CJP போராட்டத்தில் Gen Zயினர் கொண்டாட்ட நடனமா?


பரவும் செய்தி
டெல்லியில் காக் ரோச் ஜனதா கட்சியினர், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து வாக்கு திருட்டிற்கு எதிராக ஜந்தர் மந்தர் மைதானத்தில் கூடி காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 முதல் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவிலும் அக்டோபர் 3ஆம் தேதி போராட்டம் நடந்தது.
அந்தப் போராட்டத்தில் மாணவர்கள் நடனமாடி கொண்டாடுவதாகவும், போராட்ட நோக்கமின்றி கூடி மகிழ்ந்திருக்கவே போராட்டம் நடத்துவதாக விமர்சனத்தோடு பதிவுகள் பரவி வருகின்றன.
X தளத்தில் dr_monika_singh என்பவரின் பதிவு ”ஜெனரல்-இசட் தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதம் மிகவும் தனித்துவமானது,
ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி போராடும் இளைஞர்களின் கொண்டாட்டத்தைப் பாருங்கள்
பாலிவுட் ட்விஸ்ட் இல்லாமல் மும்பையில் எப்படி போராட்டம் நடத்த முடியும்?
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று நடந்த சி.ஜே.பி போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் “கேரக்டர் தீலா ஹை” பாடலுக்கு நடனமாடி திளைத்த இந்த காட்சிப் பதிவு (வீடியோ)” என்ற பின்னொட்டுடன் பதிவிடப்பட்டுள்ளது.
இதே போன்ற கருத்தோடு பல காணொலிகள் கடந்த ஒரு வாரமாக பரவி வருகின்றன.
ஆய்வு
குறிப்பிட்ட காணொலியை, படங்களை வைத்து தேடும் முறையில்(reverse image search) தேடிய போது இதே போன்ற உள்ளடக்கத்தோடு பல காணொலிகள் X தளத் திலும், Instagram தளத் திலும் அதிகளவில் அதே போன்ற உள்ளடக்கத்தோடு பதிவிடப்படுவதும், பரப் பப்படுவதும், அவை அதிக பார்வைகளைப் பெறுவதை அறிய முடிகிறது.
மேலும் தேடிய போது Instagram தளத்தில் avika_re12 என்ற பயனர் ”Hip Hop Battle part 1 #hiphopculture #hiphop #dancereels# mrbeastchallenge” என்ற பின்னொட்டோடு அக்டோபர் 1ஆம் தேதியன்று முதலில் பதிவிட்டுள்ளார்.
Aa_& iiii_p என்பவர் பதிவு IIT Mumbai என்ற இருப்பிடத் தகவலை இணைந்து 02ஆம் தேதி பதிவிட்டுள்ளார். மேலும், எனவே இது அய்அய்டி மும்பையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்ததாக தெரிகிறது. @dev_perspectives என்னும் IIT மும்பை மாணவரின் யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 4 அன்று பதிவிடப்பட்ட காணொலியில் red square iit Mumbai என்று பதிவிடப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்வு நடந்த இடம் மும்பை அய்அய்டி என உறுதியாகிறது.
அக்டோபர் 4 தேதிக்கு பிறகே இக்காணொலி அதிகளவில் பரவி வருகிறது. இதன்மூலம் இக்காணொலி இம்மாணவர்களின் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்பதும் உறுதியாகிறது.
பரவலுக்கான காரணம்
மாணவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராடி வருகின்றனர். இதற்குமுன் கடந்த ஜூலை மாதம் நாடுதழுவிய அளவில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தால் அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகும் நிலை உருவானது.
இதுபோன்ற அவதூறுப் பதிவுகளை முக்கியமாக ஒன்றிய அரசின் ஆதரவுப் பதிவர்கள் மூலமே பதிவிடப் படுவதும் பகிரப்படுவதும் அறிய முடிகிறது.
தொடர்ந்து போராட்டம் வலுத்து வரும் நிலையில் போராடுபவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகள் மாணவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் நோக்கில் பகிரப்படுவதாக தெரிகிறது.
ஆய்வு முடிவு
இந்நிகழ்வு அய்அய்டி மும்பை யில் நடந்தது உறுதி யாவதால் பரவும் செய்தி பொய்யே.
– ஆய்ந்தறிவோர்
