‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’’

மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்  பயின்று வந்த தலித் மாணவர் சாஹில் ரவீந்தர வகோடே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் ஜாதிப் பாகுபாடு குறித்து கடுமையான விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது.

மும்பை அய்.அய்.டியில் இரண்டாம் ஆண்டு எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பயின்று வந்த சாஹில், தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஏ.அய். செயலியைப் பயன்படுத்தி விளக்கம் கேட்டதற்காக, அவர் மீது “மோசடி” குற்றம் சுமத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சில சிக்கலான கேள்விகளுக்கு சந்தேகங்களைக் கேட்கலாம் என்று அய்.அய்.டி. நிறுவனமே அனுமதி அளித்துள்ளது இதன் அடிப்படையில் அவர் சந்தேகத்தை கேட்டிருந்தார்.

பிற மாணவர்கள் இந்த முறையைப் பின்பற்றியபோது கண்டுகொள்ளாத நிர்வாகம், சாஹில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாஹிலின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சூர்யநாராயணா டுல்லா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனது ‘நிர்வாக விவகாரங்கள் தலைமையாளர்’ பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, மும்பை அய்.அய்.டி. ஆசிரியர் மன்றம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜாதிப் பாகுபாட்டால் ஒரு இளம் திறமையாளரின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சக மாணவர்கள் வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோகித் வேமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததே சாஹில் ரவீந்தர வகோடேவின் உயிரிழப்புக்குக் காரணம் என சமூக ஆர்வலர்களும், மாணவர் அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றனர். தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த லட்சணத்தில் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ெஹாசபலே மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள பேச்சைப் படித்தால் விலா நோக சிரிக்கத்தான் வேண்டியுள்ளது.

‘‘மனிதர்கள் இடையே எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது. ஜாதி ரீதியிலான பாகுபாடு, தீண்டாமை ஆகியவை ஹிந்து சமூகத்தின் மீது படிந்துள்ள கறை. எனவே இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும். சட்டத்தால் மட்டும் அது முடியாது, தனிநபர்களின் நடத்தையிலும் மாற்றம் தேவை.

மக்கள் தங்கள் நடத்தையிலும், வீடுகளுக்கு உள்ளிருந்தும் மாற்றத்தை துவங்க வேண்டும். இராமாயணத்தில் வேடுவப் பெண் சபரி வழங்கிய கனிகளை ராமன் ஏற்றுக்கொண்டார். அப்படியிருக்க ஜாதி ரீதியில் மக்கள் எப்படி பாகுபாடு காட்டமுடியும்? 5,000 ஆண்டு பழமையான இந்திய நாகரிகம் நெருக்கடிகளையும், மோதல்களையும் எதிர்கொண்ட பிறகு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

இந்தியாவின் எழுச்சி மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாக கொள்ளாமல் மனிதகுலத்திற்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றம் பொருளாதார அடிப்படையில் அளவிடப்படாமல், மனித குலத்திற்கு அளிக்கும் பங்களிப்பின் மூலம் அளவிட வேண்டும்.’’ என்று பேசியுள்ளார்.

‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் ‘ஆரிய மாயை’ என்னும் நூலில் குறிப்பிடுவார். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் தனது ஞான கங்கை (Bunch of Thoughts) என்ற நூலில் வருணாசிரமத்தையும், ஜாதியையும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்து எழுதுகிறார்.

‘‘வர்ண வியா வஸ்தா’’ என்பது இழிவானதல்ல; அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத் தாழ்வெல்லாம் கிடையாது’’

‘பிராமணர்கள் தங்கள் அறிவு ஆற்றலால் உயர்ந்தவர்கள், க்ஷத்திரியர்கள் எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவர்கள்; வாணிபம், விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் சமூகத்துக்குச் சேவை செய்பவர்கள்’’ என்று நால்வருணத்துக்கும் வக்காலத்துப் போட்டு எழுதுகிறார் ஆர்.எஸ்.எஸ். குருநாதர்.

விவசாயத்தைப் பாவத் தொழில் என்கிறது. இவர்களின் மனுதர்மம் (அத்தியாயம் 10 – சுலோகம் 84).

‘பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்’’ என்று ‘பகவான் கிருஷ்ணன்’ (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) கீதை கூறுகிறதே!

இதனைக் கை கழுவுகிறாரா ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர்?

இன்னும் பூணூல் அணிந்து திரிகிறார்களே  – இதன் பொருள் என்ன? ஆண்டுக்கொரு முறை ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரால் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்களே பார்ப்பனர்கள் – இதன் பொருள் என்ன?

இராமன் ஏதோ ஜாதி ஒழிப்பு வீராதி வீரன் என்று சிலாகிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர். அதே இராமன், தவமிருந்தான் சூத்திரன் சம்பூகன் என்று கூறித் தலையை வெட்டியது எதைக் காட்டுகிறது?

மும்பை அய்.அய்.டி.யில் படித்த தலித் மாணவன் வகுப்பில் ஏ.அய்.யின் செயல்பாடு குறித்து விளக்கம் கேட்டதற்காக அவமதிக்கப்பட்டது. எதைக் காட்டுகிறது? அவமானத்தால் அந்தமாணவர் தற்கொலை செய்த கொண்டுள்ளாரே  ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் அளிக்கும் விளக்கம் என்ன?

‘ஆரியம் ஒரு நடமாடும் நாசம்

அதனிடம் வேண்டாமே பாசம்!’

திராவிட இயக்கத்தின்மீது விழுந்து குதறும் பிராணிகள் திருந்தப் போவதில்லை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *