அலகாபாத், செப்.08 நொய்டா தொழிலாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் அடைக் கப்பட்ட 25 வயதான டில்லி பல்கலைக்கழக மாணவி ஆகிருதி சவுத்ரியின் சிறைவாசத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் அதுல் சிறீதரன் மற்றும் அச்சல் சச்தேவா அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் கவுதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்புப் மீறல்: மாவட்ட ஆட்சியர் மேதா ரூபமின் நடவடிக்கை “எள்ளி நகையாடத்தக்கது மற்றும் இழிவானது” எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவர் அரசியல் தலைமைகளுக்கு அல்லாமல் அரசி யலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே உண்மையுள்ளவராக இருக்க வேண்டும் என்ற பதவியேற்பு உறுதியை மீறியுள்ளார் எனச் சாடியது.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் குரல் கொடுத்த மாணவியைப் பழிவாங்கும் நோக்கோடும், மற்றவர்களுக்கு “பாடம் புகட்டும்” நோக்கத்தோடும் மட்டுமே இந்த என்எஸ்ஏ (NSA) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் இத்தகைய அலட்சியமான மற்றும் சர்வாதிகாரப் போக்கிலான செயல்பாடுகள், உத்தரப் பிரதேச மாநிலத்தைக் “கட்டுப்பாடற்ற சர்வாதிகாரப் பகுதியாக” (Orwellian Dystopia) மாற்றிவிடும் ஆபத்து உள்ளது.
பாதிக்கப்பட்ட ஆகிருதி சவத்ரிக்கு வழங்க வேண்டிய ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை, மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் மற்றும் இதற்குப் பொறுப்பான பிற காவல் அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த நீதிமன்றக் கண்டனத்தை ஆட்சியரின் சேவைப் பதிவேட்டில் பதிவு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் தற்போது பல குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் ஞானேஷ்வர் குமாரின் மகளாவார்.
