திருவாங்கூர் சமஸ்தானம் (30) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

7 Min Read

அய்யன்காளி தன் இன மக்களை சமூகத்தில் ஒவ்வொரு துறையாகப் போராடி, போராடித்தான் வெற்றி பெற்றார். அடுத்து அவர் கையில் எடுத்தது அனைத்து இந்துக்களையும் கோயிலினுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்பது அனைத்து இந்துக்களுக்கும் அந்த உரிமை கிடைத்துவிட்டால் புலையர்களுக்கும், மற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அந்த வாய்ப்பு உண்டாகிவிடும் என்பதனால்தான். திருவாங்கூர் நாட்டில் கோயில்கள் முழுவதும் ‘தேவசம் போர்டு’ என்றழைக்கப்படும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இருந்தாலும் தேவசம் போர்டை நிர்வகிப்பவர்கள் முழுவதும் நம்பூதிரிப் பார்ப்பனர்களே!

இந்தக் கோயில்களை நிர்வகிப்பவர்கள் அறக்கட்டளைகளை நிறுவி கோயில்களின் அன்றாட செயல்பாடுகளை நடத்தின. அறக்கட்டளை உறுப்பினர்கள் முழுக்க, முழுக்க நம்பூதிரிப் பார்ப்பனர்களே. பொதுவாக அரசு அறக்கட்டளை செயல்பாடுகளில் அதிகம் தலையிடுவதில்லை. நாளடைவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் அந்தந்தப் பகுதியின் சிற்றரசர்கள் போல் ஆகிவிட்டனர். அந்த ஊரைப் பொறுத்தவரை அவர்களே தலைவர்கள். அவர்கள் இடும் ஜாதியச் சட்டங்களே அந்த ஊரின் சட்டங்கள். அவற்றை பழுதில்லாமல் நிறைவேற்றுவது நாயர்களின் கடமை. கீழ் ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், அடிமைகள் போன்றோர் திருவாங்கூர் நாட்டில் கோயில்களுக்குள் செல்ல முடியாது.

கோயில்கள் இருக்கும் தெருக்களில்கூட அவர்கள் நுழைய முடியாது. அந்தத் தெருக்களில் மாடுகள் போகலாம், நாய்கள் போகலாம், பன்றிகள் போகலாம். ஆனால், சக மனிதன் கீழ்ஜாதிக்காரன் என்பதால் அந்தத் தெருவில் போக முடியாது. அந்தத் தெருக்களில் அவர்கள் போவதால் தெருவே அசுத்தமாகி விடுமாம்! அடிமைத் தனத்திலே ஊறிக் கிடந்த மக்களும் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றே நடந்தனர். கோயில்கள் இருக்கும் தெருக்களும் அறக்கட்டளை சொத்து என்று நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அரசு முதல், அனைத்து நிர்வாக அமைப்புகளிலும் நிறுவி வைத்து விட்டனர்.

அதனால் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்கள், தனியார் சொத்தாகி விட்டதால், அந்நியர்களுக்கு (கீழ்ஜாதியினருக்கு) அனுமதி இல்லை என்பதும் ஜாதி சட்டமாக்கப்பட்டுவிட்டது. முதல் போராட்டம் கோயில் தெருக்களில் நுழைவுப் போராட்டமாகத் துவங்கினாலும், நாளடைவில் கோயில் நுழைவுக் கிளர்ச்சியாக அது பரிணமித்தது. அந்தக் கிளர்ச்சிகளுக்கு காந்தியாரும், காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தந்தனர். பல இடங்களில் காங்கிரஸ் கட்சியே முன்னின்று அந்தக் கிளர்ச்சிகளை நடத்தியது.

அந்தக் கட்டத்தில் கிறிஸ்துவர்கள் இந்த ஜாதியக் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி, கிறிஸ்துவ கோயில் இருக்கும் தெருவில் நுழையவோ, கிறிஸ்துவ கோயில்களில் அனைவரும் உள்ளே வந்து ஆண்டவனைத் தொழலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் தங்களை மனிதர்களாக மதிக்கும் மதத்தில் சேரத் துவங்கினர். சர்.சி.பி.ராமசாமி அய்யர் திவானாக நியமனம் பெற்று பொறுப்பேற்றார். அவர் சற்று முற்போக்கு எண்ணம் கொண்டவர். திருவாங்கூர் நாட்டில் ஏறத்தாழ 11 லட்சம் ஈழவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறப் போவதாக ஒரு செய்தி பரவியது. அவர்களோடு சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களும் மதம் மாறப் போவதாகவும், அப்படி ஆகிவிட்டால் திருவாங்கூர் நாடே “கிறித்துவின் ராஜ்ய”மாகி விடும் என்ற அச்சம் மேல் ஜாதியினருக்கு ஏற்பட்டது.

இந்தச் செய்தி திவான் காதுக்கும் எட்டியது. திவான் இந்தச் சூழ்நிலை ஏற்பட்டால் பெரும் குழப்பம் நிகழ்ந்துவிடும் என்றஞ்சி கோயில் நுழைவு பற்றி பரிந்துரைக்க ஒரு குழுவை நியமித்தார். “நண்டைச் சுட்டு, நரியைக் காவல் வைத்தக் கதையாக” அந்தக் குழுவில் இருவர் நாயர். மீதி ஆறு பேரும் பார்ப்பனர்கள். நாயர்கள் இருவர் மட்டும் அனைத்து இந்துக்களும் கோயில்களில் அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்தனர். பார்ப்பனர்கள் அனைவரும் அதை எதிர்த்தனர். ஆனால், மத மாற்றங்கள் நடக்கப் போகும் செய்தி பரவலாக மக்களிடையே நடந்தது. அதனால், அரசு வேறு வழியின்றி “கோயில் நுழைவு அனுமதி” ஆணையை வெளியிட்டது.

12.11.1936 அன்று வெளியிடப்பட்ட அந்த ஆணை: “நமது மதம் தெய்வீகமானது. அதன் நன்னெறியாலும், சகிப்புத் தன்மையாலும் எங்கும் வியாபித்துள்ளது. இந்துக்கள் பிறப்பு, ஜாதி, சமுதாயம் ஆகியவற்றைக் காரணம் காட்டி இந்து மத நம்பிக்கையும், நல்லெண்ணத்தையும், அமைதியையும் கெடுக்கக் கூடாது. இந்த அக்கறையின் பொருட்டு தீர்மானிக்கப்படுவதும், உத்தரவிடப்படுவதும் யாதெனில் கோயில்களின் ஆசாரங்களைத் தொடர்ந்து பேணவும், சட்டங்களுக்கும், நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு பிறப்பாலும், நம்பிக்கையாலும் இந்துவாகக் கருதப்படும் யாவரும் நம்முடையதும் மற்றும் நம் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருப்பதுமான கோயில்களில் நுழையலாம். வழிபாடு நடத்தலாம். அதற்கு இனிமேல் எந்தத் தடையும் இருக்காது.” இந்த ஆணை இந்தியா முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோயில்கள் தெருக்களிலேயே நுழைய முடியாத கீழ்ஜாதியினர், கடைசியில் கோயில்களில் நுழைந்து கடவுளைத் தொழும் பெரும் புரட்சி திருவாங்கூர் நாட்டில் நிகழ்ந்தது.

கோயில் நுழைவு அரசின் ஆணையைப் பற்றி “மிதவாதி” என்ற கேரளப் பத்திரிக்கை, “இந்த ஆணையால் இந்து மதத்தில் ஒரு மாபெரும் மாற்றம் நடந்தேறி உள்ளது. ஜாதியமைப்பு மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட பிற மூடநம்பிக்கைகள், வழக்கங்கள் அடித்தளம் ஆட்டம் கண்டது.

இறைவன் குடிகொண் டிருப்பதாக நம்பப்படும் கோயில்களில் அனைத்து இந்துக்களுக்கும் நுழைய உரிமை கிடைத்தது. கோயில் குளங்களில் ஜாதி வேறுபாடின்றி நம்பூதிரிப் பார்ப்பானும், பார்க்கக் கூடாத புலையனும் அருகருகே குளித்துவிட்டு கடவுளைத் தொழும் வழக்கம் நடைமுறைக்கு வரும் பெரும் புரட்சி திருவாங்கூர் நாட்டில் நடந்தது” என்று எழுதியது. தீண்டாமை, தீண்டத்தகாதோர் உரிமை பெற்ற நிகழ்வு இது.

காந்தியார் இந்த சமூக மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்றார். அவர் பிறந்த போர்பந்தரிலேயே நடக்காத மாற்றம் இது. திருவாங்கூர் நாட்டின் அனைத்துக் கோயில்களுக்கும் வரத் திட்டமிட்டார். காந்தியாரும், அவர் தொண்டர்களும் 12.1.1937 அன்று திருவனந்தபுரம் வந்தார்கள். திருவனந்தபுரம் நகராட்சி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது. 14ஆம் தேதி வரை கோயில்களுக்குப் போனார்.

14.1.1937 அன்று காந்தியார், அய்யன்காளியைச் சந்திக்க வெங்கனூர் வந்தார். தன்னைத் தேடி, தன் இருப்பிடம் வந்த அந்த மாமனிதரைப் பார்த்ததும் அய்யன்காளியின் கண்கள் பனித்தன. காந்தியார் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டு நலம் விசாரித்தார். அருகில் இருந்த பலாமரத்தடியில் அமர்ந்து காந்தியார் சிறு சொற்பொழிவாற்றினார்.

அய்யன்காளி காந்தியாரையும், அவரது தொண்டர்களையும் வரவேற்று அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். அப்போது காந்தியாரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர் சமூகத்தைச் சேர்ந்த பத்து பேரையாவது பட்டதாரிகள் ஆக்க காந்தியார் உதவ வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள். காந்தியார் உடனே குறிக்கிட்டு. “பத்து அல்ல, நூறு பட்டதாரிகள் இங்கு உருவாவார்கள். அதற்குத் தேவைப்படும் பொருளை என் அரிஜன் கல்வி நிதியிலிருந்து ஒதுக்குகிறேன்” என்று கூறினார்.

மேலும் காந்தியார் “புலையராஜா என்ற தளராத செயல்வீரர் உங்களிடையே உள்ளார். அவர் தலைமையில் உறுதியாக நீங்கள் முன்னேறி வருவதை நான் அறிவேன். திருவாங்கூர் நாட்டில் தீண்டாமை அடியோடு, கோயில் பிரவேச ஆணையால் நீக்கப்பட்டுவிட்டது. அதற்குக் காரணமான அய்யன்காளி போன்றவர்களுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். கோயிலில் நுழையக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நீங்கள் அறிவு சார்ந்தும், மதம் சார்ந்தும் பயன்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

சொற்பொழிவை முடித்தபின் 1904இல் நிறுவப்பட்ட அய்யன்காளி நிறுவிய புதுவல் விளாகம் எல்.பி. பள்ளிக் கூடத்தைப் பார்வையிட்டார். அதையொட்டியிருந்த நூலகத்தையும் பார்த்தார். அழுத்தப்பட்டுக் கிடந்த மக்களுக்கு கல்வி கொடுக்க அவர் எடுத்த முயற்சிகளைப் பாராட்டினார். “நாட்டுக்கு தன்னாட்சி கிடைத்துவிட்டால் தாங்கள் எங்களுக்கு எந்தப் பதவி அளிப்பீர்கள்?” என்று கேட்டார். காந்தியார் சற்றும் தயக்கமின்றி, “சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ஒரு அரிஜனை நியமிப்பேன்” என்று பதிலளித்தார். (அன்று காந்தியாரிடம் கேள்வி கேட்டவர் கே.ஆர்.வேலாயுதன் என்பவர். பின்னாளில் அவர் தம்பி கே.ஆர்.நாராயணன் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர்தான் இந்தியாவின் முதன்முதலாக அந்தப் பதவியில் அமர்ந்த தாழ்த்தப்பட்டவர்.)

அய்யன்காளிக்கு வயது 77 ஆகிவிட்டது. உடல் சோர்வு அதிகமாகிவிட்டது. படுக்கையில் விழுந்துவிட்டார். மருத்துவமும் முறையாக நடந்தன. 1941ஆம் ஆண்டு மே மாதம் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இறுதியில் 18.6.1941 அன்று தன் இறுதி மூச்சை விட்டார்.

வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்டோரை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளைத் தவிர அவர் கவனம் வேறெதிலும் செல்லவில்லை. பல தலைவர்கள் வாழ்நாளில் போராட்டங்களை நடத்தினர். ஆனால், வாழ்க்கையே போராட்டங்களுக்கு அர்ப்பணித்தவர் அய்யன்காளி. திண்டத்தகாதவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் பிறர்போல் வாழ உரிமை உண்டு என்பதை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அய்யன்காளியின் வாழ்நாள் லட்சியமாக இருந்தது. அவர் வாழ்நாளில் அதை நிறைவேற்றி விட்டார். அத்துடன் தங்களுக்கும் பிறரைப் பேல வாழ உரிமை உண்டு என்ற உணர்வை தாழ்த்தப்பட்டோருக்கு உருவாக்கினார். தன் இன மக்கள் கல்வியறிவு பெற வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உயர்வடைய முடியும் என்பதே அவர் எண்ணம். தான் மரணமடைவதற்கு முன் தன் இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பட்டதாரியையாவது பார்க்க வேண்டும் என்பதே அவர் ஆசையாயிருந்தது.

ஜாதியின் பெயரால் எண்ணற்றக் கொடுமைகளுக்கு ஆளானபோதும் அய்யன்காளி மேல்ஜாதியினர் மீது வெறுப்பைக் காட்டவில்லை. மேல் ஜாதிக்காரர்களிடம் கெஞ்சவும் இல்லை. ஒரு வீரம் செறிந்த தலைவராக நிமிர்ந்து நின்று தம் மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.

தமக்கென்று எதையும் எதிர்பார்க்காது தொண்டறம் செய்த மாபெரும் தலைவர் அவர். “புலையராஜா” என்ற பெயர் பெற்ற அவர் தம்மிடம் இருந்த குறைந்தளவு செல்வத்தைக் கொண்டு பெரும் புரட்சிகள் செய்தவர். அவரும், அவர் படையினரும், அவர் சங்கத்தினரும் பல கிளர்ச்சிகளை நடத்தினர். பொருட்சேதம், உயிர்ச் சேதம், இருப்பிடச் சேதம் என பல சேதங்களை வாழ்நாளில் கண்டவர்கள். அவர்களுக்கெல்லாம் “வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கியவர் அய்யன்காளி!”

(சான்று: “மகாத்மா அய்யன்காளி – கேரளத்தின் முதல் தாழ்த்தப்பட்ட போராளி” – நிர்மால்யா)

(தொடருவேன்….)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *