“தடை செய்” கணபதி விழாக்களால் ஏற்படும் சீர்கேட்டுக்கு எதிராக எழுந்த பெரும் முழக்கம்!

7 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பாணன்

பிரெஞ்சுப் புரட்சியின் போது ஒரு முழக்கம் மக்களிடையே பிரபலமானது; அது “மவுனித்து இருக்கும் மக்களிடையே ஒரு குரல் ஒலித்தாலும் ஒட்டுமொத்த மக்களும் வெகுண்டெழுவார்கள்” என்பதாகும்.  இக் கருத்துப்படப் பேசியவர் அந்தப் புரட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜீன் பால் மராட் (Jean-Paul Marat) ஆவார்.

அவர் தனது ‘எல் அமி டு பெப்ளி’ (L’Ami du peuple – மக்கள் நண்பன்) என்ற பத்திரிகை வாயிலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அமைதியைக் கலைத்து அவர்களைப் புரட்சியை நோக்கி எழுச்சியடையச் செய்ய இத்தகைய வீரியமிக்க உரைகளையும், கருத்துகளையும் மக்களிடையே விதைத்தார். இந்தப் புரட்சி விதை தூவப்பட்ட நாள் 17.09.1789 ஆகும்.

விழிப்புணர்வு பெற்ற மக்களை அடிமையாக்க

இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் திலகர் ஹிந்துத்துவத்தைக் காக்கவும், மதமாச்சாரியங்களில் இருந்து விழிப்புணர்வு பெற்ற மக்களை மீண்டும் மதவாதப் பிடியில் கொண்டுவரவும் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டதே விநாயகர் சதூர்த்தி விழாவாகும். தந்திரமாக இதை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று என்று கட்டமைக்க ஹிந்துத்துவ அமைப்புகளோடு சேர்ந்து இதை அவர் செயல்படுத்தினார். ஒரு கட்டத்தில் இதில் கலந்துகொள்ளாவிட்டால் ‘தேசபக்தி அற்றவர்கள்’ என்ற முத்திரை வந்துவிடும் என்ற அச்சத்தில் மராட்டிய மக்களும் கணபதி விழாவைக் கொண்டாடத் தொடங்கினர்.

முதலில் புனேவில் பிரபலமாகிப் பின்னர் மும்பை, தானே நகரங்களில் 1930களில் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு கேளிக்கைப் பொழுதுபோக்காக கணபதி விழா மாறியது. பின்னர் திரைப்படங்கள் மூலம் கணபதி விழாவை மும்பையின் பிரமாண்டமான விழா என்று கட்டமைத்துவிட்டனர்.

முதலில் இந்த நிகழ்வு 2 நாள்கள் என்று இருந்து, பின்னர் 7, அதன் பிறகு 10 நாள்கள் என்று ஆகிப்போனது. 1980களுக்குப் பிறகு கணபதி விழா பெரும் தலைவலியாக உருவெடுத்தது.

1990 முதல் 2005 வரை கணபதி விழா என்ற பெயரில் 10 நாள்கள் மும்பை, புனே உள்ளிட்ட பெருநகரங்களில் ஒலிமாசு, நீர்நிலைகளை மாசுபடுத்தி ஒட்டுமொத்த நகரத்தின் அமைதியையே கெடுத்து நீர்நிலைகளை நாசப்படுத்தினார்கள்.

இந்த 20 ஆண்டுகளில், குறிப்பாக சிவசேனா மகாராட்டிராவில் ஆட்சிக்கு வந்த 1992ஆம் ஆண்டு காலகட்டத்தில் கணபதி விழாவிற்கு முழுமையாக சுதந்திரம் கிடைத்தது. எளிதில் கரையாத பிளாஸ்டர் ஆப் பாரிஸ், நெகிழிப் பொருட்கள், வேதிப்பொருளால் உருவான வண்ணக் கலவைகளால் விநாயகர் சிலைகளைச் செய்து நீர்நிலைகளில் கரைக்கத் தொடங்கினர்.

2004ஆம் ஆண்டு மும்பையில் உள்ள டாடா நினைவு சமூக அறிவியல் மற்றும் சூழியல் கல்வி நிறுவனம் தொடர்ந்து 40 ஆண்டுகளாக மும்பைக் கடற்கரைகளில் சேகரித்த சூழியல் அறிக்கையை வெளியிட்டது.

கட்டுரை, ஞாயிறு மலர்

தூய்மையாக்கும் மீன்கள் அழிந்தன!

அதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் “மும்பைக் கடற்கரையில் புற்று நோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் அதிக அளவு கலந்து உள்ளன என்றும், இதை உண்ணும் மீன்களால் மனிதர்களுக்குப் புற்றுநோய், ரத்தக்குழாய் அடைப்பு, நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், நினைவு இழப்பு போன்றவை ஏற்படும் என்பதாகும். ஜிங்கா எனப்படும் சிறிய இரால்வகை உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மீன் வகைகள் மும்பை கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை வசிக்கும் மீன் இனங்கள் முற்றிலும் அழிந்தே போயின. இந்த மீன் இனங்கள் நீண்ட மழைக்காலங்களில் அடித்து வரப்படும் நுண்ணுயிர்கள் மற்றும் இதர சிதைக்கப்பட்ட உணவுகளை உண்டு வாழ்ந்து கடல், கடற்கரையைத் தூய்மைபடுத்தும் துப்புரவுப் பணியாளர்கள் போன்றும் செயல்பட்டனர்.

ஆனால், கணபதி சிலைகளைக் கொண்டுபோய் தொடர்ந்து கரைத்த காரணத்தால் இந்த மீன் இனங்கள் அழிந்து போயின. இதனால் மும்பையின் கடற்கரைச் சமநிலை (பிஎச்) சிதைந்து போனது” என்று விரிவான அறிக்கை தந்தது. இதன் பிறகுதான் மும்பை மாநகராட்சி விழித்துக்கொண்டு பல கட்டுப் பாடுகளை விதித்தது. ஆனால், இவற்றை எல்லாம் அமல்படுத்தினால் மத விரோதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்கள். இதனால் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் அரசியல் கட்சிகள் வேடிக்கைப் பார்த்தன.

ஒலி மாசுவால் சகோதரனை இழந்த
சட்டமன்ற உறுப்பினர்

2010ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளில் ஒலிமாசு மிகவும் அதிகம் தொற்றிக்கொண்டது. டி.ஜே. எனப்படும் பிரமாண்ட ஸ்பீர்க்கர்களை வைத்து ஆட்டம் பாட்டம் என்ற கூத்தாட்டம் காரணமாக 10 நாள்கள் முதியவர்கள், குழந்தைகள், நோய்களினால் பாதிப்புக்குள்ளானவர்கள் எனப் பலர் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கணபதி  ஊர்வலத்தின் போது (விசர்ஜன ஊர்வலம்), மிக அதிக ஒலியில் டி.ஜே. இசைக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் மேக்னா போட்கரின் சகோதரர் ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. அமைப்புகள் ஏற்படுத்திய அதீத இரைச்சலால், அவரது உடல்நிலை திடீரெனப் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்

மேக்னாவின் நிலைப்பாடு: இந்தத் துயர நிகழ்விற்குப் பிறகு, ஒலியின் தீவிரம் காது சவ்வுகளைப் பாதிப்பது மட்டுமன்றி, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்த மேக்னா போட்கர், 2025-ஆம் ஆண்டில் பர்பானி (Parbhani) மாவட்டத்தில் டி.ஜே. பயன்பாட்டிற்கு அவர் தடை விதித்தார். மேலும், இந்தத் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த முதலமைச்சர் அலுவலகத்திற்குப் பரிந்துரைப்பேன் என்றும் அவர் கூறினார். இங்கிருந்துதான் மாற்றம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு கண்பதி விழாக்களை நடத்துவது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் புனே மாநகராட்சி அலுவலகத்தில் புனே மேயர், பாஜக அமைச்சர்கள் மற்றும் மதவாதிகள் உள்ளிட்டவர்கள் மேடையில் அமர்ந்திருக்க சுமார் 500 பேர் கொண்ட அரங்கில் நடந்துகொண்டு இருந்தது.

மேடையில் அதிகாரிகள் தலைவர்கள் எல்லோரும் கணபதி விழா குறித்து பேசிக்கொண்டு தீர்மானம்  நிறைவேற்றிக்கொண்டே இருந்தனர். கூட்டத்தினர் எல்லோரும் தலையாட்டிக்கொண்டே இருந்தனர். ஒருவர் கூட எதிர்ப்போ அல்லது ஆலோசனையோ கூற முன்வரவில்லை.

கட்டுரை, ஞாயிறு மலர்

200 ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பிய எதிர்ப்புக் குரல்

இந்த நிலையில் நடு வரிசையில் அமர்ந்திருந்த வித்யானந்த பாபட் என்பவர் “கணபதி விழாவை உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். பொது வெளியில் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வரிசைப்படுத்தலாம்” என்று கூறத் தொடங்கினர். அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது. மேடையில் இருந்த சில மதவாதிகளும், கூட்டத்தில் இருந்த சில மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சத்தம் போட்டு அவரை அமருமாறு மிரட்டல் விடுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து பேசினார்.

அப்போதுதான் அரங்கில் அவருக்கு ஆதரவாகப் பொதுமக்கள் திரண்டனர். இதனால் மதவாதிகள் மவுனமானார்கள். இந்த நிலையில் அவர் கூட்டத்தில் பேசிய காணொலி சமூகவலைதளங்களில் வெளியானது. ஒரே நாளில் பல்லாயிரம் பேர் பார்த்தனர். நீண்ட காலமாக கணபதி விழா என்ற பெயரில் மக்களுக்குத் தரப்பட்ட தொல்லையைக் கண்டு எதிர்க்குரல் கொடுக்க அஞ்சிய புனே நகர மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் இந்தப் பெரும் ஆதரவு காரணமாக மதவாத அமைப்புகளின் வருவாய் பாதிப்பு மற்றும் தங்களின் மதவாதப் பரப்புரையைத் தொடர்ந்து செய்வதில் தடை ஏற்படும் என்ற காரணத்தால் ஹிந்துத்துவ சில்லறை சமூகவிரோதிகள் வித்யானந்த் பாப்டே-வைத் தாக்கினர். கொலை மிரட்டல் விடுத்தனர். சிலர் “நரேந்திர தாபோல்கருக்கு என்ன நடந்தது என்று தெரியுமா? அதே நிலைதான் உனக்கும், எச்சரிக்கையாக இரு” என்று மிரட்டினர்.

இதனால் அவருக்கு அரசுப் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.  மக்கள் அவருக்கு ஆதரவாகச் சாலைகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். புனே வரலாற்று ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டையாக இருந்து வருகிறது. அங்கே கணபதி விழாவிற்கு எதிராக ஒருவர் குரல் எழுப்ப ஒட்டுமொத்த மக்களும் அவருக்கு ஆதரவாகத் திரும்புவது சாதாரண நிகழ்வல்ல, ஒட்டுமொத்த மக்களும் ஒரே ஒரு எதிர்ப்புக் குரலுக்காக காத்திருந்தனர்.

கடந்த ஆண்டு மகாரட்டிராவில் சோலாப்பூர், பர்பானி, வார்த்தா மற்றும் அகமதுநகர் போன்ற மாவட்டங்களில் டிஜே இசையும், பிரமாண்ட விநாயகர் பந்தல்களும் தடை செய்யப்பட்டன. திருவிழாக்கள் என்பன  அமைதியான, அழகான – முதியவர், சிறுவர்கள் என அனைவருமே கொண்டாடும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களாக இருக்க வேண்டுமே தவிர,  எரிச்சலூட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது என்பதைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார் வித்யானந்த பாப்டே.

செவித்திரை கிழிந்தது நிரந்தர செவிடாகிய கோரம்!

டி.ஜே. அமைப்புகளில் தற்போதைய காலத்தில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான ஒலிபெருக்கிகள் காதுகளைப் பாதிக்கும் அளவிற்கும், நோயாளிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் அளவிற்கும் மிக அதிக ஒலியை எழுப்புகின்றன. ஆய்வுகளின்படி, பண்டிகைக் காலங்களில் இந்த ஒலி அளவு 80 முதல் 100 டெசிபல்களைத் தாண்டுகிறது.  இது அரசு நிர்ணயித்த ஒலி அளவுக் கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது.

புனேவில் உள்ள பல கணபதி மண்டலங்கள் அரசியல் கட்சிகளுடன், குறிப்பாக பாஜகவுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளன. 2017 உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்த மண்டலங்கள் அரசியல் ரீதியான செல்வாக்கை உருவாக்கவும், மக்களைச் சென்றடையவும் ஒரு கருவியாக மாறியுள்ளன. இந்த மண்டலங்களை பகைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் தயங்குகின்றன

தென்னகத்தை நோக்கி

கடந்த  10 ஆண்டுகளாக ஹிந்துத்துவவாதிகள் பெரிய கார்ப்பரேட்டுகளின் நிதி உதவியோடு பெங்களூரு, அய்தராபாத், சென்னை, கோவை என “பிரமாண்ட” கணபதி சிலைகளை வைத்து இங்கும் பொது மக்களுக்கு பெரும் இடையூறுகளைச் செய்யும் வேலையை நடத்தி வருகின்றனர்.

கருநாடகாவில் 2024ஆம் ஆண்டு பாஜகவை தோல்வியடையச் செய்து சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.  முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கருநாடகாவில் பரவிவரும் ஹிந்துத்துவ ரவுடிகள் நடவடிக்கையை ஒடுக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் கணபதி மண்டல்கள் அமைப்பது குறித்தும் கடுமையான விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டன.

இதனால் 2025ஆம் ஆண்டு பெங்களூருவில் 20 விழுக்காடு கணபதி மண்டல்கள் குறைந்து போயின.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை நகரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக காளான்களைப் போல் முளைத்த கணபதி மண்டல்கள் மெல்ல மெல்ல திருச்சி, மதுரை நெல்லை நகரங்களிலும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

கணபதி விழாக்களின் தாயகமான மகாராட்டிராவிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் ஹிந்துத்துவவாதிகளின் அடுத்த நகர்வு தமிழ்நாடகத்தான்  இருக்கும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *