நம் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் விழா தமிழ்நாடு தாண்டி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் எல்லா ஆண்டுகளையும் போல இந்த ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்க மண்ணில் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பெரியார் பன்னாட்டு அமைப்பு முன்னெடுத்த “Run for Periyar” நிகழ்ச்சி சிகாகோவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறுவர் முதல் பெரியவர் வரை இந்தப் ‘பெரியார் நடை ஓட்ட’த்தில் கலந்துகொண்டு அய்ந்து கிலோமீட்டர் தூரத்தை நடந்தும் ஓடியும் முடித்தனர். பெரியார் பிஞ்சுகள் பெரியார் பற்றியும், அவர் ஆற்றிய அரும்பணிகள் பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைத்தனர். இந்த விழாவின் இறுதியில் பங்கேற்பாளர்கள் அனை வருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இது போன்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் வகுத்துத் தந்த பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சுயமரியாதைக் கொள்கை களையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரிடையே குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே எளிதாகக் கடத்தும் ஒரு சிறந்த சமூக வெளியாக அமைகின்றன. நடை, ஓட்டம் போன்ற பங்கேற்புடன் கூடிய இந்த ஏற்பாடுகள் மூலம் பெரியார் சிந்தனைகள் மக்களிடையே மேலும் நெருக்கமாகவும் உயிரோட்டமாகவும் பரவுகின்றன. இத்தகைய கூட்டங்கள் தலைமுறை தலைமுறையாகப் பெரியார் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிக்க மக்களை ஊக்குவிக்கின்றன.
