சான்றுகள் இருந்தும் குற்றவாளிகளை கைதுசெய்யப் பா.ஜ.க. அரசு தயங்குவதா?
மனித மாண்புகளைச் சிதைக்கும் ஜாதி-மதப் போக்கை ஒழித்துக் கட்ட வேண்டாமா?
மகாராட்டிராவில் கொடூரம்: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நபரைத் தாக்கி சாணம் தின்ன வைத்த ‘ஹிந்துத்துவப் பசுக் காவலர்கள் என்ற குண்டர்கள்!’ சான்றுகள் இருந்தும் குற்றவாளிகளை கைதுசெய்யப் பா.ஜ.க. அரசு தயங்குவதா? மனித மாண்புகளைச் சிதைக்கும் ஜாதி–மதப் போக்கை ஒழித்துக் கட்ட வேண்டாமா? என்று கேள்வியெழுப்பி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மகாராட்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில், பசுப் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரால் குவிந்த குண்டர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைத் தாக்கி, சாணத்தைத் தின்ன வைத்த கொடுமை பெரும் அதிர்ச்சி தரத் தக்கதாகும்!
சரக்கு வாகன ஓட்டுநரான பரமேஸ்வர் சுகாஸ் ஹிவாலே என்பவர் வைத்திருந்த காளை மாட்டை தன் உறவினர் ஒருவரிடம் விற்றுவிட்டு, அதனை அவர் வீட்டில் கொண்டுபோய் விட ஜால்னா நகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வழியில் பஜ்ரங் தள் அமைப்பினரும், பசுப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டவர்களுமாக ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தை மறித்துள்ளது.
ஜாதிய ரீதியாக இழிவுபடுத்தியுள்ளனர்!
சட்டப்பூர்வமாக காளையை வீட்டுப் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டதற்கான ஆவணங்களைக் காண்பித்தும், அதை ஏற்றுக்கொள்ளாத அக்கும்பல், அவரை கடுமை யாகத் தாக்கியுள்ளது. அவரது ஜாதியைக் கேட்டு, ஜாதிய ரீதியாக இழிவுபடுத்தியுள்ளனர்.
தாக்குதலின் உச்சமாக, வாகனத்திலிருந்த மாட்டின் சாணத்தை எடுத்து ஹிவாலேவின் வாயில் கட்டாயப்படுத்தித் திணித்துள்ளனர். அவரின் 11 வயது மகனுக்கும் சாணத்தை ஊட்ட முயன்றபோது ஹிவாலே அதைத் தடுத்துள்ளார். மேலும், உடன் வந்த காம்ப்ளேவையும் தாக்கி, வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ள நிலையில், அச்சம் காரணமாகக் காவல்துறையை அணுகாமல் இருந்துவிட்டனர். ஆனால், இத் தாக்குதல் குறித்த காணொலி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஹிவாலே அண்மையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பதிவு செய்யாமல் தவிர்த்த காவல்துறையினர்!
ஆரம்பத்தில் இப் புகாரை ஏற்க காவல்துறையினர் மறுத்துள்ளனர். ‘உங்களுக்குள் உள்ள பிரச்சினையை ஏன் காவல் நிலையம் வரை இழுக்கிறீர்கள் என்று கூறியும், இது எங்கள் காவல் எல்லைக்குள் வராது’ என்று கூறியும் புகாரைப் பதிவு செய்யாமல் தவிர்த்துள்ளனர். இந்த நிலையில் இக்கொடூர நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியதுவும் வேறு வழியின்றி காவல்துறை புகாரைப் பதிவு செய்துள்ளது.
இப் புகாரின் அடிப்படையில், ஜால்னா தாலுகா காவல் துறையினர் அடையாளம் தெரியாத ஆறு பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காணொலியில் தொடர்புடைய நபர்களின் முகம், தெளிவாக தெரிந்த நிலையிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று நேற்று முன் தினம் ஓர் ஆங்கில (தி ஹிந்து) ஏட்டில் வெளிவந்துள்ள செய்து கூறுகிறது.
நாகரிக சமூகமா? சுதந்திர நாடா?
இது 21 ஆம் நூற்றாண்டு! இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்பட்டு 80 ஆண்டுகளும் ஆகி, கொண்டாட்டங்களுக்கும் குறைச்சலில்லை. ஆனால், சக மனிதர் ஒருவரை, அவர் ஜாதியைக் காரணம் காட்டி ஒரு கும்பல், சாணியைத் தின்ன வைக்கிறது, வாயில் திணிக்கிறது, வன்கொடுமையில் ஈடுபடுகிறது என்றால், இது நாகரிக சமூகமா? சுதந்திர நாடா?
‘‘பசுப் பாதுகாப்பு’’ என்ற பெயரால் நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு அளவில்லாமல் தொடர்கிறது. உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி, அக்லக் என்ற முதியவர் கொல்லப்பட்டது முதல் வடபுலத்தின் பல மாநிலங்களி லும் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுகின்றன.
மதவெறியும் இணைந்து
ஆட்டம் போடுகிறது!
அதிலும், சமூகப் புரட்சியாளர்கள் ஜோதிபாபூலே – சாவித்திரிபாய் பூலே – சாகுமகராஜ் – பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மண்ணில் இன்று பதவியைப் பிடித்திருக்கும் பா.ஜ.க.வின் ஆட்சிக் காலத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும், அவர் வாயில் மாட்டுச் சாணத்தைத் திணித்து உண்ணச் சொல்லும் ஜாதி வெறி இன்னமும் அடங்கவில்லையே! அது மதவெறியுடன் இணைந்து ஆட்டம் போடுகிறதே!
இந்தக் கொடுமையைக் கண்டு நம் குருதி கொதிக்கவில்லையா? நூறு ஆண்டுகளுக்கு முன்பே, சாணிப்பாலையும், சவுக்கடியையும் ஒழிக்கப் போராடி, மனித சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்த சுயமரியாதை இயக்கமும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் வளர்த்த அந்த மண்ணில், இன்னமும் ஆங்காங்கே ஜாதியின் பெயரால் ஆணவக் கொலைகளும், கும்பல் கொலைகளும், வன்முறைகளும், வன்கொடுமைகளும் நடப்பதை எதிர்த்து நாம் அன்றாடம் மக்கள் மன்றத்திலும், சட்ட ரீதியாகவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸநாதனத்தின் ஆட்சியா?
ஆனால், மகாராட்டிரத்தில், இக் கொடுமைகளை இழைத்தவர்களைக் கைது செய்யக் கூட இன்னும் அம் மாநிலக் காவல்துறை தயங்குகிறது என்றால், அங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸநாதனத்தின் ஆட்சியா?
பா.ஜ.க.வோ, அல்லது அமெரிக்காவில் போய் இதோபதேசம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.சோ இந்தக் கொடுமைகளைத் தடுக்க, எதிர்க்க முன்வருமா? இந்தக் குண்டர்களுக்குப் பின்னணியில் இருப்பது யாரென்பதை உலகம் அறியுமே!
மனித மாண்புகளையும், விழுமியங்களையும் சிதைக்கும், ஜாதி – மத வெறியர்களின் இக் கொடுமை களை ஒழிக்க உறுதிபூணுவோம். இந் நாட்டை ஜாதி ஒழிந்த நாடாக மாற்றும் வரை, நமக்கு ஓய்வில்லை, சாய்வில்லை!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
31.8.2026
