தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தரில் “ரிசர்வேஷன் ஹடாவோ அந்தோலன்” (இடஒதுக்கீடு அகற்றும் இயக்கம்) என்ற பெயரில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக உயர்ஜாதியினர் நடத்திய போராட்டம் கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜாதி சார்ந்த இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்து, சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்துகிறார்களாம்!
இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப் பினரிடையே தற்போது கருத்து வேறுபாடுகளும் பிளவுகளும் ஏற்பட்டுள்ளன.
போராட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான ஹர்ஷ் துபே, மற்ற அமைப்பாளர்களுடன் ஆலோசிக்காமல் லக்னோவில் உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாட்டக் உடன் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
இதற்கு மற்றொரு முக்கிய செயற்பாட்டாளரான ஆதித்ய ராஜ் சிங் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த இயக்கம், சமூகத்தின் தலைமையில் இயங்குவதாகவும், தனிநபர் தலைமையில் அல்ல என்றும் தனது அதிருப்தியைப் பதிவிட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஹர்ஷ் துபே, “எங்கள் கோரிக்கைகளைக் கேட்க அரசுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தனியாக அமர வேண்டியிருந்தாலும் ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வேன்” எனக் கூறியுள்ளார்.
மாணவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை அடுத்த இரு நாள்களில் ஒன்றிய தலைமையிடம் கொண்டு சேர்ப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாட்டக் உறுதியளித்துள்ளாராம்.
அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொறுத்தே இப்போராட்டத்தின் எதிர்காலம் அமையும் என்பதால் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறதாம்.
இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஆரக்ஷன் விரோதி பார்டி (இடஒதுக்கீடு ஒழிப்பு கட்சி) மீண்டும் பேசும் பொருளாகி உள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போன்று, சமூகவலை தளங்களில் ‘இட ஒதுக்கீடு ஒழிப்புக் கட்சி’ என்ற பெயரில் பதாகைகளை ஏந்தி வந்தனர். ஆனால் அதற்கு இளைஞர்களையிடையே வரவேற்பு அதிகம் இல்லாமல் போனது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வடமாநிலங்களில் சமூகநீதி எதிர்ப்பாளர்களை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியது.
தலைநகரமாம் புதுடில்லி விழி பிதுங்கியது. எங்களை யாரும் அசைக்க முடியாது என்று 56 அங்குள்ள மார்பளவு கொண்டதாகத் தம்பட்டம் அடிக்கும் மோடி அரசு அந்தப் போராட்டத்தை ஒடுக்கப் பார்த்தும் முழுமையாக அதைச் செய்ய முடியவில்லை.
‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் அவர்களின் அதிகபட்சக் கோரிக்கையாக இருந்தது. இவ்வளவுக்கும் நீட்டே வேண்டாம் என்று கூட அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை.
‘நீட்’ முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதுதான் அவர்களின் அழுத்தமான கோரிக்கையாக இருந்தது. பிடிவாதம் பிடித்த பிஜேபி அரசோ அடம் பிடித்தது – கைது செய்யும் படலத்தை மேற்கொண்டது; என்றாலும் இறுதி வெற்றி மாணவர் போராட்டத்துக்குத்தான் கிடைத்தது.
இந்தக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் வீச்சு இந்தியா முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் புதியதோர் எழுச்சியை ஏற்படுத்தி விட்டது.
இதனை வளர விட்டால் சமூகநீதிக் கொள்கை பலமாக வேர் விட்டு, இந்தியாவையே அசைத்துப் பார்த்துவிடும் என்ற பயம் பா.ஜ.க.வை உலுக்க ஆரம்பித்து விட்டது.
அதனால்தான் இப்பொழுது இன்னொரு இளைஞர் அமைப்பு “ரிசர்வேஷன் ஹடாவோ அந்தோலன்” (இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற அமைப்பு) உருவெடுத்துள்ளது. இதில் உயர் ஜாதியினரும், பிஜேபி அரசும் பின்னணியில் உள்ளது என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை.
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தது முதல் உயர்ஜாதி ‘ஏழை‘களுக்கான இடஒதுக்கீடு (EWS) வரை நடந்தவற்றைப் பார்க்கும்போது – ஆர்.எஸ்.எஸ். என்ற சமூகநீதிக்கு எதிரான அமைப்பின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு அதிகார பீடத்தில் இருக்கும் பி.ஜே.பி. இந்த அமைப்பின் பின்னணியில் உள்ளது. இளைஞர்கள் மத்தியில் பிரித்தாளும் தனது யுக்தியை – புத்தியைப் பயன்படுத்துகிறது – எச்சரிக்கை! எச்சரிக்கை!
‘ஜாதி ஒழிந்த இந்தியா’ உருவாக வேண்டும் என்னும் திராவிடர் கழகத்தின் முழக்கம் எங்கும் எதிரொலிக்கட்டும்!
