‘தினமலர்’ பார்வையில் ஜாதி!
‘‘கல்வி நிறுவன பெயர்களில் உள்ள ஜாதியை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும். இல்லை என்றால், அக்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்’ என்று. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஆங்கிலேயே அரசு நடத்திய கல்வி நிறுவனங்களை விட, தனியார் கல்வி நிறுவனங்களே அதிகம்
இவை, இன்றளவும் தரமான கல்வியை அனைத்து ஜாதியினருக்கும் வழங்கி வருகின்றன. நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் துவக்கப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை துவங்கி, தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். கல்விக் கூடங்களை துவக்கிய அனைவருக்கும், பாமரனும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்ததே தவிர, ஜாதியை வளர்க்க நினைக்கவில்லை. இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரிப் பெயர்களில் உள்ள ஜாதி தான், மாணவர்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கு காரணம் எனில், வண்ணாரப்பேட்டை, முதலியார் குப்பம், உடையார்பாளையம், செங்குந்தபுரம், செட்டிப்புண்ணியம், பள்ளப்பட்டி, குறவர் புலம், ராவுத்தர்பாளையம், மரைக்காயர்பட்டினம் என, ஜாதியைத் தாங்கி நிற்கும் ஊர் பெயர்களையும் நீக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா?’’
இப்படி ஒரு கடிதம் ‘தினமலர்’ ஏட்டில் (21.4.2025) வெளி வந்துள்ளது.
ஜாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கடிதம் ‘தினமலரில்’ வெளி வந்துள்ளதா என்பது முக்கியமான கேள்வியாகும்.
பல ஊர்ப் பெயர்கள் ஜாதியின் பெயரால் இருப்பது குறித்து, உண்மையிலேயே ‘தினமலருக்கு’ அக்கறை இருக்குமானால், அதனை வரவேற்கவே செய்கிறோம்.
கொங்கப் பறைத் தெரு என்று ஈரோட்டில் இருந்த ஜாதிப் பெயரை 1917லேயே தந்தை பெரியார் ஈரோடு நகர மன்ற தலைவராக இருந்தபோது வள்ளுவர் தெரு என்று மாற்றினார்.
தன் பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் என்ற ஜாதிப் பட்டத்தை தந்தை பெரியார் தூக்கி எறிந்தது 25.12.1927 ‘குடிஅரசு’ இதழ் முதல்!
1929இல் செங்கற்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னாலிருந்த ஜாதியை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு அல்லாமல், அந்த மாநாட்டு மேடையிலேயே தலைவர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைத் துறப்பதாக அறிவித்தனர்.
‘உதைப்பவனுக்கு வெளுப்பான் உயர்ந்த சலவைக்காரன்’’ என்று ‘குடிஅரசு’ (16.1.1938) எழுதியது.
உண்மையிலேயே அந்தப் பழமொழியில் உள்ள கடைசி சொல் வண்ணான் என்றே இருந்தது. தப்பித் தவறிக்கூட அந்த சொல் வந்து விடக் கூடாது என்பதற்காக தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ் வழக்கத்தில் இருந்து வந்த அந்தச் சொல்லை மாற்றி எழுதியது என்பதெல்லாம் ‘தினமலர்’ கூட்டத்திற்குத் தெரியுமா?
இன்னும் ‘பிராமணர்கள்’ என்ற பெயரில் மாநாடுகளை நடத்துகிறார்களே! அதைக் கண்டித்த துண்டா? மாறாக அம்மாநாட்டுச் செய்திகளை எட்டுப் பத்தி தலைப்பிட்டு வண்ணப் படங்களோடு முழுப் பக்கச் செய்தியாக அல்லவா ‘சாங்கோ பாங்கமாக’ வெளியிட்டு மகிழ்கிறது தினமலர்’
கடைசியாக ஒன்று – ஜாதிப் பெயர்களில் ஊர்களின் பெயர்களை எடுத்துக்காட்டி ஜாதி பெயரில் கல்வி நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பைக் குறை கூறுவது சரியல்ல!
உண்மையிலேயே, ஊர்களின் பெயர்களும் ஜாதிப் பெயராய் இருக்கக் கூடாது – கல்வி நிறுவனங்களின் பெயர்களும் ஜாதிப் பெயரால் இருக்கக் கூடாது – அரசமைப்புச் சட்டத்திலும் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவு (அதைத் தான் திராவிடர் கழகம் எரித்தது என்பது நினை விருக்கட்டும்) நீக்கப்பட வேண்டும் என்று ’தினமலர்’ எழுதுமானால் அதுதான் அறிவு நாணயமாக இருக்க முடியும்! எழுதுமா ‘தினமலர்’ வகையறாக்கள்?