சென்னை, அக்.12- அய்.அய்.டி நிகழ்ச்சியில் நேற்று (11.10.2026) பார்வையாளர்கள் பகுதியில் 3 பிரிவினர் தனித் தனியாக செயல்பட்டனர். ஒரு பகுதியில் த.வெ.க.வினர் அமர்ந்து விஜய் பெயரை சொல்லும் போது, விஜய் மேடையில் பேசும் போது த.வெ.க., த.வெ.க. என்றும் கத்தினர். மேலும் அதோடு விடவில்லை. விழாவுக்கு வருபவர்கள் துண்டு வெளியீடுகள், பதாகைகள் கொண்டு வர அனுமதியில்லை. எனவே த.வெ.க.வினர் இந்த விழாவுக்கான அழைப்பிதழ்களையே பதாகைகளாக மாற்றினர். அதில் விஜய்- அய் லவ் யூ, வருங்காலப் பிரதமர் விஜய், தளபதியின் தமிழ்நாடு என்ற வாசகத்தை எழுதி தூக்கி பிடித்து முழக்கம் எழுப்பியபடி இருந்தனர். மறுபுறம் பா.ஜனதாவினர், பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லும்போதும், மோடி பேசும் போதும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்றும், மோடி-மோடி என்றும் கூச்சலிட்டனர். அதே போல அய்.அய்.டி. மாணவர்கள் அய்.அய்.டி இயக்குநர் காமக்கோடி பெயரை சொன்னதும் பலமாகக் கைத்தட்டி கத்தினர்.
பிரதமர் திறந்து வைத்த திட்டங்களுக்கான கல்வெட்டில் ஹிந்தி எழுத்துக்கள்
தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சியிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும் என்று த.வெ.க. அரசு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் நேற்று பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட சென்னை அய்.அய்.டி. நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு வழிகாட்டுதன்படி முதலில் பாட வேண்டிய தேசிய பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படவில்லை. அதே போல் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களுக்கான டிஜிட்டல் கல்வெட்டில் வாசகங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 3 மொழிகளில் இருந்தன.
