(2.9.2026 ‘துக்ளக்’ ஏட்டுக்குப் பதிலடி)
கேள்வி 1: எதிலும் விருப்பு – வெறுப்பு இன்றி உங்களால் எப்படி இருக்க முடிகிறது?
பதில்: எதிலும் பற்றுக் குறைவான மனநிலை எனக்கு வர வர, விருப்பு-வெறுப்பு தானாகக் குறைவதை நான் அனுபவப்பட்டேன்.
பதிலடி: படுக்கை அறைத் தலைமாட்டில் கூட ‘மஹான்’ சங்கராச்சாரியாரின் படத்தை மாட்டி உள்ளதாக எழுதிய திருவாளர் குருமூர்த்தியாருக்கு ‘மஹான்‘ மீது வைத்த விருப்பமும் குறைந்து விட்டதோ!
– – – – –
கேள்வி 2: ஜோசப் விஜய்யின் ஆட்சிக்கும், கருணாநிதி, ஸ்டாலின் காலத்து ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: ஸ்டாலினின், திராவிடக் கட்சி தமிழைத் திருடி அரசியல் செய்தது. விஜய்யின் தமிழ்க் கட்சி, தமிழ்த் துகிலுரிந்து அரசியல் செய்கிறது.
பதிலடி: தமிழ் என்றாலே நீஷப் பாஷை என்று கூறும் கூட்டத்திடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்.
– – – – –
கேள்வி 3: ‘திராவிடம்’ என்பது இனம், மொழி – இவ்விரண்டில் எதைச் சார்ந்தது?
பதில்: மொழி கலந்த நிலமாக இருந்த திராவிடத்தை, இனமாக மாற்றியது அரசியல்.
பதிலடி: நாடே இல்லாத நாடோடிக் கூட்டமான ஆரியப் பார்ப்பனர்களுக்கு மொழியும், இனமும் உள்ளவர்களைக் கண்டால் கசக்கத் தானே செய்யும்!
– – – – –
கேள்வி 4: வீட்டில் இருந்தபடியே நீட் தேர்வுக்குப் படித்து, அதில் 599 மதிப்பெண் பெற்ற மாணவன் தினேஷின் வெற்றி சொல்லும் பாடம் என்ன?
பதில்:படிக்க விருப்பம் இல்லாதவர்கள்தான், நீட்டை எதிர்க்கிறார்கள் என்பதே தினேஷ் கூறும் பாடம்.

பதிலடி: +2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற கிராமத்துப் பள்ளியில் படித்த – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த – முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் காலடி பதித்த குழுமூர் (அரியலூர்) அனிதா நீட் தேர்வில் வெறும் 86 மதிப்பெண் பெற்றதை ஒப்பிட்டுப் பார்த்தால் ‘நீட்’டின் வஞ்சகம் புரியுமே!
– – – – –
கேள்வி 5: நீட் தேர்வு எதிர்ப்பிற்கு மக்கள் ஆதரவு இல்லை என்றாலும், அரசியல்வாதிகள் அதைத் தொடர்ந்து வலியுறுத்தக் காரணம் என்ன?
பதில்: நீட் எதிர்ப்பு என்பது செகுலரிஸம் போல், அதற்கு ஆதரவு இல்லை என்றாலும் அதை விட முடியாது.
பதிலடி: ஹிந்து ராஷ்டிர முகமூடி அணிந்த பூணூல் பூனைக்குட்டி செகுலரிஸத்தின் மீது (மதச் சார்பின்மையின் மீது) எவ்வளவுக் காழ்ப்புக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் ‘நீட்‘ விஷயத்திலும் அவாளின் அந்தரங்கம் என்ன என்பது விளங்கிவிடுமே!
– – – – –
கேள்வி 6: ‘பட்ஜெட்டுடன் திருப்பதி சென்றால் பாவங்கள் போகுமா?’ என்று த.வெ.க. அரசைப் பார்த்துக் கேட்கிறாரே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்?
பதில்: திருப்பதி சென்றால் பாவங்கள் போகுமா என்று கேட்ட அவர், பட்ஜெட்டுக்கு (கிறிஸ்தவ) ஜெபமாலை அணிவித்தால் பாவங்கள் போகுமா என்று கேட்க வில்லை, பார்த்தீர்களா?
பதிலடி: எந்த மதக் கோயிலுக்குச் சென்றாலும் பாவம் போகாது என்பதை இப்போதாவது ஒப்புக் கொண்டுள்ளதே ‘துக்ளக்’!

– – – – –
கேள்வி 7: நீட், பி.எம்.சிறீ. அந்நிய நாட்டு நிதிக் கட்டுப்பாடு, வந்தே மாதரம், தொகுதி மறு சீரமைப்பு, புதிய கல்விக் கொள்கை என்று மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் த.வெ.க. என்ன சாதிக்க நினைக்கிறது? இதற்கும், தி.மு.க.வுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: த. வெ.க. தொடங்கியபோதே தி.மு.க.வுக்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அட்டைப்படம் போட்டதே (16.7.2025) துக்ளக்.
(கீழே பாருங்கள்)
பதிலடி: தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தங்கள் கொள்கைத் தலைவர்கள் (செயலில் எப்படியோ) என்று சொன்னபிறகு த.வெ.க.வையும் தி.மு.க.வுடன் இணைத்துத் தானே அக்கிரகாரம் பார்க்கும்.
– – – – –
கேள்வி 8: தொண்டுக்கும். தியாகத்துக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: தொண்டு என்பது கடமை. கடமையிலும் மேலானது தியாகம், துறவறம்தான்-தியாகம் என்கிறது -ஆன்மீகம். பொதுவாக தாய்நாட்டுக்குச் செய்யும் தொண்டு தியாகமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ். தியாகமாகக் கருதுவதில்லை, அதுவும் தொண்டு என்றே கூறுகிறது.
பதிலடி: ஆமாம். காந்தியார் படுகொலை, பச்சைத் தமிழர் காமராசரைப் படுகொலை செய்ய முயற்சி எல்லாம் அவாளைப் பொறுத்தவரை பிறப்பிலேயே சபதம் எடுத்துக் கொண்ட தொண்டுதானே!

– – – – –
கேள்வி 9: ஜனநாயகன் படத்தைப் பார்த்த சிறுமி, ‘குட் டச், பேட் டச்’ என்பதை உணர்ந்து, அவளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரைக் கைது செய்ய வைத்துள்ளார். இது போன்ற நல்ல விஷயங்களை அனைத்து சினிமாக்களிலும் கொண்டு வரலாம் அல்லவா?
பதில்: பெண்களைத் தொடுவதை “குட் டச்”, “பேட் டச்” என்று பிரிப்பதை விட “டச்” செய்வதே தவறு என்பதே சரி. வயதுப் பெண்களைத் தொட்டுப்பேசக் கூடாது என்பது, சாதாரண குடும்பங்கள் அனுசரிக்கும் கட்டுப்பாடு.

பதிலடி: பெண் எழுத்தாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்தாரே காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி – அந்த சங்கராச்சாரியாருக்கு வக்காலத்து போட்டு எழுதினாரே குருமூர்த்தி அய்யர், அது ‘குட்’ டச், ‘பேட்’ டச்சா?
(குறிப்பு: அந்தப் பெண் எழுத்தாளரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் தான் இந்த குருமூர்த்தி என்பது நினைவிலிருக்கட்டும்.)
– – – – –
கேள்வி 10: இந்தியாவில் வாழும் இஸ்லாமியர் களுக்கு உள்ள பாதுகாப்பு, வெளிநாட்டில் வாழும் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கிறதா?
பதில்:98% முஸ்லிம் நாடான பாகிஸ்தானை எடுத்துக் கொள்வோம். 2014-2026 வரையுள்ள 12 ஆண்டுகளில், பாகிஸ்தானில் பயங்கரவாதம் மற்ற வன்முறைகளில் 15,000 முதல் 20,000 முஸ்லிம்கள் பலியாகினர். அதே ஆண்டுகளில் நம் நாட்டில் (காஷ்மீர், நக்ஸல் பகுதிகள் தவிர) மற்ற இடங்களில் பயங்கரவாதம், வன்முறையில் பலியானவர்கள் 600 முதல் 800 என்கிறது AI. அதில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள்.. எங்கு முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அதிகம் என்று கூறுங்கள்?
பதிலடி: 450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கொண்டு வந்தது, 2015 செப்டம்பர் அன்று உத்தரப்பிரதேசம் தாத்ரி கிராமத்தில் முகம்மது அக்லாக் என்பவர் வீட்டில் குளிர் சாதனப் பெட்டியில் பசு மாட்டுக்கறி இருந்தது என்று உள்ளூர் கோயில் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து, கும்பலாகச் சென்றவர்கள் 52 வயதான முகம்மது அக்லாக்கை அடித்துக் கொன்றது எல்லாம் குருமூர்த்தி கும்பல்களுக்குச் சாதாரணமானதுதான்.
2018ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் குதிரை மேய்க்கச் சென்ற 8 வயது ஆசிஃபா பார்னா என்ற முஸ்லிம் சிறுமியைக் கடத்திச் சென்று கோயிலுக்குள் அடைத்து வைத்து, அச்சிறுமி பல நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக் கொல்லப்படவில்லையா?
விசாரணைக்குச் சென்ற காவல்துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் ‘நீங்களும் பிராமணர், குற்றம் சுமத்தப்பட்ட நாங்களும் பிராமணர்கள் – நமக்குள் ஏன் விவகாரம்? – கண்டு கொள்ளாதீர்கள்’ என்று கூற, அந்த அதிகாரியோ நான் அணிந்திருக்கும் காக்கிச் சடடைக்கான கடமையைச் செய்கிறேன் என்று சொன்ன செய்தி வந்ததெல்லாம் குருமூர்த்திகளுக்கு வசதியாக மறந்திருக்கும். நம்பித் தொலைக்க வேண்டியதுதான் – என்ன செய்வது?
