வரலாற்றுச் சிறப்புமிக்க மகாராட்டிராவின் சிங்காட் கோட்டைக்குச் சுற்றுலா வந்த எட்டு வயது சிறுமியின் உடைக்காக, அவரது பெற்றோரைச் ஹிந்துத்துவ அமைப்பினர் தாக்கியுள்ள நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் மற்றும் குழந்தையின் வசதிக்காக அரைக்கால் சட்டை அணிவிக்கப்பட்டதை “பண்பாட்டிற்கு மாறானது” எனக் கூறி, கேள்விகேட்ட தந்தை மீது வன்முறைப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இயங்கிவரும் பசுப் பாதுகாப்பு அமைப்புகளைப் போல, மகாராட்டிராவிலும் “கலாச்சாரப் பாதுகாப்பு” என்ற பெயரில் சிலர் பொதுமக்கள் மீது தங்களது கருத்துகளைத் திணிப்பதும், வன்முறையில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
எட்டு வயதுச் சிறுமியின் ஆடையைக் கூட சர்ச்சையாக்கி, கோடைக்காலத்திற்கு உகந்த இயல்பான ஆடைகளைக் கட்டுப்படுத்த முனைவது அடிப்படைத் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரான செயல் மட்டுமல்ல; மனித நேயமற்ற தவறான நடைமுறையுமாகும்.
பொது இடங்களிலும், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துகளிலும் ஹிந்துக்கள் உண்ணும் உணவை ஆராய்வது, விரத நாட்களில் இறைச்சி சாப்பிடலாமா? என்று கேள்விகேட்டு அச்சுறுத்துவது போன்ற செயல்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் மதவெறிப் போக்கைக் காட்டுகின்றன.
இத்தகைய தீவிரவாத நடைமுறைகள், ‘தாலிபான்’ போன்ற அடக்குமுறை அமைப்புகளின் செயல்களை நினைவூட்டுவதாகவும், நாட்டின் ஜனநாயகப் பண்பாட்டிற்கும் சகிப்புத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் பொதுமக்களிடையே வாழ்க்கைபற்றிய கவலை சார்ந்த அவநம்பிக்கை நிலவுகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில் தனிநபர் ஆடைத் தேர்வும், உணவு விருப்பமும் சட்டத்திற்குட்பட்ட உரிமைகள் ஆகும். வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மீது கலாச்சாரத்தின் பெயரால் வன்முறையை ஏவுவது சுற்றுலாத் துறையையும், சட்டம் – ஒழுங்கையும் கடுமையாகப் பாதிக்கும்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அரசு மற்றும் காவல் துறை, இதுபோன்ற தன்னிச்சையான “கலாச்சாரக் காவல்” அமைப்புகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலமே பொதுமக்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதி செய்ய முடியும்.
வட மாநிலங்களில் – அதிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஹிந்துக் கலாச்சாரம் என்று சொல்லி சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ‘சிலம்பாட்டம்’ ஆட ஆரம்பித்தால் நாட்டில் நிலை என்னாவது?
பிஜேபியின் கையில் ஆட்சி அதிகாரம் என்ற நிலையில், மக்கள் நலம், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு – இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல!
மற்ற மதக்காரர்களைச் சீண்டுவது, அவர்களின் கலாச்சாரத்தில் மூக்கை நுழைப்பது, மாற்று மதத் தலைவர்களின் வழிபாட்டுத் தலங்களை அடித்து நொறுக்குவது, உணவு விடயங்களில் மோப்பமிடுவது இரவு நேரங்களில் பள்ளிக்கூட வளாகங்களில் மாடுகளை அடைப்பது என்பது போன்ற காட்டு விலங்காண்டித்தனங்களில் இறங்குவதுதான் பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலங்களின் அன்றாடப் பொழுது போக்காகவே இருக்கிறது!
மககள் மத்தியில், அதிலும் இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவு உணர்வும், விழிப்புணர்வும் ஏற்படாத வரை நாடு கற்காலத்திற்குச் செல்ல வேண்டியதுதான்!
