கோவை, செப்.2- ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவன், தோழியுடன் கைது செய்யப்பட்டார்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சொகுசாக வாழ ஆசைப்பட்டு அவதிப்படுவதை நிம்மதியாய் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் ஆடம்பர வாழ்க்கைக்காக தங்களின் நிம்மதியான வாழ்க்கையையும், எதிர்காலத்தையும்இழந்து விடுகிறார்கள். அப்படித்தான் கோவையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவனும், மாணவியும் சிக்கிக் கொண்டு உள்ளனர்.
கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 30ஆம் தேதி மாலை சரஸ்வதி என்ற மூதாட்டி தனது உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் முகவரி கேட்பது போல்வந்து பேச்சுக் கொடுத்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த ஒரு பெண் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கூச்சலிட்டார். உடனே அந்த 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் நிகழ்வு இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் கண்டறியப் பட்டது. அதன் அடிப்படையில் விசாரித்து கே.ஜி.சாவடியில் ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் திருப்பூரை சேர்ந்த மாணவன் பரணிதரன் (வயது 21) என்பவரை பிடித்தனர்.
அவரும், அவரது கல்லூரி தோழியான நெல்லையை சேர்ந்த சிந்து என்பவரும் சேர்ந்து ஆடம் பரமாக வாழ்வதற்காகவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களைக் குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த சிந்து மற்றும் பரணிதரனை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைத் தொலைபேசிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவை தெற்குபகுதி காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரும், நிகழ்வு நடைபெற்ற 24 மணி நேரத்துக்குக்குள், கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க கண்காணிப்பு கேமரா மிகவும் உதவியது. கைதான மாணவனும், மாணவியும் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளனர். மாணவன் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி மாணவிக்கு ஆடம்பரமாக செலவழித்துள்ளார். அந்த கடனை அடைக்கவும், புதிதாக கார் வாங்கி சொகுசாக சுற்றவும் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முதல்முறையாக குற்றச்செயலில் ஈடுபட்ட போது சிக்கிக்கொண்டனர் என்றார்.
