(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
3.6.2026 அன்றைய ‘துக்ளக்’ இதழுக்கானப் பதிலடிகள்
கேள்வி: மதம் பிரிவதற்கும், கட்சி பிரிவதற்கும் என்ன வேறுபாடு?
பதில்: மதம் பிரிந்தால், எது உண்மையான மதம் என்று ஷியா Vs சன்னி இடையே இருப்பது போல் – போர் நடக்கும். கட்சி பிரிந்தால், எது உண்மையான கட்சி என்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்.

நமது பதிலடி: முஸ்லீம் மதத்தில் உள்ள ஷியா Vs சன்னி பற்றி கேலி செய்யும் ‘துக்ளக்’ ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவின் போது வைணவத்தின் தென்கலைப் பிரிவினர், கோயிலில் நாலாயிர பிரபந்தம் பாடுவதற்கு முன் மணவாள மாமுனிகளைப் போற்றும் “சிறீ சைலேச தயாபாத்ரம்” என்ற மந்திரத்தைக் கூறி பிரபந்தத்தைத் தொடங்க வேண்டும் என்கிறார்கள்.
வடகலைப் பிரிவினரோ வேதாந்த தேசிகரைப் போற்றும் “சிறீ ராமானுஜ தயாபாத்ரம்” என்ற மந்திரத்தையோ அல்லது “தேசிக பிரபந்தத்தையோ” பாட வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
வரதராசப் பெருமாள் ஊர்வலத்தில் வடகலைப் பிரிவினரும், தென்கலைப் பிரிவினரும் ஒருவருக் கொருவர் நடத்துகின்ற இந்த வாய்ப் பேசிச் சண்டைகள் – கட்டிப் பிடித்து அடிதடி சண்டைகள் வீதிகளில் சந்தி சிரிக்கும் அளவுக்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறதே!
கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை லண்டன் பிரிவு கவுன்சில் வரையிலும் சென்றதுண்டு!
இந்த இலட்சணத்தில் ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாள் முஸ்லீம் மதத்திலே இருக்கும் பிரிவுகள் பற்றி சிலாகிக்கிறார்.
‘வைத்தியரே, முதலில் உங்கள் நோயைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்!’ என்ற பழமொழி தான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
. . . . .
கேள்வி: திரைப்படத்தின் அதீத மோகத்தை எப்படி மக்களிடமிருந்து அகற்றுவது?
பதில்: அண்ணாமலை போன்ற திறமையான தலைவர்களை பா.ஜ.க. முன்னிறுத்தும்போது, சினிமா மோகம் அகலும்.
நமது பதிலடி: பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. அண்ணாமலைகளுக்குப் பின்னால், அரசியல் புரோக்கர் குருமூர்த்திகள் இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?
. . . . .
கேள்வி: இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஹிந்து மதத்திற்கு எதிராகப் பேசுவதுதான், மதச் சார்பற்ற நிலை என்றாகி விட்டதே?
பதில்: அது மதச்சார்பற்ற நிலை அல்ல, ஹிந்து எதிர்ப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பும் கூட.
நமது பதிலடி: பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான் என்றும் பிர்மா ஆண் கடவுள் என்பது நினைவிருக்கட்டும்), பிர்மாவின் தோளில் பிறந்தவன் சத்திரியன் என்றும், பிர்மாவின் இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தவன் என்றும், பிர்மாவின் பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்றும் (100க்கு 97 விழுக்காடுள்ள பார்ப்பனரல்லாதார்), அந்த சூத்திரன் ஏழு வகைப் படுவர் என்றும், அதில் ஒன்று விபச்சாரி மகன் என்றும் (மனு தர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415) என்று சொல்லுகிற ஹிந்து மதத்தை எதிர்க்காமல், வெறுக்காமல் இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று இந்த 2026லும் குருமூர்த்திக் கூட்டம் எதிர்பார்க்கிறது என்றால், இந்த ஆணவத்தை அடக்க ‘சூத்திர மக்கள்’ பொங்கி எழமாட்டார்கள் என்ற நினைப்பு தான் போலும்!
. . . . .
கேள்வி: வாழ்க்கை என்பது மற்றவருக்குச் சேவை செய் வதற்குத்தானா?
பதில்: வாழ்க்கையில் நாம் நிம்மதியாக இருக்க யாருக்காவது சேவை செய்ய வேண்டும் என்கிறார் காஞ்சிப் பெரியவர்.
நமது பதிலடி: மற்றவருக்குச் சேவை என்று காஞ்சிப் பெரியவர் சொல்லும் அந்த மற்றவர்கள் யார்?
ரிட்டயர்டு ஆன பிராமணாள் பிராமணர்களுக்கு ட்யூஷன் நடத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்தாரே – காஞ்சிப் பெரியவாள் அந்த சேவையைக் கூறுகிறதா ‘துக்ளக்’?
. . . . .
கேள்வி: பள்ளிப் பாடத்தில் ஒழுக்கத்திற்கு முக்கியம் தருவது குறைந்து கொண்டே வந்ததற்குக் காரணம் என்ன?
பதில்: 60 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இளம் உள்ளங்களுக்கு காலகாலமாக நல்வழி காட்டிய அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற நன்னூல்களைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கியதுதான்.
நமது பதிலடி: பிஜேபி ஆளும் மாநிலங்களில் கீதை சுலோகங்கள் பாடப் புத்தகத்தில் சேர்க்கப் பட்டுள்ளதே! கீதை கூறும் ஒழுக்கம் என்ன?
காந்தியார் படுகொலை வழக்கில் நீதிமன்றத்தில் கொலைகாரன் நாதுராம் கோட்சே, காந்தியார் படுகொலைக்குக் கீதையிலிருந்து சுலோகங்களை எடுத்துக் காட்டி, தர்மத்தைக் கட்டிக் காக்க அதர்மத்தையும் செய்யலாம் என்றானே, அந்தக் கீதையைத்தான் பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்துச் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ?
‘‘பார்ப்போடு பழகேல்” என்று அவ்வையாரின் ‘ஆத்திச் சூடி’ கூறுகிறதே, அதனை ஏற்றுக் கொள்கிறாரா குருமூர்த்தி அய்யர்வாள்? மேலும் ‘நூல் எனிலோ கோல் சாயும்’ என்று சொன்னதும் அதே அவ்வையார்தான்.
இதன்படி “பூணூலணியும் பார்ப்பானின் அறிவுரையைக் கேட்டால் அரசனின் செங்கோல் சாய்ந்துவிடும்” என்பதுதான். ‘குருமூர்த்தி’கள் பதில் சொல்வார்களா?
. . . . .
கேள்வி: திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கொண்டு வருவதே துக்ளக்கின் நோக்கமாக இருந்துள்ளது. அது நிறைவடைந்துள்ளதால், துக்ளக்கிற்கு பணிஓய்வு காலம் நெருங்கி விட்டதா?
பதில்: சனாதன தர்மத்தைப் போற்றும் தமிழையும், தமிழ் நூல்களையும் பழித்த ஈ.வெ.ரா.வைப் போற்றும் த.வெ.க.வும் திராவிடம் ஒளிந்திருக்கும் கட்சிதான்.
நமது பதிலடி: ஸநாதன தர்மத்தைத் தமிழ்ப் போற்றுகிறதா? புதுக்கரடி விடுகிறது ‘துக்ளக்’. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஸநாதனம் என்பதற்குப் பொருள் வர்ணாசிரமம் என்று பொருள் சொல்லியிருப்பவர் குருமூர்த்தி அய்யர்வாள். தன் படுக்கையறையில் தலைமாட்டில் மாட்டி வைத்திருப்பதும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிதான் (பார்க்க: ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம்)
