தனி மனிதராக நின்று போராடி, வெற்றிகளை, உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார்!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அவரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் – நாடெங்கும் ‘‘நன்றித் திருவிழா’’ கொண்டாட்டமாகப் பூத்துக் குலுங்கட்டும்! குலுங்கட்டும்!!

தனி மனிதராக நின்று போராடி, தமிழ் இனத்திற்குத் தன்மான உணர்வையும், உரிமைகளையும் பெற்றுத்தந்த உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாநாடெங்கும் ‘‘நன்றித் திருவிழா’’ – கொண்டாட்டமாகக் குலுங்கட்டும், குலுங்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

செப்டம்பர் மாதம் பிறந்து விட்டது!

நமக்கெல்லாம் மானமும், அறிவும், உரிமை களைப்பற்றியும் போதித்த, சாதித்த நமது அறிவுத் தந்தை, சுயமரியாதை உலகை உருவாக்கி, அதில் கோடானகோடி ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண் திறக்கக் காரணியாய் உள்ள பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள் செப்டம்பர் 17.

தனி ஒருவராக நின்று, போராடி
செயற்கரிய செய்தவர் தந்தை பெரியார்!

தனி ஒருவராக நின்று, காலமெல்லாம் போராடி, தன் விழிகளை மூடிக் கொள்ளும்முன், அறியாமையில் கிடந்த மக்களின் விழி திறந்த வித்தகர் அவர். நமக்கு அறிவு உணவையும், உணர்வையும் ஊட்டி மகிழ்ந்து, தமது  கொள்கை லட்சியங்களின் வெற்றிப் பயணம், விளைச்சலைத் தம் காலத்திலேயே கண்ட, ஓர் ஒப்பற்றப் புரட்சியாளர் நமது செப்டம்பர் விழா நாயகர் செயற்கரிய செய்த நம் பெரியார்!

‘‘எவ்வளவு பெரிய இயக்கத்திற்கும் நமது மன உறுதியும், நிர்தாட்சண்யமும்தான் ஆஸ்தியாகவும், மூலப் பொருளாகவும் இருக்கின்றதே தவிர, வேறில்லை’’ என்று கூறி, தனது புத்துலகம் காண  புதியதோர் சுயமரியாதை இயக்கம் கண்டு, புறப்பட்டபோது, ‘‘மலையுடன் மோதுகிறீர்கள், மண்டைதான் உடையும்’’ என்ற ஆரிய ஆதிக்கவாதிகள், அவரை அச்சுறுத்தியபோது, அவர் துணிச்சலோடு அந்த அறைகூவலைச் சந்தித்த முறை சரித்திரம் காணாத புதுமையானது!

‘‘அது மலையாக இருக்கலாம். ஆனால், அந்த (எதிர்ப்பு) மலையை மயிரில் கட்டி இழுக்கிறேன்.

வந்தால் மலை,

போனால் பரவாயில்லை!’’

என்ற துணிவின் இமயமாய் ஓங்கி முழங்கினார். அதையே சாதித்தும் காட்டினார். தன்னால் உருவாக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அரசியலில் தடம் பதித்தவர்கள் – தனது கொள்கைகளை, அவரது சுயமரியாதை இயக்கத் திட்டங்களைச் சட்டங்களாக்கிய மாண்புக்கு  மகிழ்ந்ததோடு, அவரது சீடர்களின் சிந்த னைகளும், செயல் வேகமும் புதியதோர் திராவிட (மாடல்) ஆட்சியைக் கொணர்ந்து, சரித்திரச் சாதனை களைப் படைத்தமைக்குக் காரணியாய் அமைந்தார்.

தந்தை பெரியார் கூறியவை
பிற்காலத்தில் சட்டங்களாகின!

அவர்கள் சட்டமன்றத்திலேயே சட்டங்களாக நிறைவேற்றி, அந்த ‘திராவிட’ ஆட்சியைத் தந்தை பெரியார் என்ற அந்தக் கொள்கைச் சிங்கத்தின் கழுத்தில் மாலையாகப் போட்டு, அந்த ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை ஆக்கி மகிழ்ந்தனர். அறிவு ஆசான் தந்தை பெரியார் பூரித்தார்! பெருமிதம் கொண்டார் – தன் கொள்கை வெற்றிபற்றி!

அதே செப்டம்பர் மாதத்தில், பிறந்த நாள் காணும் அய்யாவின் தலைமாணாக்கராகவும், அடக்கத்தின், ஆற்றலின் சிகரமாகவும் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் என, இளையர்களின் பகுத்தறிவு வழிகாட்டியாக ‘திராவிட மாடல்’ ஆட்சியை நிறுவி, அதற்குப் பின் எந்த ஆட்சி வந்தாலும், அந்த அடிக்கட்டுமானத்தினை விட்டு நகர, தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை புதியவர்களுக்கும் கூடப் புகட்டி, ஆட்சி நடத்த வைக்கும் தொடர்நிலை இன்றும் புதிய அரசியல் பாடத்தை போதித்துக் கொண்டே உள்ளது!

ஆரியத்தின் சூழ்ச்சி மற்ற மாநிலங்களில் தற்காலிகமாக வென்றாலும், இந்தத் ‘திராவிட’ மண்ணில் ஒருபோதும் ‘‘போணியாகாது.’’

செப்டம்பர் மாதத்தின் சிறப்பு!

1967 இல் ஆட்சி அமைத்துத் திருப்பம் ஏற்படுத்திய அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15.

தந்தை பெரியாரின் கொள்கைத் திட்டங்களை சட்டங்களாக்க, தனித்து திராவிடர் இயக்க அரசியல் பிரிவாகி, பல அதிசயம் நடந்து, தொடர்ந்த  பருவத்தின் தொடக்கமும் இந்த செப்டம்பர் மாதம்தான். எனவேதான், இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் அண்ணா!

‘‘உலகம் பெரியார் மயம்

பெரியார் உலக மயம்’’ என்று, இன்று பற்பல நாடுகளிலும் பெரியார் என்ற தத்துவத்தைச் சுவாசித்துப் பயன்பெற முந்துறும் மக்கள் – பலவகை எதிர்நீச்சல்களிலும் வெற்றியடைவதோடு, நம் தனி வரலாற்று நாயகரரைக் கொண்டாடி மகிழ்கின்றனர்!

இந்த ஆண்டு 148 ஆவது பிறந்த ஆண்டு. நமக்கு அறிவு போதித்த, சுயமரியாதை என்ற முதுகெலும்பை பலப்படுத்திய, தன்மானம், தன்னலம் துறந்த தகைசால் தொண்டறம்பற்றிப் போதித்தது, தந்தை பெரியார் எனும் வரலாறு.

தமிழர் இல்லமெல்லாம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவாகக் குலுங்கட்டும்!

இதற்கு முந்தைய ஆண்டு விழாக் கொண்டாட்டங்க ளைத் தாண்டி, புதிய முறை விழாவாக்கி, ஒவ்வொரு குடும்பத்து நன்றித் திருவிழாவாக்கி, புத்தாக்கம் பெறும் வகையில் முதியவர் முதல் பிஞ்சுகள் வரை வயது, பால் வேற்றுமையின்றி, பாரெங்கும் புதிய வெளிச்சத்தோடு தமிழர் இல்லம் எல்லாம் நன்றி விழாவாகக் கொண்டாடி, நம்மை உயர்த்திட அணிவகுப்போம், ஆயத்தமாவீர்!

திராவிடர்  – தமிழர் இல்லமெல்லாம் விழாக் கோலமாகப் பூத்துக் குலுங்கட்டும்! குலுங்கட்டும்!! நாடெங்கும் பொலிவும், வலிவும் பெற, பெரியார் என்றும் தேவைப்படுபவர்!

பணி முடிப்போம் – பெரியார் உலகை உருவாக்கும்வரை ஓய்வில்லை, உறக்கமில்லை!

வாழ்க பெரியார்!

கி.வீரமணி
தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை        

1.9.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *