வேளாண் மக்களை வெறுத்தொதுக்கும் பா.ஜ.க.வின் போக்குகள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன.
தற்போது நெல், கோதுமை போன்ற பயிர்களுக்கு ஒன்றிய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ள குறைந்த அளவு தாங்கும் விலைக்கும் மேலாகத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் வழங்கிவரும் ஊக்கத்தொகையினை நிறுத்துமாறு பா.ஜ.க. அரசு தெளிவாகவே மடல் எழுதி நெருக்குதல் தருகிறது.
இதனைத் தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியபோது, வெகுண்டெழுந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊக்கத்தொகையினை நிறுத்துமாறு அந்த மடலில் குறிப்பிடவில்லை என்று உண்மைக்கு மாறாக விரிவான விளக்கம் தந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அந்த மடலினை வெளியிட அறைகூவல் விடுத்தார். தனது அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது அறியாமல் செயல்படும் நிர்மலா, மடலினை மீண்டுமொருமுறை படித்துக்கூடப் பார்க்கா மல் அப்படியே வெளியிட்டுவிட்டார். அத்துடன், நில்லாமல் அந்த ஆங்கில மடலே உண்மைக்குச் சான்றாக அமைந்திருக்கும்போது, அதில் இல்லாத விவரங்களை விளக்கங்களாக முன்வைத்து உண்மையை மறைக்கவும் முயல்கிறார்.
ஊக்கத்தொகையை
நிறுத்தக் கூறும் பா.ஜ.க.
ஒன்றிய அரசின் நிதித் துறையின்கீழ் இயங்கும் செலவுப் பிரிவின் செயலாளர் 09.01.2026 அன்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய மடலில் கூறப்பட்டுள்ள விவரங்கள் இவை:
- அண்மைக் காலங்களில், கோதுமை மற்றும் நெல் மிகு அளவில் உற்பத்தியாவதால், வேண்டலைவிடமிகு அளவில் இருப்புகள் உள்ளன.
- இந்த மிகு இருப்பு ஆண்டுதோறும் தொடர்ந்து மிகுவதால், அரசின் பொருளாதார வளங்களுக்குச் சுமையை ஏற்படுத்துகிறது.
- தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள், ஒன்றிய அரசின் விலைக்கும் மேலாகக் கோதுமை மற்றும் நெல்லுக்குக் கூடுதல்ஊக்கத்தொகை தருவது இவற்றின் உற்பத்தியை மிகுவிக்கிறது.
- கோதுமை மற்றும் நெல் பயிரிட மிகு அளவு நீர், உரங்கள் மற்றும் பிற உள்ளீடுகள் வேண்டியிருப்பதால், நிலத்தடி நீர் வறட்சியையும் மண் வளக் குறைவையும் ஏற்படுத்தி, காலநிலை மாற்றம் நலக்கேடு ஆகிய வற்றைக் கொண்டுவருகின்றன.
- ஆனால், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பதால், மிகு இறக்குமதிக்கு நம்மைத் தள்ளுகிறது.
- மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் தற்போதைய ஊக்கத்தொகைக் கொள்கையை மீளாய்வு செய்து, கோதுமை மற்றும் நெல்லுக்கான ஊக்கத்தொகையினை நிறுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.
- மாறாக, ஊட்டச்சத்துக் காப்பு மற்றும் நிலைத்த வேளாண்மையை முன்னிறுத்தும் தேசிய முன்னுரி மைகளுக்கேற்ப, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டுகிறேன்.
அறிவுறுத்தல் அல்ல வலியுறுத்தல்
இதில், ஊக்கத்தொகையினை நிறுத்துவது குறித்து, மறைவில்லாமல், நேரிடையாகவே வலியுறுத்தி யிருப்பது தெளிவாகவே உள்ளது.
அடிப்படையிலேயே இவை நிதி அமைச்சகத்துடன் தொடர்புள்ள பொருள்களாக இருக்கவில்லை. உணவு உற்பத்தி, பயிர்களின் தேர்வு, மண் வளம், விரிவாக்கம், இருப்பு, மக்களின் வேண்டல்களுக்கேற்பப் பகிர்வு ஆகிய அனைத்தும் வேளாண்மை மற்றும் உணவு வழங்கல் அமைச்சகங்கள் தொடர்புடையனவாகும்.
சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உணவுப் பொருள் பெருக்கம் குறித்த எதிர்பார்ப்பு அளவினை முன்மொழிந்து, உற்பத்திப் பெருக்கம் குறித்துக் கூற நிதியமைச்சகத்துக்கு உரிமையும் கடமையும் பொறுப்பும் இல்லை.
உற்பத்தி அளவு, உள்நாட்டின் வேண்டல்கள், இருப்பு போன்ற பலவற்றையும் கருத்தில்கொண்டு, தொடர்புள்ள வேளாண்மை மற்றும் உணவு வழங்கல் அமைச்சகங்களின் அறிவுரைகளையும் பெற்று, ஏற்றுமதி அல்லது இறக்குமதியினை வணிக அமைச்சகம்தான் முடிவெடுக்க வேண்டும்.
பருப்பு, எண்ணெய் வித்துக்கள் பற்றாக்குறை என்றாலும், உள்நாட்டின் உற்பத்தி வாய்ப்புகள், உற்பத்திச் செலவு, உடனடி வேண்டல், வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்யும்போது ஏற்படக்கூடிய செலவு போன்றவற்றை வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகங்களுடன் இணைந்து வணிக அமைச்சகம்தான் முடிவுசெய்ய இயலும். எடுத்துக்காட்டாக, வெளிநாடுகளில் உற்பத்தி மிகுந்து, குறைந்த விலைக்குப் பருப்பு, எண்ணெய் வகைகள் கிடைக்கும்போது, உள்நாட்டு உற்பத்திச் செலவையும் மனதில்கொண்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கலாம்.
இவை யாரும் கொள்கை தொடர்பான முடிவுகளாகும். நிதி அமைச்சகத்தின் பங்கு என்பது இறக்குமதிச் செலவுகளுக்கான ஒதுக்கீடு மட்டுமேயாகும்.
தொடர்பில்லாத நிதி அமைச்சகம்
நெல், கோதுமை உற்பத்தி மிகுந்துவிட்டதால், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்தி யாகவேண்டும் என்பதெல்லாம் நிதியமைச்சகத்தின் கீழ் வரவில்லை. அப்படியிருந்தும், என்ன பயிரிடவேண்டும், எப்படிப் பயிரிடவேண்டும், ஏன் பயிரிடவேண்டும் என்பவற்றில் நிதி அமைச்சகம் ஏன் தலையிடுகிறது?
அந்த மடலினுடைய நோக்கமே வேளாண் மக்களுக்கு தரப்படும் ஊக்கத்தொகையை நிறுத்தவேண்டும் என்பது மட்டும்தான்.
பயிரை முடிவு செய்வது யார்?
நிலம், நிலத்தின் தரம், நீர் வாய்ப்புகள், ஆண்டில் நீர் கிடைக்கும் கால அளவு, வடிகால் அமைப்பு, பருவநிலை, பயிரினால் கிடைக்கும் வருவாய் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான உற்பத்தி அமைகிறது. இவற்றைக் கருதித்தான் வேளாண் மக்கள் எதைப் பயிரிட வேண்டும் என முடிவு செய்கின்றனர்..
நெல் அல்லது கோதுமை உற்பத்தியாகும் பல இடங்களில் பருப்பு வகைகளும் எண்ணெய் வித்துக்க ளும் பயிரிட இயலாத நிலை இருக்கும்.
காலாண்டிலிருந்து முழு ஆண்டு வரை பயிர்கள் பலவாக உள்ளதால், நினைத்தவுடன் மாற்றுவதும் அரசு ஆணையிட்டுத் தடுப்பதும் அவ்வளவு எளிதல்ல. கரும்பு போன்ற ஓராண்டுப் பயிர்களும் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக விளைவைத் தருகின்றன என்பதையும் காணவேண்டும்.
ஊக்கத்தொகை தருவதால் மட்டுமே பயிரிடுவோர் ஒரு குறிப்பிட்ட பயிரைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களது சூழ்நிலைக்கு ஏற்பத்தான் தேர்வு பயிர்கள் செய்யப்படுகின்றன. ஏனெனில், இந்த ஊக்கத்தொகை மட்டுமே பயிரிடுவோர்க்குப் பெரும் பயன் தந்துவிடவில்லை. இந்தச் சிறு உதவியையும் பறிக்கப் பா.ஜ.க. எண்ணுகிறது.
ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் விலை கட்டுபடியாக வில்லை, நியாயமான விலை கிடைக்கவில்லை என்பதால்தானே ஊக்கத்தொகை வழங்க வேண்டிய நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்படுகின்றன
நிலம் என்ற இடத்தையே நின்று பார்க்காத நிர்மலாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அல்லது நிதியமைச்சகத்தில் இருக்கின்ற உயர் அலுவ லர்களுக்குத்தான் என்ன தெரியும்?
விலை தந்தால்
விளைச்சல் கிடைக்கும்
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய வற்றின் உற்பத்தி மிகவேண்டும் என்பது உண்மைதான். உரிய விலை தந்தால் விளைச்சல் தானாகப் பெருகும்.
உண்மையில் நெல், கோதுமை போன்றவை உற்பத்தி மிகுந்திருந்தால் ஏற்றுமதி செய்து அயலகப் பணத்தை ஈட்ட முடியுமல்லவா? வித்துக்களுக்கும் பருப்பு வகைகளுக்கும் செலவாகும் அந்த அயலகப் பணத்துக்கு ஈடாக நெல், கோதுமை ஏற்றுமதி உதவும் அல்லவா? இதை ஏன் நிதியமைச்சர் நிர்மலா புரிந்துகொள்ளவில்லை.
ரசிய – உக்ரைன் போரினால் உலக அளவில் உணவுப் பகிர்தலில் பல தடைகளை ஏற்பட்டுள்ளன. இதனால் கோதுமை, அரிசி ஏற்றுமதி நடக்கக்கூடியதுதான்.
உற்பத்தியைக் குறைக்கச் சொல்லும் ஒன்றிய அரசு, கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்துள்ளது. அரிசி ஏற்றுமதியின் தடை 2024இல் நீக்கப்பட்டாலும், பல கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த நிலையில் நெல், கோதுமை உற்பத்தியைக் குறைக்கச் சொல்வது முரண்பாடாகத் தெரிகிறது.
இந்திய ஒன்றியத்தில் பெருமளவுள்ள எளியோர், நெல், கோதுமை ஆகிய உணவு வகைகளுக்கு அப்பால் வேறு வகை உணவுப் பொருள்களை வாங்கும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கான உணவுக் காப்பு அடிப்படையானதாகும். ஆழ்ந்து பார்க்காமல் இன்று நெல், கோதுமை உற்பத்தியைக் குறைத்துவிட்டால், அடுத்துக் கால நிலை மாற்றத்தில் உற்பத்திக் குறைவு ஏற்பட்டால், எளிதில் மீளவும் நெல், கோதுமை உற்பத்தியை ஒரே நாளில் மிகுவிக்க இயலாது என்பதை யும் கணக்கில் கொள்ளவேண்டும்.
கொள்முதலும் –
ஊக்கத்தொகையும் ஏன்?
ஒன்றிய அரசின் குறைந்த அளவு தாங்கும் விலைக்கு மேலாக வேளாண் மக்களுக்கு ஊக்கத்தொகையினை மாநில அரசுகள் தமது தனிப்பட்ட நிதியிலிருந்துதான் வழங்கிவருகின்றன.
இதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. முதலாவது, ஒன்றிய அரசின் விலை பயிரிடுவோருக்குக் கட்டுப்படியாகாமல் இருப்பது. அடுத்தது, ஒன்றிய அரசின் முகவராகச் செயல்படும் மாநில அரசு, நேரடியாக நெல் கொள்முதல் செய்யும்போது, அங்காடி விலை மிகுந்திருந்தால் அரசு கொள்முதல் தடைப்படலாம். இதனையொட்டி ஊக்கத்தொகை வேண்டியதாகிறது. அங்காடி விலை குறையும்போது, பயிரிடுவோர் இழப்பை ஈடு செய்வதும் நோக்கமாகிறது.
பொது வகை நெல்லுக்கு ஒன்றிய அரசின் விலை ஆயிரம் கிலோ கொண்ட குவிண்டாலுக்கு ரூ. 2366. தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை ரூ. 131. ஆக ரூ. 2500. மெல்லிய வகை நெல்லுக்கு ஒன்றிய அரசின் விலை ரூ. 2389. தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை ரூ. 156. ஆக ரூ. 2545. தமிழ்நாடு வழங்கும் இந்த சிறு தொகையினைக்கூடப் பா.ஜ.க.வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
2024-2025இல் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி 79.8 லட்சம் டன். ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் 47.99 லட்சம் டன் மட்டுமே.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நெல்லில் ஏறத்தாழ 60% மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்குத்தான் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 40% உற்பத்தி வெளி அங்காடியில்தான் விற்பனையாகிறது. ஆகவே உணவுப் பெருக்கம் அல்லது இருப்பு மிகுதி என்றால் கொள்முதலை நிறுத்திக் கொள்ளவேண்டும். வெளி அங்காடியில் விலை குறைந்தால், ஒன்றிய அரசு விலையைக் கூட்டிக் கொடுக்கலாம். அப்போது மட்டுமே அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும்.
இப்போதுகூட, பருப்பு, எண்ணெய் வித்து ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க மிகுவிலை தரப்போவதாக ஒன்றிய அரசு உறுதியும் கூறவில்லை. அவற்றுக்கு ஊக்கத்தொகை தரலாம் என்றுகூட ஒன்றிய அரசின் மடல் பரிந்துரைக்கவில்லை.
வேளாண் மக்களுக்கு
பா.ஜ.க. என்றும் பகைதான்
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கடந்த மூன்று தேர்தல்களிலும் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
உற்பத்திச் செலவிருந்து ஒன்றரைப் பங்கு கூடுதலாக விலை தரப்போவதாக கூறியதையும் கண்டு கொள்ளவில்லை.
வேளாண்மைக்குப் பகையான மூன்று சட்டங்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.
தமிழ்நாட்டிலுள்ள வேளாண் கிணறுகளுக்குக் கட்டணமில்லாமல் வழங்கும் மின் இணைப்புகளுக்குத் தொகை பெற்றாகவேண்டும் என்பதை அவ்வப் போது வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வற்பு றுத்திக்கொண்டிருப்பது மோடியின் பா.ஜ.க. அரசுதான்.
10 ஏக்கருக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஒன்றிய அரசு தருகிறது. இதுவும் ஒரு வகை ஊக்கத்தொகைதானே!
நிர்மலா சீதாராமன் மொழியில், ஊக்கத்தொகை தருவது ஒன்றிய அரசாக இருந்தால் ஏற்கத்தக்கது, மாநில அரசாக இருந்தால் எதிர்க்கத் தக்கது என்றாகிறதா?
நெல்லுக்கான ஊக்கத்தொகை மாநிலத்தின் வருவாயில் பெரிதாக இருக்கவில்லை. இந்த ஊக்கத்தொகை உற்பத்தி அளவையும் முடிவு செய்ய வில்லை. இருந்தும் மோடியின் பா.ஜ.க. வேளாண் மக்களைத் தண்டிக்கவே முயல்கிறது.
வேளாண் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என உறுதியளித்த பா.ஜ.க. முகத்திரை இப்போது கிழிகிறது.
நன்றி: ‘ஜனசக்தி’ 19.4.2026

