2026-ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள தமிழர், உலகப் புகழ் பெற்ற வழக்குரைஞர் நவநீதம் (பிள்ளை) அம்மையாருக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் மதுரைப் பகுதியிலிருந்து கரும்புக் காடுகளில் பணியாற்றுவதற்காகத் தென் ஆப்பிரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட குடும்பத்தின் வாரிசு! தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்து படித்து, வழக்குரைஞராகி, உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுத்து, மனித நேயத்துடன் வாதாடி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,
அய்.நா.வின் மனித உரிமைகளுக்கான முதன்மை ஆணையராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். தென்னாப்பிரிக்கா, ருவாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்குக் குரல் கொடுத்தவர்.
ஈழத் தமிழர் இன அழிப்புக்கு எதிரான குரலை உலக அரங்கில் சேர்த்தவர். நோபல் பரிசு பெறும் முதல் தமிழர் – திராவிடர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்று, தந்தை பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணாக, உலக அமைதிக்காக, அரும்பணியாற்றியுள்ள சான்றோராக நம்மையும் பெருமைப்படுத்தியிருப்பவர் பெரு மதிப்பிற்குரிய நவநீதம் அம்மையார் அவர்கள் ஆவார்கள்.
உலகத் தமிழினமே பெருமை அடைகிறது! வாழ்த்துகள், வாழ்த்துகள் என மனமார வாழ்த்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
