சென்னை, ஜூன் 2- தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
பயிர்க்கடன்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த தேர்தல் சமயத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் விவசாயப் பெருமக்கள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவதால், இந்த கடன்தள்ளுபடி அவர்களுக்கு பெரும் பக்கபலமாக இருக்கும். எனவே, அரசு காலம் தாழ்த்தாமல் இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பகுதி அளவாக இல்லாமல், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி அரசு இந்த கோரிக்கையை உடனே பரிசீலிக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வி அமைச்சருக்கு எதிராக போராட
காக்ரோச் கட்சி அழைப்பு
புதுடில்லி, ஜூன் 2- சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டில்லியில் நடத்தப்பட வுள்ள அமைதிப் போராட்டத்திற்கான அடுத்தகட்ட திட்டங்களை, இணைய தள இயக்கமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (காக்ரோச் ஜனதா கட்சி) நிறுவனர் அபிஜீத் தீப்கே நேற்று (1.6.2026) வெளியிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் மாணவராக இருக்கும் அவர், ஜூன் 6ஆம் தேதி இப்போராட்டத்திற்காக இந்தியா திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் காட்சிப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களுக்கும், லட்சக்கணக்கான மாணவர் களின் கடின உழைப்பு வீணடிக்கப்பட்டதற்கும் பொறுப்பேற்று, தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
இதற்காக போராட்டம் நடத்துவதற்காக, ஜூன் 6ஆம் தேதி, சனிக்கிழமை காலை நான் டில்லி வர முடிவு செய்துள்ளேன்.
நீங்கள் அனைவரும் என்னை விமான நிலையத்திற்கு வந்து சந்தியுங்கள். நாம் அனைவரும் அங்கிருந்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குச் சென்று, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியைக் கோருவோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால், அவர்கள் கண்டிப்பாகச் செவிசாய்த்தே ஆக வேண்டும். எனது இந்த நடவடிக்கைகளால் நான் கைது செய்யப்படலாம் என்று எனது நண்பர்களும் குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளனர்.
நமது நாடு இன்னும் ஒரு ஜனநாயக நாடாகவே நீடிக்கிறது. அமைதியான முறையில் போராட நமக்கு அனுமதி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
இவ்வாறு தீப்கே தெரிவித்துள்ளார்.
