ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை பன்னாட்டு கூட்டுறவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகத்தை ஒன்றிய அரசு தொடங்கி அய்ந்து ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு, கூட்டுறவு அமைச்சகத்தால் ஓராண்டு கால விழா முன்னெடுக்கப்பட்டு, ஜூலை 6 அன்று டில்லியில் நிறைவு விழா கொண்டாடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்தான் இந்தியாவின் கூட்டுறவு வங்கிகளின் முதல் பெண் இயக்குநராக இருந்தார் என்பது இந்தக் கொண்டாட்டத்துக்கு ஒளியூட்டுகிறது. அந்தப் பெருமைக்குக் காரணமானவர் பெரியாரின் தங்கை
சா.ரா.கண்ணம்மாள்.
1891-ஆம் ஆண்டு ஈரோட்டில் சின்னத் தாயம்மாள் – வெங்கட்டர் இணையருக்கு மகளாகப் பிறந்தவர் கண்ணம்மாள். எஸ்.ராமசாமி என்பவரை மணமுடித்த பின்னர், எஸ்.ஆர்.கண்ணம்மாள் என்று அறியப்பட்டார். பெரியாரின் சீர்திருத்தப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காந்தியார் அறிவித்த கள்ளுக்கடைப் போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தைக் கைவிடுமாறு ஆங்கிலேயர்கள் காந்தியாரிடம் கோரிக்கை விடுத்தபோது, “இப்போராட்டத்தைக் கைவிடுவது என் கையில் இல்லை. ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளின் கையில்தான் உள்ளது” என்று கூறினார். கண்ணம்மாளும் பெரியாரின் மனைவி நாகம்மையாரும்தான் அந்த இரண்டு பெண்கள்!
1933-இல் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என்கிற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் எழுதினார் பெரியார். அதற்காக அவர்மீது ராஜ நிந்தனைக் குற்றம் சாற்றப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதழின் வெளியீட்டாளர் என்பதால் கண்ணம்மாளுக்கும் தண்டனை அளிக் கப்பட்டு, சிறை சென்றார். ஆனால் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கண்ணம்மாளின் பெயர் எங்குமே இடம்பெறவில்லை.
அக்காலத்தில் கூட்டுறவு இயக்கத்தில் பெண்கள் ஈடுபடுவது மிகவும் அரிது. 1935-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள கூட்டுறவுப் பயிற்சி சாலைக்கு ஒரு மாணவி வந்திருப்பதை, கபசுனம் என்று மகிழ்வுடன் பாராட்டி எழுதினார் எல்.சரஸ்வதி (கூட்டுறவு இதழ், ஜூலை 1935). ஆதரவற்ற, வயதான பெண்கள் தங்களது சுயதேவையை முன்னிட்டு கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்கி சுயவேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று ‘பெண்களும் கூட்டு றவுச் சங்கமும்’ என்கிற கட்டுரையில் சிறீமதி பாலம்பாள் குறிப்பிடுகிறார் (கிரகலக்ஷ்மி இதழ், பிப்ரவரி, 1942). இவ்வாறு பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாக இருந்த நிலையில், 1934-ஆம் ஆண்டு ஈரோடு கூட்டுறவு நகர வங்கிக்கு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 இயக்குநர்களில் ஒரே ஒரு பெண் கண்ணம்மாள்.
கூட்டுறவு வங்கியில் மட்டுமன்றி, ஈரோடு நகராட்சியிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்லாண்டு காலம் பணிபுரிந்தார் கண்ணம்மாள். நகராட்சிப் பணிகளில் பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானம் கொண்டு வந்தார். கண்ணம்மாளின் போராட்ட வரலாறும் அவரது சமூகப் பங்களிப்பும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை.
– வெற்றிச்செல்வன் (இந்து தமிழ் திசை)
