சென்னை, அக். 8– இந்தியாவில் வாக்குரிமை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சாதாரணமானதல்ல என்றும், இது ஒட்டு மொத்த ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் கொல்வதற்கான எதேச்சதிகார முயற்சி என்றும் திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், நேற்று (7.10.2026) எஸ்அய்ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரம் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், பத்திரிகையாளர் கா. அய்யநாதன், டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ், அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் ராதிகா உள்ளிட் டோரும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தமும்– நடைமுறைச் சிக்கல்களும்!
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரகாஷ் ராஜ் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: தற்போதைய சூழலில்தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை இந்தப் பதவியில் இருந்தும் அதிகாரத்தில் இருந்தும் மக்கள் நீீக்க வேண்டும். எஸ்அய்ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் எந்தக் கட்சி ஆதாயம் பெற்றது என்பது முக்கியமல்ல; இந்த நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமை மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது பற்றிக் குரல் கொடுக்கிறோம்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மக்கள் எவ்வித படிவங்களையும் முறையாகப் பூர்த்தி செய்யாத சூழலில், தேர்த லுக்குச் சில மாதங்கள் மட்டுமே உள்ளபோது எதற்காக இந்த அவசர நடவடிக்கை? தமிழ்நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில், வெறும் ஒரு மாதத்திற்குள் எஸ்அய்ஆர் பணிகளை முடிக்க வேண்டிய அவசியம் என்ன? வெளிநாடுகளிலிருந்து நுழைந்த வர்களைச் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் ஏழைகள், ஆதி வாசிகள்,சிறுபான்மையினர் மற்றும் தினக்கூலிகள் என லட்சக்கணக் கானோரின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட் டுள்ளன. பாக முகவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான அழுத்தம் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். படித்தவர்களுக்கே புரியாத இந்த நடைமுறையால் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப் பட்டுள்ளது.”
நீதித்துறையின் பொறுப்புகளும்– தமிழ்நாட்டின் முன்னுதாரணமும்!
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசின் தற்போதைய போக்கு குறித்துக் கடுமையாக விமர்சித்தார்:“2023 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டு ஆளும் கட்சியின் அமைச்சர் சேர்க்கப் பட்டுஉள்ளார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மீதும் பிற ஆணையர்கள் மீதும் எவ்வித வழக்கும் தொடர முடியாதவாறு பாதுகாப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கருநாடகத்தில் நாங்கள் நடத்திய ஆய்வில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து அநியாயமாக நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது வாக்குரிமை மீது நடந்துள்ள நேரடித் தாக்குதல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் கொல்லும் மனுஸ்மிருதி சிந்தனையாகும்.
இட ஒதுக்கீடு, நீட் தேர்வு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற அனைத்து முக்கியப் பிரச்சினைகளிலும் இந்தியாவிற்கே எப்போதுமே முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்நாடு, இந்த விவகாரத்திலும் விழிப்படைய வேண்டும். தமிழக மக்கள் மற்றும் போராளிகள் அனைவரும் இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள பட்டியலைச் சரிபார்க்கும் ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்; எஸ்அய்ஆர் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் தங்களது உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடினால் மட் டுமே இந்த எதேச்சதிகார அரசைப் பணிய வைக்க முடியும்” என்று பிரகாஷ் ராஜ் அழைப்பு விடுத்தார்.
ஊடகங்களின் பங்கும் – போராட்டத்திற்கான அறைகூவலும்!
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து அவர் மேலும் கூறியதாவது:
“மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடைப்பட்ட பாலமாகச் செயல்பட வேண்டிய ஊடகங்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது ஜனநாயகக் கடமை யாகும். ஆனால், பிரதமர் மோடி போன்றவர்கள் எப்போதுமே செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது காவல்துறை, நீதித்துறை மற்றும் முக்கிய நிறுவனங்கள் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும்இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் உடனடியாகத் தலையிட்டுத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் அரசியல் சார்பற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்யத் தவறும் பட்சத்தில், நாடு முழுவதும் தீவிரமான மக்கள் போராட்டங்கள் வெடிக்கும். தங்களதுவாக்குரிமையைப் பாதுகாக்கத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும், மாணவரும், பொதுமக்களும் களத்தில் இறங்கிப் போராட முன்வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
