தேவதாசி மரபு இப்பொழுது தேவையா? ந.தேன்மொழி, குடியேற்றம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெண்ணின் உடல் யாருக்கானது.

ஒரு பெண்ணின் உடல் யாருக்குச் சொந்தம்.

அவளுக்கே. இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ளும் யாரும் தேவதாசி முறையை ஆதரிக்க மாட்டார்கள்.

ஒரு பெண்ணை அவளுடைய விருப்பத்திற்கு எதிராக சமயம், கோயில், ஜாதி, கடவுள் அல்லது எந்த அமைப்புக்கும், அர்ப்பணிக்கும் முறைக்கு இடமில்லை. அதனால் தான் தேவதாசி முறை கூடாது என்பது.

புனிதம் என்ற பெயரிலோ, மரபு என்ற பெயரிலோ, கலை என்ற பெயரிலோ அல்லது ஜாதிப் பழக்கம் என்றோ இதை நியாயப்படுத்த முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் பெயராலே கூட பெண்ணின் உடல் மீதான உரிமையை நியாயப்படுத்த முடியாது. பெண்ணின் உடல் மீது அவளுக்கு இல்லாத உரிமையை உருவாக்கும், உருவாக்க நினைக்கின்ற எந்த அமைப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும், எதிர்ப்புக்கு உள்ளாக்க வேண்டும்.

இங்கே தேவதாசிப் பெண்களைக் குற்றம் சாட்டவில்லை. அவர்களை அந்த நிலைக்குத் தள்ளிய சமூகத்தைக் கேள்வி கேட்கிறோம். தானாகவும் கூட இதை விரும்பிப் பெண்கள் ஏற்றுக் கொள்ளச் செய்த- இதைப் ‘புனிதம்’ என்று பெண்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்படி செய்த அதிகார அமைப்பும் குற்றவாளியே.

ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தேவதாசியாகக் கொண்டு செல்லும் மனநிலைக்குச் கொண்டு சென்ற ஆதிக்க அதிகார அமைப்புகளை கேள்வி கேட்க வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கை, உடல், பாலுணர்வு ஆகியவற்றை பிறர் கட்டுப்படுத்த கூடாது. பெண்ணின் உடல் பங்கிடுவதற்கான பொருள் அல்ல என்பதை ஏற்க மறுக்கும் சமூகத்தைச் சாட வேண்டும்.

அவள் யாருடன் வாழ வேண்டும், யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவளுடைய வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவளுக்கு முன்னுரிமை என்பதை மறைத்துப் பெண்ணைத் தேவதாசிகள் ஆக்கிய இந்தச் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய சமூகமாகும்.

கலை என்பதற்காக பெண்ணின் உடலைப் பலியிடலாமா? சமயம் என்று சொல்லிப் பெண்ணின் உடலைக் கூறு போடலாமா? மரபு என்று சொல்லிப் பெண்ணின் மாண்பு கெடுக்கலாமா? பழமையானது என்பதற்காக ஒரு நடைமுறை நியாயமானதாகி விடுமா? பழமையானது என்பதற்காக பெண்ணின் உடல் மீண்டும் வியாபாரப் பொருளாகலாமா? கூடாதல்லவா?

இப்படி இருக்க தேவதாசி முறையை இன்று அவசியமானது அல்லது பாதுகாக்க வேண்டிய மரபு என்று ஆதரிப்பது இழிவானதல்லவா? பெண்களும் ஆதரிப்பது இழிவிலும் இழிவானது அல்லவா? வரலாற்றில் அது இருந்தது. ஆம்! இருந்தது! இந்த ஆணாதிக்க ஆதிக்க வர்க்கத்தால் உண்டாக்கப்பட்ட சூழ்ச்சி அது… பெண்களைப் பாலியல் பண்டமாக்கிய அப்பட்டமானக் கேவலமான முறை இது. அன்று இது திணிக்கப்பட்டது பெண்கள் மீது. அது நியாயமானது அன்று. எனவே இன்றைய காலத்தில் அதை நியாயப்படுத்துவது என்பது பெண்ணின் உடல் விருப்பம் சுயமரியாதையை விட பாழாய்ப் போன மரபுகள் முக்கியம் என்ற ஆபத்தான எண்ணத்தை இது உருவாக்கிவிடும்

தேவதாசி முறையை எந்தக் காரணம் காட்டி ஆதரித்தாலும் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்முடைய எதிர்ப்பு என்பது பெண்களை அந்த நிலைக்குத் தள்ளிய சமூகத்தையும், இன்று அதை நியாயப்படுத்தும் சிந்தனையை நோக்கியதாகவும் இருக்க வேண்டும்

பெண்ணை மதிப்பது என்பது அவளை அர்ப்பணிக்கச் செய்வது அல்ல. அவள் தன்னைத்தானே தீர்மானிக்கும் உரிமையை மதிப்பது. இதை அறியாதவர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது நம் பண்பாடு என்ற சொல் ஒரு அநீதியை நீதியானதாக மாற்றி விடாது. அந்தப் பண்பாடு பெண்ணின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும், உடலின் மீதான உரிமையையும் மதிக்குமா? அப்படி மதிக்காதப் பண்பாடு நமக்குத் தேவையா?

அப்படி இருக்க இன்று சிலர் தேவதாசி முறை அவசியமானது என்று கூறும் போது அவர் வெறும் வரலாற்றைக் கூறாமல் அந்த முறை இன்றைய காலத்திலும் யாருக்கோ அவசியம் என்கிறார்கள் எனில் அவசியம் யாருக்கு?

பெண்ணுக்கா? உண்மையில் யாருக்கு? கலைக்கா? கலை என்ற பெயரில் யாருக்கு? சமயத்துக்கா? சமயம் என்ற பெயரில் யாருக்கு? அல்லது பெண்ணின் உடல் மீது இந்த சமூகத்திற்கு உரிமை உண்டு என்று சொல்ல வந்துள்ளனரா? ஆம் எனில் இந்த உரிமையை இவர்களுக்குக் கொடுத்தது யார்?

இந்தியாவைப் பொருத்தமட்டில் தேவதாசியாக அர்ப்பணிக்கும் நடைமுறையைத் தடை செய்த வரலாறு உள்ளது. 1947ஆம் ஆண்டில் (Madras Devadasis prevention of dedication) தேவதாசியாக அர்ப்பணிப்பதைச் சட்ட விரோதமாக்கியது. அப்படி இருக்கச் சட்டமும் சமூகச் சிந்தனையும் முன்னேறிய பிறகு அதே முறையை அவசியம் என்று மீண்டும் பேசுவது என்பதும், அதை நியாயப்படுத்துவதும் பெண்ணினத்தின் மீது துவங்க ஆசைப்படும் அப்பட்டமானப் பாலியல் போர். அதைப் பெண்களும் சேர்ந்து பேசுவது வன்மையானது.

மரபு என்பதற்காக அநீதியை உயிர்பிக்க முடியாது. கலை என்று பெண்ணின் உடலை அடகு வைக்க முடியாது. சமயம் என்று சொல்லி பெண்ணின் உடல் மீது உரிமை கோர முடியாது.

பெண்ணின் உடல் அவளு டையது. அவளுடைய சம்மதம் இன்றி எந்த மரபுக்கும், எந்த கலாச்சாரத்திற்கும், எந்த சமூகத்துக்கும் பெண்ணின் உடல் மீது உரிமை இல்லை.

கலைக்கும், தேவதாசிகளுக்கும் இடையேயான வரலாற்றுத் தொடர்பு நாம் அறிந்ததே. பல தேவதாசிகள் இசை, நடனம், இலக்கியம், கோயில், சடங்குகள் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகள் செய்தனர். அந்தக் கலைப் பங்களிப்புகளை நாம் பாராட்டலாம். அதற்காக அவர்களை கட்டுப்படுத்திய சமூக அமைப்பை பாராட்ட முடியாது.

இப்படி இருக்க இன்று ஒருவர் “தேவதாசி முறை அவசியமானது” என்று கூறும்போது அவர் வெறுமனே கலை வரலாற்றை நினைவு கூறவில்லை. அந்த முறையின் கீழ் கலை வளர்ந்தது என்று சொல்லி அதனுடன் இணைந்து இருந்த பெண்ணின் சுதந்திர கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கும் போது தான் இது பேசப்பட வேண்டியதாக இருக்கிறது.

கலை என்பது யாருக்காக? கலைஞரின் சுதந்திரத்திற் காகவா? சமூகத்தின் ஆன்மீகத் தேவைகளுக்காகவா? அல்லது “பெண்ணின் உடல் மீதும், வாழ்க்கையின் மீதும் சமூகத்திற்கு உரிமை இருக்கு – அதை மீண்டும் எடுத்துக் கொள்” என்று சொல்ல வந்துள்ளனரா? கலை வளர்வதற்கு ஒரு பெண் உடலை நடைமேடையாக வேண்டுமா? கலை வளர பெண்ணின் உடல் சமூகப் போர்வையால் போற்றப்பட வேண்டுமா? கலை வளர பெண்ணின் உடல் பாலியல் பொருளாக வேண்டுமா? தேவதாசி மரபில் கலைகள் உருவாகி இருக்கலாம், அதை மதிக்கலாம். அதற்காக மீண்டும் பெண்களை அவ்வாறு அர்ப்பணிப்பது ஆகாது.

சட்டமும், சமூகச் சிந்தனையும் முன்னேறிய பிறகும் கூட ஓர் அநீதியை நியாயப்படுத்துபவர்கள் குரல் நெறிக்கப்பட வேண்டாமா? தேவதாசி முறையை ஆதரிப்பவர்களே ஒரு பெண்ணின் வாழ்க்கையை பறித்த ஒரு முறையை பார்த்தும் அதில் உங்களுக்கு இன்னும் “அவசியம்” தெரிகிறது என்றால் உங்களுக்கு மனிதநேயம் என்று ஒன்று இருக்கிறதா?

வரலாற்றை ஆய்வு செய்யுங்கள். கலை பங்களிப்பு களைப் பேசுங்கள். அந்தக் கலைப் பங்களிப்பு ஒரு பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி என்று அறிந்தும், ‘அதை அவசியம்’ என்று வக்காலத்து வாங்குவது வெறும் கருத்தல்ல. மனித நேயமற்ற செயலின் வெளிப்பாடு!

ஒரே ஒரு கேள்வி! நீங்கள் பிற பெண்களுக்காக விரும்பும் அந்த தேவதாசி மரபை மீண்டும் உங்களுக்காகவும் உங்கள் வீட்டுப் பெண்களுக்காகவும் உங்கள் தலைமுறைக்காகவும் விரும்புகிறீர்களா? அவர்களுக்கு உங்களால் கொடுக்க இயலுமா கொடுங்கள். உங்கள் மகளுக்கும் பேத்திக்கும் நீங்கள் கொடுக்க ஆசைப்பட்டாலும் அது தவறே. அது மனிதநேயமற்றது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்று பேசும்போதே உங்களுக்கு வலிக்கும். அதே வலி தான் பிறருக்கும்.

தேவதாசி முறையை ஆதரிப்பவர்கள் உங்கள் வார்த்தைகளில் சுமையை உணருங்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி எளிதில் தீர்ப்பு வழங்க வேண்டாம் தேவதாசி மரபு என்பது அவசியமில்லை அது உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் அவசியம் இல்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *