காத்மாண்டு ஆக.30 கடுமையான வெள்ளத்துக்குப் பிறகு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவியை நேபாளம் முதலில் நிராகரித்திருந்தது. எனினும், தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளது.
நேபாளத்தின் முக்கிய நாளிதழான காத்மாண்டு போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, இந்த பேரிடரில் இன்னும் பல நாடுகளின் குடிமக்கள் காணாமல் போயிருப்பதால், அந்த நாடுகளின் அழுத்தத்தின் பேரிலேயே நேபாளம் தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, 28.8.2026 அன்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் சவுத்ரி, “உதவி வழங்க முன்வருவது இயல்பானது. எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நேரத்தில் எங்களுக்கு அத்தகைய உதவி தேவையில்லை” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக பன்னாட்டுத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியைப் பெறுவதற்கு நேபாளம் இப்போது தயாராகியுள்ளது.
26.8.2026 அன்று போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 28.8.2026 வரை 626 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2000 பேர் காணாமல் போயுள்ளனர். 320 இந்தியர்களும் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு போஸ்ட் செய்தியின்படி, 26.8.2026 அன்று நேபாள அரசு, தங்கள் மீட்புக் குழுக்கள் தனியாகவே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என்றும், பிற நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த முடிவு ஒரு நாள்கூட நீடிக்கவில்லை.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சுரங்கங் களில் மீட்புப் பணிகள், டிஎன்ஏ பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்காக வெளிநாட்டு நிபுணர் களின் வரம்பிற்குட்பட்ட உதவியைப் பெறும் முடிவை நிர்வாகம் தற்போது எடுத்துள்ளது.
