பூரிலே அந்தத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத் திற்கு ஓர் ஆதரவு கிடைத்தது, அந்தக் காலத்தில்! அந்த எழுத்துச் சீர்திருத்தத்தினுடைய விளைவு இருக்கிறதே, அதை எண்ணிப் பாருங்கள். அது வெறும் எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, நண்பர்களே! அதுதான் உலகத் தொடர்பு, அதுதான் இன்றைக்கு ஜென் சி என்று சொல்லக்கூடிய ஜென் சி தலைமுறையினர் எளிதில் தமிழ்ப் படிக்க வேண்டும் என்பதற்கு வெகுவாகப் பயன்படுகின்றது. தமிழ் படிப்பதற்கு, எழுத்துகள் குறைவாக ஆகி, இன்றைக்கு எல்லோரும் எளிதாகத் தமிழிலே தங்களுடைய கணினியைப் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு வந்தார்கள் என்றால், அதற்கு மூலக் காரணம் என்ன? பெரியாருடைய சிந்தனை. 1934 இல், எவர் வந்தாலும், வராவிட்டாலும், நான் செய்து காட்டுவேன். ‘‘செயற்கரிய செய்வர் பெரியார்’’ இதுதான். ஏன் பெரியார்? செயற்கரிய செய்தார்; சொன்னவர்கள் பலர் உண்டு. பாடியவர்கள் சிலர் உண்டு. சொல்லிவிட்டுப் போனவர்கள் சிலர் உண்டு. ‘‘கடைவிரித்தேன், கொள்வார் இல்லை; கட்டிவிட்டேன்’’ என்று சொன்ன வள்ளலார் உள்பட இருந்தார்கள். ‘‘நான் விரித்த கடையை ஒருபோதும் மூட மாட்டேன்; நீங்கள் கொள்வது வரை, நான் சொல்லிக் கொண்டிருப்பேன், திருத்துவேன்’’ என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள். எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை, அதனுடைய விளைவுதான் நண்பர்களே, ‘‘பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள்’’ வந்தன. அதனுடைய விளைவு, இன்றைக்குக் கணினி உள்பட, நீங்கள் ஒவ்வொருவரும் கையிலே வைத்திருக்கிற, செல்போன் – கைப்பேசியில், ‘‘கடகட கடகட’’வென்று, இரண்டு விரல்களில் வேகமாக அடிக்கிறீங்க, மிகப்பெரிய அளவிற்கு. இவையெல்லாம் எப்படி வந்தன என்றால், பெரியாரால்தான்!
எனவே, ‘பெரியார் உலக மயம்’ என்று சொன்னால், உலகம் பெரியார் மயம்தான். ஏனென்றால், கைப்பேசியே அனைவருக்கும் உலகம். செல்போன் என்பது உலகமாக இருக்கும்போது, அதில் தமிழ் மொழியைப் பயன்படுத்துகிறோம் என்று சொன்னால், தமிழைப் பயன்படுத்தும் போதெல்லாம், பெரியார் உலக மயம்– பெரியார் கொடுத்தது. ஆகவே, தொலைப்பேசியைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், தொலைப்பேசியைக் கண்டுபிடித்தவருக்குத் தான் இந்த மரியாதை. ஆனால், அவர் அதை எதிர்பார்க்கவில்லை. என்னைப் போற்ற வேண்டும் என்கிற அவசியமில்லை. என்னைத் தூற்றுபவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. போற்றுகிறவர்களைப்பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை’’ என்று சொன்னார்.
‘அதிர்ஷ்டம்’ என்பதை நாங்கள்
நம்ப மாட்டோம்!
எனவே, சுயமரியாதை வாழ்வு, தன்னம்பிக்கையை உருவாக்கும். ஒன்றை நான் படித்தேன், பாராட்டுகிறேன். பெரியாருடைய கருத்துக்கும், ஜப்பானில் உள்ள கருத்துக்கும் அதாவது, ‘கம்பத்தோ’ என்று சொல்லுகிறார்கள். ‘‘அதிர்ஷ்டம் என்பதை நாங்கள் நம்ப மாட்டோம். அதற்குப் பதிலாக உங்களை வாழ்த்துகிறோம். உங்கள் உழைப்புதான் மிக முக்கியம். ஆகவே, நீங்கள் தெளிவாகத் தொடர்ந்து உழையுங்கள்’’ என்பதுதான் கம்பத்தோ என்பது. எல்லோரும் ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று சொல்வார்கள். அதை ஜப்பானியர்கள் சொல்வதில்லை; பகுத்தறிவாளர்களும் சொல்லமாட்டார்கள். பெரியாரிஸ்டும் சொல்ல மாட்டார்கள். இது ஒன்றே போதும், மிகப்பெரிய அளவிற்கு நாம் இணைந்தவர்கள் என்று காட்டுவதற்காக.
‘அதிர்ஷ்டம்’ என்றால்,
‘பார்வையற்ற நிலை’ என்று அர்த்தம்!
காரணம் என்னவென்று சொன்னால், ‘அதிர்ஷ்டம்’ என்பதை நம்பிக் கொண்டு, ‘நம்முடைய கையிலே எதுவும் இல்லை’ என்று நினைப்பார்கள். இன்னொரு செய்தியை உங்களுக்கு வேடிக்கையாகச் சொல்லுகிறேன். அதைப் பயன்படுத்துகிறார்கள் தமிழில். ‘அதிர்ஷ்டம் உங்களுக்கு வரவில்லை!’ என்பார்கள். ‘திர்ஷ்டம்’ என்றால் சமஸ்கிருதத்தில், ‘பார்வை’ என்று அர்த்தம். ‘அதிர்ஷ்டம்’ என்றால், ‘பார்வையற்ற நிலை’ என்று அர்த்தம். ஏனென்றால், ‘குருடன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது.
ஆகவேதான், ‘கண்பார்வையற்ற’ என்று சொல்கிறோம். ‘‘எனக்கு எப்பொழுது கண்பார்வை போகும், அந்த நிலை எப்போது வரும் என்று மிக அவசரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற காலகட்டம்தான் ‘அதிர்ஷ்டம்’ என்ற சொல்லில் அடங்கி இருக்கிறது.’’ ஆகவேதான், உங்களுடைய பகுத்தறிவுக் கருத்துகள் பாராட்டப்பட வேண்டிய கருத்துகள். அதை தனியே ஒரு புத்தகமாக கூட ஆக்கியிருக்கிறோம். அதை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தத்துவமும் உலகம் எங்கும் இருக்க வேண்டும்!
எனவேதான், இன்றைக்கு வருகிற ஆபத்தைத் தணிப்பதற்கு மட்டும் பெரியார் இல்லை; நம்மை சமத்துவத்திற்குத் தயாராக்குவதற்கு மட்டும் பெரியார் தத்துவம், உலகமயமாக வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தன்னம்பிக்கையைத் தர, மூடநம்பிக்கை அகற்ற, சமத்துவத்தை அனைவருக்கும் பெற, நாம் எல்லோரும் ஓர் மக்கள் என்று சொல்லுவது மட்டுமல்லாமல், ‘யாவரும் கேளீர்’ என்ற தத்துவமும், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தத்துவமும் உலகம் எங்கும் இருக்க வேண்டும். எங்கு அதற்கு ஆபத்து ஏற்பட்டாலும், பெரியாருடைய தத்துவம் என்பது இருக்கிறதே, அது நாட்டுக்கு நாடு வேறுபட்டிருந்தாலும், உரிமைப் போர், உரிமை முழக்கம், உறவும், உரிமையும் என்றும் இணைந்தவை!
வாழ்க, வளர்க!
இவ்வளவு சிறப்பான மாநாட்டை, வெற்றிகரமாக நடத்தி, பேராளர்கள் மற்றவர்கள் கலந்து கொண்டு, எல்லா வகையிலும் பாராட்டத் தகுந்த அளவிற்கு நடத்திக் காட்டி இருக்கக்கூடிய உங்களுக்குப் பாராட்டுகள்!
அரிகத்தோ கோசாய்மாஸ்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
‘‘பெரியார் உலகமயம், உலகம் பெரியார் மயம்! என்பது பெரியாருக்காக அல்ல, நமக்காக!
–இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜப்பான் மாநாட்டில் காணொலிமூலம் உரையாற்றினார்.
