*மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைவு
* மரணப் படுக்கையில் இந்திய ரூபாயின் மதிப்பு பணக்காரர்களின் சொத்துகள் பன்மடங்கு உயர்வு
புதுடில்லி, மே 21 மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மரணப் படுக்கையில் உள்ளது. ஆனால் பணக்காரர்களின் சொத்துகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மக்களின் துயரத்தை மறைத்து மோடி சுய விளம்பர நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கார்கே குற்றச்சாட்டு
பிரதமர் மோடியின்இத்தாலி பயணத்தின்போது வெளியான சில காணொலியை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
கடந்த 11 ஆண்டுகளில் கோடீஸ்வரர் களின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்துள் ளது. ஆனால் ஒவ்வொரு இந்தியரின் சராசரி கடன் சுமை 11 மடங்கு அதிகரித் துள்ளது.
அதே நேரத்தில், 255 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.97.50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவே, சுமார் 80 கோடி மக்கள் 5 கிலோ இலவச ரேசன் திட்டத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு
சமையல் எரிவாயு 2014இல் ரூ.414 ஆக இருந்த எரிவாயு உருளை விலை, 2026இல் ரூ.915.5 ஆக (121 சதவீதம்) உயர்ந்துள்ளது. வணிக எரிவாயு உருளை விலை ரூ.3,152 ஆக (154 சதவீதம்) அதிகரித்துள்ளது.
எரிபொருள் வரி: கடந்த 12 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வரிகள் மூலம் மக்களிடமிருந்து ₹43 லட்சம் கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி, பால், மருந்துகள் என அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
9 கோடி இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளை ஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 2026 மார்ச் மாதத்தில் 15.2 சதவீதமாக உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 90க்கும் மேற்பட்ட தேர்வு வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளதால், சுமார் 9 கோடி இளை ஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
மரண படுக்கையில் இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவாக 96.90 என்ற மிக மோசமான நிலையை எட்டி, ‘மரணப் படுக்கை’யில் கிடக்கிறது. மேற்கு ஆசிய மோதல்களால், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $38 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
பங்குச் சந்தையிலிருந்து அந்நிய நிறுவன முதலீடுகள் வெளியேறுவது அதிகரித்துள்ளது. 2026இல் இதுவரை ரூ.2.2 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன.
“மக்களின் துயரத்தை மறைத்து, மோடி தனது சுய விளம்பர (PR) நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சாமானிய மக்கள் பொருளாதாரப் புயலின் சுமையைச் சுமக்க வேண்டும் என்று போதிக்கும் பிரதமர், தனது பேச்சுகளின் இனிமையை மட்டும் மக்கள் ரசிக்க வேண்டும் என விரும்புகிறார்,”
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
