சிவகாசி, செப்.04 தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்டாசு ஆலைகளுக்கான உரிமம் (லைசென்ஸ்) வழங்குவது தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், லஞ்சம் கேட்கப்படுவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “இந்த ஆட்சியில் பட்டாசு ஆலைக்கு உரிமம் பெற ஒரு ரூபாய் கூட பெறாமல், 177 பட்டாசு ஆலை களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “முந்தைய காலத்தில் நிறுத்தப் பட்ட பட்டாசு ஆலைகளுக்கான உரிமங்கள் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை தற்போதைய அரசு செய்து வருகிறது. ஆனால், உரிமம் பெற லஞ்சம் கேட்கப்படுவதாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் புதுப்பித்துத் தருவதாகவும் சில பட்டாசு சங்க நிர்வாகிகள் எனக்கு மின்னஞ்சல் (Mail) மூலம் புகார் அனுப்பியுள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத்தில் இந்த விவாதம் பெரும் புயலைக் கிளப்பிய சூழலில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாமரத்துப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்புராஜ் என்பவர் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜயகரிசல்குளத்தில் வசித்து வரும் அவர் 60 சதவீத மாற்றுத்திறனாளி ஆவார். அவர் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, எனது சகோதரர்கள் எனக்கு ஒரு பட்டாசு கடை வைத்துக் கொடுத் துள்ளனர். ஆனால், இதற்கான உரிமம் பெற தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் அனைத்து இடங்களிலும் பணம் கேட்கிறார்கள். அனுமதி கடிதம் கொடுத்த பிறகும் தொலைப்பேசியில் அழைத்து லஞ்சம் கேட்கின்றனர். என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இந்த காட்சிப் பதிவைப் பார்க்கும் அனைவரும் இதனை அதிகளவில் பகிர்ந்து, எனக்கு லஞ்சம் இன்றி உரிமம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என மனவேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாசு ஆலைகளுக்கு லஞ்சமின்றி அனுமதி வழங்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டி வெளியிட்டுள்ள இந்த காட்சிப் பதிவு தற்போது இப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.மீது குற்றம் சாட்டிய அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பதிலடி கொடுத்த மாற்றுத்திறனாளி
Leave a Comment
