மதுரை: ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

11 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, செப்.14   அரசியல் பேச ஆயிரம் கட்சிகள் உண்டு; உரிமைகளை எடுத்துச் சொல்ல நாங்கள் மட்டும்தான் உண்டு  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

மதுரையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு!

்கடந்த 21.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, மதுரை மாநகர் – புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு’’ மதுரை ஓபுளா படித்துறை அருகில் நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகளான கு.துரைராஜ், பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், வழக்குரைஞர்கள் சி.மகேந்திரன், மு.சித்தார்த்தன் ஆகியோர் நினைவாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பிராமணன், சத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு” பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்” என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

‘‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே! சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை…”

எவ்வளவு அழகா சொல்கிறார்; அந்த மனுஸ்மிருதிதான் இன்றைக்கு நம்மை இந்தப் பாடுபடுத்துகிறது. நம்முடைய மக்களை எல்லாம் பார்த்துத் ‘‘தொடாதே, தள்ளி நில், படிக்காதே, உத்தியோகத்திற்குப் போகாதே!’’ என்கிறது. அத்தனைக்கும் இதுதான் வேர்; இதுதான் நோய்க் கிருமியினுடைய அடித்தளம்.

நீதிமன்றங்களிலே இந்து லாவில் இதுதான் இன்னமும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது.

யாருக்காகப் பெரியார் பாடுபட்டார்?

பெரியாருடைய பணி ஏன் இன்னும் தேவைப்படு கிறது? ஏன் திராவிடர் கழகம் தேவைப்படுகிறது? எங்களுக்கு என்ன பதவிக்குப் போக வேண்டும் என்று ஆசையா? ஒரு பஞ்சாயத்து போர்டு தேர்தலிலாவது நாங்கள் நிற்போமா? யாருக்காகப் பாடுபடுகிறோம்? யாருக்காகப் பெரியார் பாடுபட்டார்? யாருக்காக அவருடைய இயக்கம் பாடுபடுகிறது? ஏன் இந்த இயக்கம் தொடர்கிறது? எத்தனை தடைகள், எத்தனை சங்கடங்கள்?

நீட் தேர்வை எதிர்த்து இரு சக்கர வாகனப் பிரச்சார பேரணிக்கு அனுமதி மறுத்தார்கள்; நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகுதான், நாளைக்கு திருமங்கலத்தில் இருந்தும்கூடத் தொடங்குகிறோம். நீட் தேர்வின் கொடுமைகளை மக்க ளுக்கு விளக்கிச் சொல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் நம்முடைய தோழர்கள் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள். யாருக்காக, எங்களுடைய பிள்ளைகளுக்காகவா? இல்லை, நண்பர்களே உங்கள் சந்ததிக்காக, எங்களை யார் எதிர்க்கிறார்களோ, அதே பிஜேபி, அதே ஆர்எஸ்எஸ், அதே மற்ற நண்பர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் உழைக்கிறோம். நாங்கள் பாடுபடுகிறோம். உங்களுக்காக, இன்னும் உங்கள் கிராமப்புற மொழியில் சொல்லவேண்டுமானால், ‘‘உங்களுக்காக நாங்கள் மாரடித்துக் கொள்கிறோம்.’’

சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்?

காலங்காலமாக எங்களை அடிமையாக்கி, எங்கள் மக்களை, எங்கள் பெண்களை எல்லாம் தாசிகளாக ஆக்கி, தாசி புத்திரர்கள் என்ற பொருள் வைத்து, சூத்திரன் என்றால், அது என்ன பாரத ரத்னா பட்டமா?

சூத்திரன் என்றால், என்ன அர்த்தம் என்பதை இந்த மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள், பகிரங்கமாக. பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று. தோழர்களே, இந்த வார்த்தையை யாராவது ஒரு மனிதனுக்குச் சொன்னால், அவன் எவ்வளவு ஆத்திரப்படுவான்? ஆனால், மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதற்காக ஆத்திரப்பட்ட ஒரே தலைவர், நூறு ஆண்டு காலம் உழைத்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான். அவருடைய கடைசி கூட்டத்தில், வலி தாங்க முடியாமல் பேசுகிறார், தியாகராய நகரில். சிறுநீர்,  இயற்கை வழி யிலே போகவில்லை. அதற்காக மருத்துவமனைக்குச் சென்று, 95 வயதிலே மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, வயிற்றில் துளை போட்டு, ரப்பர் குழாயை இணைத்து, அதை ஒரு பாட்டிலில் வைத்து, சிறுநீர்  போய்க்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தலைவர், அவருக்காகவா பாடுபட்டார்? உங்க ளுக்காக, சமுதாயத்துக்காக. அவர் தியாகராய நகரிலே பேசும்போது, ‘‘ வலியைத் தாங்கமுடியாமல் ‘‘அய்யோ, அம்மா’’ என்று அலறுகிறார். அய்யாவின் இறுதி உரை அது. ‘‘அய்யா, உரையை நிறுத்துங்கள் போதும்’’ என்று சொல்கிறோம். அவர் உரையை நிறுத்தவில்லை. ‘‘நான் சாகப் போகிறவன்தான்; ஆனால், எனக்கு ஒரே ஒரு கவலைதான். மற்ற என் கொள்கைகள் எல்லாம் வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், உங்களை எல்லாம் ‘சூத்திரன்’ என்று அழைக்கக்கூடிய அந்தப் பட்டத்தை மட்டும் விட்டுவிட்டு செல்கிறேனே?’’ என்றார். அதைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினார்கள். அதை மாற்றுவதற்குதான், களத்திலே நின்றார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
எந்த சாமியும் ஓடிப் போகவில்லை

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது ஜாதி ஒழிப்புக்காக. அதை, அவர் காலத்தில் செய்யவில்லை என்றாலும், அவருடைய தொண்டர்கள் நாங்கள் நிறைவேற்றினோம். கலைஞர் சட்டம் கொண்டு வந்ததார். 50 ஆண்டு கால சட்டப் போராட்டம் நடத்தி, ‘திராவிட மாடல்’ ஆட்சி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சட்டம் கொண்டு வந்தது. அதே உச்சநீதிமன்றம் ஏற்றது. இன்றைக்கும் அதை வேண்டுமென்றே திட்டம் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், உள்ளே போய்விட்டார்கள்; எந்த சாமியும் ஓடிப் போகவில்லை.

மதுரையில்தான் முதலில் ஆரம்பித்தார்கள். ஆனால், பெரிய பெரிய கோயிலுக்கு அர்ச்சகர் படிப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களை  அனுப்பாமல் இருக்கிறார்கள்; அதெல்லாம் நடைமுறைக்கு வர வேண்டும். ஆகவேதான், நம்முடைய இழிவைத் துடைப்பதற்காக இருக்கிற இயக்கம், இந்த இயக்கம். உங்களைப் படிக்க வைப்பதற்காக இருக்கிற இயக்கம். படித்தவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், பெண்கள் அடிமைகளாய் இருக்கக் கூடாது என்று சொல்லி, அந்தப் பெண்களை எல்லாம் உயர்த்தி இருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. சரி பகுதியாய் இருக்கின்ற எங்களுடைய பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று கேட்ட இயக்கம் இந்த இயக்கம். உங்களுடைய ஸநாதனம் என்ன செய்தது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்லி என்னுடைய உரையை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன்.

மொழியில் கூட பிரிவினை!

அருமைத் தாய்மார்களே, பெரியோர்களே! உங்க ளுக்குச் சொல்கிறேன்.  சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களை எங்கே வைத்திருக்கிறார்கள்? ஆரியர்கள், பெண்களை தங்களுடன்  அழைத்து  வரவில்லை. அதனால், இங்கே இருக்கிற பெண்கள் தான் வாழ்ந்தார்கள். ஆரியம்  –திராவிடம் என்கிறபோது, அய்யா சொன்னார், ‘‘நான் ஒன்றும் ரத்தப் பரிசோதனையை வைத்துச் சொல்லவில்லை. அவன் பண்பாட்டைத் திருப்பி விட்டான்’’ என்றார். நாமெல்லாம் தமிழ் செம்மொழி என்றால்,  அவர்கள் என்ன சொல்கிறார்கள்,  நீஷ பாஷையாம். அவர்களுடைய சமஸ்கிருதம்  தேவ பாஷையாம்! இதற்கு என்ன அர்த்தம்? மொழியில் கூட பிரிவினை.

 ‘‘வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்!’’

வெள்ளைக்காரன் நம்மை 200 ஆண்டுகளாக ஆண்டார்கள். அந்த 200 ஆண்டுகளாக ஆண்ட வெள்ளைக்காரன், நமக்கு அவனது ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுத்தான்; நாம் கற்றுக்கொண்டோம். நம்மைவிட அதிகமாகப் பார்ப்பனர்கள்தான் கற்றுக் கொண்டார்கள். அதனால், முதலில் வேலை வாய்ப்பு களைப் பெற்றார்கள். ஆனால், அவன் கூட நம்ம மொழிக்குப் பெருமை சேர்த்தானே தவிர, நம்முடைய மொழியை இழிவுபடுத்தவில்லை. ஆனால், இவன் லாபம் அடைந்து, இன்றும் நம்முடைய மொழியைப் பழித்து வருகின்றான். ‘‘வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்’’ என்று இரண்டு வரியில் எழுதினார் புரட்சிக்கவிஞர்.

‘‘வந்தவர் வஞ்சகர் செந்தமிழால் செழித்தார்;

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்;

நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்;

நாமுணர்ந்தோம்; அந்நாள் அவரஞ்சி விழித்தார்;

தமிழனே இது கேளாய்!’’

ஆனால், கேட்கவில்லையே! தமிழன் என்று சொல்லிக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு, பல பேர் கூலிக்கு அல்லவா போகிறர்கள்.

‘‘துறவிக்கும் மேலானவர்கள் என் தொண்டர்கள்’’ – தந்தை பெரியார்!

ஆகவேதான், எங்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல; நாங்கள் எந்தப் பதவிக்கும் போகாதவர்கள். இறந்தவர்க ளுக்குக் கருமாதி பத்திரிகை அடிக்கும்போது கூட நம்ம ஊரில், மதத்தை அடிப்படையாகக் கொண்டு அடிப்பார்கள். அது என்னவென்றால், இறந்து போனவர் விபூதி பூசுகிறவராக இருந்தால், ‘சிவலோக பதவி’ அடைந்ததை முன்னிட்டு என்றும், நாமம் போடுகிறவராக இருந்தால், ‘வைகுண்ட பதவி’ அடைந்ததை முன்னிட்டு என்றும் அச்சடிப்பார்கள். ஆனால்,  எந்தப் பதவியும் எங்களுக்குக் கிடையாது. ‘‘மோட்சம், நரகம் என்பதை நம்பாதவர்கள் என்னுடைய தொண்டர்கள்; துறவிக்கும் மேலானவர்கள்’’ என்று பெரியார் சொன்னார்.

படிக்கட்டு ஜாதிமுறை!

எனவேதான், இந்தப் பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பிராமணன் தலையில் பிறந்தவன், இடையில் சத்திரியன், தொடையில் வைசியன், காலில் சூத்திரன், அதற்கும் கீழே பஞ்சமன். எல்லாவற்றுக்கும் கீழே படிக்கட்டு ஜாதிமுறை – கடைசியாகப் பெண்கள்.  சூத்திர, பஞ்சம ஆணுக்கும் கீழான அடிமைகள். எட்டு அடிமைகள். பெண்கள் எல்லாம் ஒரு அடிமை இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்தப் பெண்களுக்குப் படிப்பு கொடு, அந்தப் பெண்களை உத்தியோகத்துச் செல்லுங்கள் என்று சொன்ன இயக்கம் திராவிட இயக்கம். காவல் துறையிலே பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கெல்லாம் வாய்ப்பை உண்டாக்கிக் கொடுக்கக்கூடிய ஓர் இயக்கம் இருக்கிறதே அந்த இயக்கம்தான், இந்த இயக்கம். விருதுநகரில் நடைபெற்ற மாநாட்டில்தான் தீர்மானம் போட்டார்கள். அதற்கு முன்புவரை பெண்கள் உத்தியோகத்துக்குப் போகவில்லை; காவல்துறை, இராணுவத் துறைகளிலும் பெண்கள் கிடையாது.

ஒரே ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறோம், ஸநாதனம், ஸநாதனம் என்று சொல்லும்போது, எங்க ளுக்கு ஒன்றும் தனிப்பட்ட முறையில் யாரோடும் சண்டைக்குப் போக வேண்டும் என்கிற ஆசை இல்லை.

தந்தை பெரியாருடைய பணி எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள ஒரு செய்தியைப் பாருங்கள்.

1929 ஆம் ஆண்டிேலயே பெண்களுக்குச் சொத்துரிமை தீர்மானம் போட்டவர் தந்தை பெரியார்!

ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளைக்குச் சொத்தில் உரிமை இருக்கிறது. அதே மாதிரிப் பெண்ணாகப் பிறந்தால், அந்தப் பெண்ணுக்குச் சொத்தில் உரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வருகிறார் ஒன்றிய சட்ட அமைச்சர் அம்பேத்கர். ஆனால்,  அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் 1929 ஆம் ஆண்டிேலயே இதுகுறித்துத் தீர்மானம் போட்டார். ஆணுக்கும் – பெண்ணுக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். இந்தக் கருத்து பிரதிபலிப்பு, அம்பேத்கருக்கும் – பெரியாருக்கும் ஒரே கருத்துதான் ஆகவே, அந்தக் கருத்தை செயல்படுத்துகிறார்கள்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தில் அக்னிேஹாத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் எழுதி யிருப்பதைப் பாருங்கள்.

‘‘டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.

அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்ப கோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. ‘உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ -இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம்… காஞ்சி புரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றைப் பார்வையிட எசையனூருக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர்.

என்ன ஸ்வாமி? என்றேன் நான். அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர், ‘லோகமே அழியப்போறது ஓய்… அழியப் போறது…’ என படபடப்பாகப் பேசினார்.

“இதப்பார்த்தீரா… ஸ்திரீகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா… அபாண்டமா அபச்சா ரமா போயிடும்’’ – என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.

நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான் ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்.’

இந்தப் பதிலைக் கேட்டதும்… “அசட்டுத்தனமாகப் பேசாதீர். இந்த சட்டம் வந்தா ஸ்திரீ தர்மமே பாழா யிடும். ஸ்தீரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

இப்படிப்பட்ட ஸ்த்ரீ தர்மத்தை நேரு நொறுக்கிட்டார். நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்கறதுக்காக அந்த ‘பில்’லை எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும். அதுக்கு ஸ்த்ரீகளை நிறைய திரட்டணும்…’’ என்றெல்லாம் அவசர ஆணைகளைப் பிறப்பித்தார் மகாபெரியவர்.’’

செங்கல்பட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர்!

இதுதான் தோழர்களே! அதை மீறி அம்பேத்கரால் அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அதைச் செய்த பெருமை யாருக்குத் தெரியுமா? கலைஞர் ஒத்துழைப்பினால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒத்துழைப்பினால், ஒன்றியத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்தது. அவர்களுக்குக் கலைஞர் ஆதரவு கொடுத்தார். செங்கல்பட்டுத் தீர்மா னத்தை நிறைவேற்றினார். அதற்கு முன்னால், கலைஞர் இங்கே முதலமைச்சராக இருந்தபோது, நம்முடைய மாநிலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்ற சட்டத்தை இங்கே நிறைவேற்றிக் காட்டினார்.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறோம்? நமக்குப் படிக்க உரிமை இல்லை, உத்தியோகம் பார்க்க உரி மையில்லை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்று சொன்னால் ஏற்க முடியுமா? எனவேதான், இந்த மாநாடு வெற்றி மாநாடு என்று சொன்னால், இதுபோன்ற ஆக்கப் பணிகள் நிறைய  இருக்கின்றன. இன்னமும் நீட் தேர்வு என்ற கொடுவாள் தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பொருளாதார அடிப்படை என்று சொல்லி, மிக முக்கியமாக 2,500 ரூபாய் ஒரு நாளைக்கு வாங்குகிறவனை ஏழை என்கிறார்கள். காரணம் உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்கு 10 சதவீதம் என்று சொல்லி,  நம்முடைய இடத்தைக் குறைத்து, அங்கே கொடுத்திருக்கிறார்கள்.

அரசியல் பேச ஆயிரம் கட்சிகள் உண்டு;   உரிமைகளை எடுத்துச் சொல்ல
நாங்கள் மட்டும்தான் உண்டு!

ஆகவே, இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் சொல்வதற்கு எங்களைத் தவிர, உங்களுக்கு நாதி இல்லை. அரசியல் பேச ஆயிரம் கட்சிகள் உண்டு; ஆனால், இதுபோன்ற உரிமைகளை எடுத்துச் சொல்ல நாங்கள் மட்டும்தான் உண்டு. காரணம், எங்களுக்குத் தான்  அறிவு இருக்கிறது என்று நான் சொல்லமாட்டேன். எல்லாருக்கும் தெரியும். ஆனால், எங்களுக்கு இந்தப் பணியைத் தவிர, வேறு பணி எதுவும் கிடையாது. உரிமைகளுக்காக, உங்களுக்காகப் பாடுபடுகிறோம்.

எனவே, எதிர்நீச்சலில் பெரியார் வென்றார்! எதிர்நீச்சலில் பெரியார் தொண்டர்களும் வெல்வோம், வெல்வோம்!! என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கும், சிறப்பாக ஒத்துழைத்த பத்திரிக்கையாளர்கள், அதே போல காவல் துறையினர், எல்லோருக்கும் நன்றி செலுத்தி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

சிறப்பாக மாநாட்டை நடத்திய மதுரை மாநகர தோழர்களுக்கும், ஒத்துழைத்தத் தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *