கேள்வி 1: தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை விஜய் அவர்கள் நடத்தி வருவதாக முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகான் பெருமிதம் கொள்கிறாரே ….?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்
பதில் 1: அவர் அமைச்சராகியுள்ளார் அல்லவா? பதவியில் இருப்போருக்கு எப்போதும் யதார்த்தப் பார்வை – மறைந்து விடுவது இயல்புதானே! – பரிதாபப்படுவோமாக!
கேள்வி 2: தேர்தலில் வாக்குச்சீட்டு முறையா? மின்னணு முறையா? என்று சோதித்தறிவதில் ஜனநாயகம் பேசும் ஒன்றிய அரசுக்கு என்ன தயக்கம்? ஏன் எதிர்ப்பு?
– க.காளிதாஸ், நுங்கம்பாக்கம்
பதில் 2: அங்கேதான் சூட்சுமம் – சூட்சுமம் புரியவில்லையா – ஞானேஷ்குமார் என்ற அப்பட்டமான சத்தியகீர்த்தி ஆளுமையிடம் இந்தக் கேள்வி கேட்கலாமா?
கேள்வி 3: சென்னை பெரியார் திடலில் முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்” என்ற புத்தக அறிமுக விழாவில் மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான மானமிகு எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள் பேசியதை ‘விடுதலை’ நாளிதழில் படித்தபோது எந்நாளும் சுயமரியாதை வீரர் நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நினைவுதான் மனத்திற்கு வந்துபோனது. இனிவரும் காலங்களில் கழக மாநாடுகளில் அய்யா ஜெகத்ரட்சகன் அவர்களைப் பங்கேற்க வைத்து கழகத் தோழர்கள் அவரது பேச்சை நேரில் கேட்டு ருசிக்க வேண்டும் எனத் தோன்றியது நிறைவேறுமா?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 3: அவருக்கே எழுதுங்கள்; அவரை அழைக்க வேண்டிய மேடைக்கு நிச்சயமாக அழைப்போம். அவருக்கு நேரமிருக்காது; காரணம், தேனீயை விடச் சுறுசுறுப்பு மிக்க அவரது வாழ்வின் பல பரிமாணங்கள்!

கேள்வி 4: சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிர மணிய சிவாவின் பிறந்தநாள் அக்டோபர் நான்காம் தேதி கொண்டாடப்படும் நிலையில் சுப்ரமணிய சிவாவுக்கு பதிலாக வ.வே.சு.அய்யர் படம் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனத் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியிருக்கிறாரே! இதிலும் திட்டமிட்ட சதியா?
– குடந்தை க.குருசாமி
பதில் 4: பரவாயில்லை. அதுவரை சுப்ரமணிய சுவாமியின் படத்தைத் திறக்காமல் இருந்தார்களே – பாராட்டுங்கள்.
கேள்வி 5: இடைத் தேர்தல் நடந்த மதுராந்தகம், தாராபுரம், புதுவை – தட்டாஞ்சாவடி தொகுதிகளில் சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது (ஏப்ரல் 2026) பதிவான வாக்கு சதவீதம் தற்போது குறைந்துவிட்டதே – ஏன்?
– ம.பாலாஜி அரசு, கல்பாளையம்
பதில் 5: “முற்றும் குதிரை பேரங்களுக்கு நாம் வாக்களித்து, முட்டாளாக நாம் ஆகாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாமே” என்ற அறிவு இடித்திருக்கக் கூடும்!

கேள்வி 6: ‘திராவிட மாடல்’ ஆட்சியில் வாகன உற்பத்தி, மின்னணு சாதனங்கள், ஜவுளித் தொழில் எனப் பல துறைகளில் இந்தியாவிலேயே முன்னணியாகத் திகழ்ந்த தமிழ்நாடு – அதிக முதலீடுகளைத் தொழில் துறையில் ஈர்த்த தமிழ்நாடு தற்போது மிக மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனரே?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 6: “அதனாலென்ன, அதை மறைக்க 1937 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா என்பவரே கலந்துகொள்ளவில்லை என்று தி.மு.க. மீது ஒரு போடு போட்டால் போயிற்று” என்றுள்ளார்கள் போலும்!
கேள்வி 7: ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொறுப்புமிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் மீது அவரது துறை சார்ந்த அடுத்த நிலையிலுள்ள இரு ஆணையர்கள் பலமுறை குற்றஞ்சாட்டி விளக்கம் கேட்ட பிறகும் கண்டுகொள்ளாத தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ஏன் அதிவேக -அதிகபட்ச விசாரணையும், தண்டனையும் வழங்க குடியரசுத் தலைவர் முன்வராது இருக்கிறார்?
– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் 7: குடியரசுத் தலைவருக்கு மேலான அதிகாரப் பாதுகாப்பினை உண்டாக்கி வைத்துக் கொண்டுதானே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவம் 6-இல் மாற்றம் செய்தார். அதற்கு உள்ள பலமான பின்னணி உலகறிந்ததாக இருந்தாலும், அம்பை மட்டுமே குறை கூறுகிறார்கள். முன்கூட்டியே அவர் ஓர் அரண் ஏற்படுத்திக் கொண்டார், புரிகிறதா?
கேள்வி 8: சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் வழிபாடு திடீர் நிறுத்தமாமே?
– அறிவொளி, மதுரை
பதில் 8: ஏன் – ‘பாலகிருஷ்ணன்’ அந்த வெண்ணைகளைத் திருடிப் போய்விட்டாரோ? காரணம் கேட்டு வாரீர்!

கேள்வி 9: மாநிலக் கட்சிகளே இல்லாத நிலைக்கு ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆரியக் கூட்டம் சதி செய்து வருகிறதே? வி.பி.சிங் காலத்தைப் போல மாநிலக் கட்சிகள் எழுச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
– கல.யுவகாளி, செங்கை
பதில் 9: மாநிலக் கட்சிகள்தான் உண்மையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை முதலியவற்றைக் காப்பாற்றத் தக்கவை. அவற்றின் வளர்ச்சியைத் தடுத்துவிட முடியாது. அடிக்க அடிக்க பந்து எழும் – அடக்க அடக்க உரிமைக்குரல் ஓங்கியே தீரும்!
கேள்வி 10: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தவறிழைத்தார் என உறுதி செய்யும் நிலையில் சட்டப்படி அவருக்கு என்ன தண்டனை? அவர் காலத்தில் நடந்தேறிய தேர்தல் முதலான செயல்பாடுகளின் நிலை என்ன ஆகும்?
– மாமன்னன், தஞ்சை
பதில் 10: ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட, அவருக்கு விலக்கு அளிக்கும் தனிச்சட்டமும், சிறப்பு அதிகாரமும் சட்டப்படி செல்லுபடி ஆகாததாக ஆக்கப்பட வேண்டும்; எவையானாலும் மூலபலத்தை முறியடிப்பதன் மூலமே முடியும்!
