மேகதாது அணைகட்ட அனுமதி அளிக்கக்கூடாது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு; ஆகஸ்ட் 31இல் விசாரணை!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 29- மேகதாது அணைத் திட்ட விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்தவித அனுமதியோ அல்லது உத்தரவையோ பிறப்பிக்கக் கூடாது எனத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

காவிரிப் படுகை என்பது ஒரு பற்றாக்குறைப் படுகையாகும். இதனால் சிறிய அளவிலான நீர் திட்டங்களுக்குக் கூட அனுமதி அளிக்க முடியாது என காவிரி நதிநீர் தீர்ப்பாயம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி, கருநாடகாவின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்துள்ளது.

காவிரிப் படுகையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், புதிய திட்டங்களைச் செயல்படுத்த முற்படுவது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும். “கீழ் பாசன மாநிலங்களுக்கு நீர் விநியோகம் பாதிக்கும் வகையில் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேல் பாசன மாநிலங்கள் செயல்படுத்தக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. அதேபோல, காவிரி நீர் விவகாரத்தில் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாறாக, காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கும் வழிகாட்டுதல்கள் வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பயனற்றதாக்கிவிடும். எனவே காவிரியில் புதிய நீர் திட்டங்களை ஆய்வு செய்வது, அனுமதி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே கருநாடக அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேமிப்புத் திட்டங்கள் மூலம் சுமார் 218 டி.எம்.சி. நீர் சேமிக்கப்படுகிறது. இது பருவமழை காலத்தில் 327 டி.எம்.சி. ஆக அதிகரிக்கும். இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், கருநாடகாவுக்கு நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட பங்கான 284.75 டி.எம்.சி. நீரை விட இது அதிகமாகும்.

இவ்வாறு கூடுதலாகச் சேமிக்கப்படும் நீரையே நகரங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, குடிநீர் தேவைக்காக புதிதாக ஓர் அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை. புதிய நீர்த்திட்டங்கள் தொடர்பாக எந்தவொரு பரிசீலனையும் செய்யத் தேவையில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கான பரிசீலனை மற்றும் அனுமதி உள்ளிட்ட விவகாரங்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முடிவெடுக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த மனு வரும் நாளை மறுநாள் (31.8.2026) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *