ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்குப் பதில் என்ன?

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மனு(அ)தர்மம் : ராகுல்காந்தி கூறியதும் – மறுக்கும் விசுவ ஹிந்து பரிஷத்தும்
பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்தவில்லையா?

கி. வீரமணி

காராட்டிரம் புனே நகரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி (AISSMS Ground) நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், “பெண்கள் குழந்தைப் பருவத்தில் தந்தையையும், இளமையில் கணவரையும், முதுமையில் மகன்களையும் சார்ந்திருக்க வேண்டும்” என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, “பெண்கள் யாருக்கும் சொந்த மானவர்கள் அல்ல; அவர்களுக்கே உரியவர்கள்; வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஆண்களின் கட்டுப் பாட்டில் பெண்கள் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் கருத்து வெட்கக்கேடானது” என்பதை எடுத்துரைத்தார்.

‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால், ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஒரு சுலோகத்தை மட்டும் தேர்வு செய்து குற்றம் சுமத்தக் கூடாது’ என்று உபதேசம் செய்து இருக்கிறார்.

ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்துமே பெண்களை இழிவுபடுத்துபவை தான்.

மனுஸ்மிருதியில் ஒரு சுலோகத்தை எடுத்துக் காட்டி ராகுல் காந்தி அவர்கள் பேசி யிருக்கிறார்கள் என்று கவலைப்படுகிற பன்சால் அவர்களுக்கு மனுஸ்மிருதியில் பெண்களை இழிவு படுத்துகின்ற சுலோகங்களைப் பட்டியலிட்டுத் தருகிறோம். அவர் பேசாமல் இருந்தாலாவது ஒரு சுலோகத்தோடு மட்டுமே போயிருக்கும். இந்த விவாதத்தின்மூலம் மனுதர்மத்தின் யோக்கியத்தை உலகறியச் செய் திருக்கிறார்.

“கணவன் துரசாரமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல் பூசிக்க வேண்டியது!” (மனு: 5:154)

“கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளியாகவிருந் தாலும் அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம், துணி மணிகள், படுக்கை இவற்றைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது!” (மனு: 9:78)

“பால்யமாக விருந்தாலும் யவ்வனமாக விருந்தாலும் வார்த்திபமாக விருந்தாலும் ஸ்திரீகள் தன்தன் வீடுகளில் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது!” (மனு: 5:147)

“பால்யத்தில் தகப்பனின் ஆக்ஞையிலும், யவ்வனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்தபிறகு பிள்ளைகளின் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதேயல்லாது, ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது.” (மனு: 5:148)  (ஆக்ஞை என்றால் கட்டாய ஆணை)

“மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்.” (மனு: 2:213)

“தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது!” (மனு: 2:215)

“மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடைய வர்கள்!” (மனு: 9:15)

“மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷ முள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன!” (மனு: 9:19)

“மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்!” (மனு: 9:14)

“புத்திரர்களை உண்டாக்கிக் கொள்” என்பதுவே மகாபாரதத்தின் அறிவுரை. அது குறித்து ‘மனுதர்ம’மும் நிறையப் பேசுகிறது.

“ஒருவனின் மனையாளிடத்தில் மனை யாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம்.” (மனு: 9:52)

“பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது!” (மனு: 9:59)

“கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனைவி கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக் கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டியது.” (மனு: 9:190)

பெண்ணடிமைத்தனம் மட்டுமல்ல; ஜாதி வெறி, மூட நம்பிக்கைகளின் களஞ்சியமாக மனுதர்ம சாஸ்திரம் திகழ்வதை எவரால் மறுக்க முடியும்?

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *