கேள்வி 1: “மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் இடதுசாரிகள் வேட்பாளர்களை நிறுத்துவது முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளித்திருப்போம்” என்கிறாரே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது குறித்து தங்கள் கருத்து… ?
-மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்.
பதில் 1: “ஏன்? இப்போதுகூட அவர் கட்சி போட்டியிலிருந்து விலகலாமே! யார் தடுக்கிறார்கள்?” என்கிறார் ஆபீஸ் உதவியாளர்.
- • •
கேள்வி 2: அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தின் முன் வழக்குரைஞர் பிரபல் பிரதாப் சிங் கொலீஜியத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு நகல்களை எரித்து நடத்திய போராட்டம் வட மாநிலங்களிலும் கொலீஜிய எதிர்ப்பை உணர்த்துகின்றது. இனியாவது நீதிபதி நியமனங்களில் சமூகநீதிக்கு வழி காணப்படுமா?
– எம்.கதிரேசன், நம்மாழ்வார்பேட்டை

பதில் 2: “அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது பழமொழி.
- • •
கேள்வி 3: அண்மையில் தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய ரோபோ ஒரு பணிமனையில், தமிழர் ஒருவரை மார்பில் தாக்கியதால் இதயத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவ்வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பாதிப்பு எதிர்காலத்தில்(லும்) தீங்காகுமா?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 3: எந்தத் தொழில்நுட்பத்திலும் இரண்டு பக்கங்கள் உள்ளன. நல்ல விளைவு; தீய விளைவு. தீய விளைவுகளிலிருந்து காப்பாற்ற, பாதுகாப்பு முறைகளுக்கு முன்னுரிமை தந்தால் தவிர்க்கலாம்; தப்பிக்கலாம்!
- • •
கேள்வி 4: “தி.மு.க. கொடுக்கும் ‘கிஃப்டை’ (இலவசப் பரிசை) வாங்கிக் கொண்டு த.வெ.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு புலப்படுத்துவது என்ன என்று கருதுகிறீர்கள்?
– மு.பாஷா, செய்யூர்
பதில் 4: பொது ஒழுக்கத்தைக் காப்பாற்றத் தெரியாத, அறிவுக்கு எதிரான, விரும்பத்தகாதப் பேச்சு. தவிர்க்கப்பட வேண்டும்.
- • •
கேள்வி 5: “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் இயல்பானதோ – இயற்கையானதோ அல்ல. ஏன் பதவி விலகல்? ஏன் மீண்டும் போட்டி?” என்ற தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்தின் கேள்விக்கு த.வெ..க. தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்?
– க.மணிமொழி, விழுப்புரம்
பதில் 5: “மவுனம் சம்மதத்திற்கும் அறிகுறி” என்பது ஆங்கில அனுபவ மொழி – நினைவுக்கு வருகிறதல்லவா?

- • •
கேள்வி 6: தாங்கள் அறிவித்துள்ள பூம்புகார் முதல் மாமல்லபுரம் வரையிலான பண்பாட்டுப் பயணம் எந்த வகையில்? நடைப் பயணமாக அமையுமா?
– கு.பார்த்திபன், செங்கம்
பதில் 6: நடைப் பயணம் அல்ல. வேன், கார்களில் தொடர்ப் பிரச்சாரம்! முக்கிய நகரங்கள், கிராமங்களில் பரப்புரை செய்துகொண்டே (3 நாள்கள்) சென்று முடிகிறது.
- • •
கேள்வி 7: புதிய தலைமைச் செயலகத்திற்கு இப்போது என்ன அவசரம்?
– தவசி ஆனந்தன், மாயவரம்
பதில் 7: கடனைக் குறைத்து, வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது தள்ளிப் போகிறது என்பது ஒருபுறம்; மறுபுறம் இதற்கு இப்போது என்ன தேவை? மக்கள் கேள்வி இது! இப்போது!!
- • •
கேள்வி 8: “பல்கலைக்கழகங்களுக்குப் பொறுப்புத் துணைவேந்தர்கள் நியமிக்கப் படுவார்கள்” என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன் அறிவித்துள்ளது சரியான ஒன்றாகுமா?
– முகம்மது, மணப்பாறை
பதில் 8: அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனி சட்ட விதிகள் – நடைமுறைகள் உள்ளன. ஆட்சிக்குழுவினால் முடிவு செய்த ‘ஆளுமைக்குழு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி காலியானால், உரிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, பல்கலைக்கழகத்தினை நிர்வகித்து வருவதுதான் மரபும் விதியும். புதிய அறிவிப்பு – சட்ட விரோதம் என்று எவராவது மறுப்பு எழுப்பினால் மீண்டும் சட்டச் சிக்கல் ஏற்படக் கூடும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
- • •
கேள்வி 9: House-wife இருப்பதுபோல் House-husband இருக்கலாமா?
– செல்வம், மேலூர்
பதில் 9: தாராளமாக -அண்மையில் 2 நாள்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இதுபற்றி ஆதரவுக் கருத்தைத் தெரிவித்துள்ளாரே!
