சிறீஅரிகோட்டா, செப். 4- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘இஓஎஸ்-05’-அய் சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்’ இன்று (செப். 4) அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘ஜூசாட்-1ஏ’ என அழைக்கப்படும் ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலத்தின் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
இது வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படுகிறது. இது ஜிஎஸ்எல்வி ரகத்தில் 19ஆவது ராக்கெட்டாகும்.
இந்திய துணைக் கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்படவுள்ளதால், மல்டி-ஸ்பெக்டரல் மற்றும் ஹைப்பா்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலமாக இந்தியாவின் நிலப் பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து, புவி கண்காணிப்பு, வானிலை, பேரிடா் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயனளிக்கும் வகையில் நிகழ்நேரத்துக்கு நெருக்கமான படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக் கோள்.
