தருமபுரி, ஜூன் 21 தமிழ்நாட்டில் நீட் மறுதேர்வு எழுதவிருந்த மாணவிகள், தேர்வு பயம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 4 நாள்களில் மட்டும் 3 மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
பயத்தால் மாணவி
ரோஷ்னி தற்கொலை
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்). இவரது மகள் ரோஷ்னி (18) பிளஸ் 2 முடித்துவிட்டு, மருத் துவராகும் கனவோடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மய்யத்தில் நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.
இன்று (21.6.2026) தருமபுரியில் நடைபெறவிருந்த நீட் மறுதேர்வை எழுத ரோஷ்னி சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த சில நாள்களாக தேர்வு பயத்தால் மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்ட ரோஷ்னி, நேற்று (20.6.2026) மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மாணவி கோபிகா தற்கொலை
சேலம் மாவட்டம் இடைப் பாடி அருகே கொங்கணாபுரம் வெள்ளாளபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கோபிகா (19). கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த ஆண்டு 3ஆவது முறையாக கடந்த மே 3ஆம் தேதி தேர்வு எழுதியிருந்தார். ஆனால், அத்தேர்வு ரத்தானதால், ஜூன் 21 அன்று நடைபெறவிருந்த மறுதேர்வை எழுதத் தயாராகி வந்தார்.
4-ஆவது முறையாக தேர்வு எழுத வேண்டிய அச்சத்தில் இருந்த கோபிகா, நேற்று முன் தினம் (19.6.2026) மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபிகாவின் அறையில் காவல் துறையினர் கைப்பற்றிய கடிதத்தில்,
“டியர் மம்மி, டாடி… நான் எவ்வளவோ முயன்று படிக்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. எல்லோரும் என்னை டாக்டர் என்று கூப்பிட்டீங்க, ஆனால் உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. தம்பியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மம்மி, டாடி மிஸ் யூ” என்று எழுதியிருந்தார்.
4 நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை சோகத்தில் தமிழ்நாடு
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் தொடர் நிகழ்வுகள் பெற்றோர் களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 17: கோவையைச் சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா தற்கொலை.
ஜூன் 19: சேலத்தைச் சேர்ந்த மாணவி கோபிகா தற்கொலை.
ஜூன் 20: தருமபுரியைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி தற்கொலை.
இத்தொடர் தற்கொலை சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
