கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 66-இல், கைப்பமங்கலம் பகுதியில் உள்ள பணம்பிக்கன்னு என்ற இடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:40 மணியளவில் நடந்த கோர விபத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த எட்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களை முந்திச் செல்வதற்கான தடம் தான் சாலையின் வலப் பகுதியாகும். அங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது என்பது மிகச் சாதாரண அறிவு ஆகும். ஆனால், அங்கு விதிகளுக்குப் புறம்பாக நிறுத்தப்பட்டிருந்த மகாராட்டிரா பதிவு எண் கொண்ட சரக்குந்து (லாரி) மீது அந்த மாணவர்கள் வந்த மகிழுந்து மோதியதால் தான், மகிழுந்தே சின்னாபின்னமாகும் அளவுக்கு அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிவேகமாகச் சென்ற துயருந்து (அதை மகிழுந்து என்று சொல்ல முடியுமா?), சரக்குந்தின் பின்புறத்தில் மோதுவதற்கு முன், சாலைப் பணிகள் காரணமாக மாற்றப்பட்டிருந்த பாதை அறிவிப்பையும், தடுப்பையும் ஓட்டுநர் கவனிக்கத் தவறியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த இடத்திலேயே ஆறு மாணவர்கள் உயிரிழந்தனர்; மற்ற இருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
படிக்க அனுப்பிய மாணவர்கள் ஒரு கோர விபத்தில் உயிரிழந்த கொடுமையை அக் குடும்பங்கள் மட்டுமல்ல, இத்தகைய பயணங்களுக்கு அனுப்பும் பெற்றோரும் உளவியல் ரீதியாக இக் கொடுமையை அனுபவிப்பது உண்மைதான். ஆனால், இவ் விபத்திற்கான காரணங்கள் என்ன?
படிக்கும் மாணவர்களுக்கு, குடும்பத்தின் வசதிகளுக்கு மீறி, வாங்கித் தரப்படும் அதிவேக வாகனங்கள். அவை இருசக்கர வாகனங்களாக இருந்தாலும், நான்கு சக்கர வாகனங்களாக இருந்தாலும், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக அளவைத் தாண்டிச் செல்லும் போது அட்ரினல் சுரப்பிகளால் ஏற்படும் சிலிர்ப்பு உணர்வுக்காக (Thrill) அதிவேகப் பயணத்தை விரும்பும் போக்கு அனைத்துக் காரணங்களிலும் தலையாயது. எத்தனை இருக்கைப் பட்டைகளும், பாதுகாப்பு பலூன்களும் இருந்தாலும், இப்படி நசுங்கிப் போகும் அளவுக்கு ஒரு வாகனத்தைக் கொண்டு போய் மோதினால், எப்படிக் காப்பாற்ற இயலும்?
இந்தியாவில் நிகழும் மொத்த விபத்துகளில் ஏறத்தாழ அய்ந்தில் ஒரு பங்கு விபத்துகள், 25 வயதுக்குக் கீழ் உள்ள ஓட்டுநர்களால் நடைபெறுகிறது என்று தரவுகள் சொல்கின்றன. இவர்களில் தொழில்முறை ஓட்டுநர்கள் தவிர, பெரிதும் தாங்களே தங்களுக்காக வாகனங்களை ஓட்டும்போதுதான், இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் தற்பெருமைக்காக அதிவேக வாகனங்களை வாங்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதை விடக் கொடுமை, 18 வயதுக்கு முன்பு வாகனங்களை ஓட்டி விபத்துகளில் சிக்குவோர் எண்ணிக்கை ஏறத்தாழ 20% அளவு என்பது முற்றிலும் பெற்றோரின் தவறே அல்லவா? கடந்த ஆண்டின் ‘ஒருங்கிணைந்த சாலை விபத்துத் தரவுத்தள’ (iRAD) புள்ளிவிவரங்களின்படி, வாகனங்களைச் சிறார் இயக்கும் குற்றங்களில் 2,063 வழக்குகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
அதில், ‘வீலிங்’ என்னும் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை உயர்த்தி ஓட்டுதல், பந்தயத்திற்கு ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், இதர நேரங்களில் அதிவேகமாக வண்டி ஓட்டுவது பலரின் இயல்பாகும்.
பொதுவாகவே, அதிவேகப் பயணங்கள் தான் 64.4% விபத்துகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இதனை ஒப்பிடும் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டி, இறப்புக்குக் காரணமான நிகழ்வுகள் குறைவுதான். ஆனால், மேற்சொன்ன விபத்தில் குடிபோதையும் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்றே தெரிகிறது. இறந்த மாணவர்களில் ஏழு பேர் உடம்பில் ஆல்கஹால் இருந்தது தெரியவந்துள்ளது. (இந்த விபத்துக்குச் சற்று முன்னதாகவே மற்றொரு வாய்த் தகராறில் இருந்து, அதிலிருந்து தப்பி வந்துள்ளனர்.) வேகம், மது என்னும் இரண்டு போதைகளும், இரவு நேரப் பயணமும் சாலை விதிகளுக்குப் புறம்பான வாகன நிறுத்தமும் இவ் விபத்தில் எட்டு இளைஞர்களின் உயிர்களைப் பறித்துள்ளது.
இத்தகைய தேர்வுகளுக்குப்பின், வருந்துவதைக் காட்டிலும், சாலை விதிகளைப் பின்பற்றுதல், வேகக் கட்டுப்பாடு, முறையான பயிற்சி, உற்சாகத்தை ஓட்டுதலில் காட்டாதிருத்தல், ‘ஹீரோயிச வியாதி’க்கு உட்படாதிருத்தல் ஆகியவையே இளைஞர்கள், மாணவர்களின் உயிர்க்காப்புக்கு அவசியம். இளமை முறுக்கில் எதிர்கால வாழ்க்கையை நசுக்கிவிடக் கூடாது!
