வாசிங்டன், மே 8 மேற்காசியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர, 14 அம்சங்கள் கொண்ட ஒரு புதிய அமைதி ஒப்பந்தம் தயாராகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஈரானிய உயர் அதிகாரிகள் இடையே நேரடியாகவும், மத்தியஸ்தர்கள் வாயிலாகவும் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனையின் பலனாக இந்த ஒரு பக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் ‘ஆக்ஸியோஸ்’ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய 14 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடல்வழிப் போக்குவரத்து: ஹார்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு அளிக்கும். இதற்குப் பதிலாக, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை உடனடியாக விலக்கப்படும்.
அணுசக்தி கட்டுப்பாடு: ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் பணிகளை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இது 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
யுரேனியம் இருப்பு: தற்போது ஈரானிடம் உள்ள உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதற்கும் அல்லது செயலிழக்கச் செய்வதற்கும் ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத் தடைகள் நீக்கம்: மேற்கூறிய நிபந்தனைகளை ஈரான் நிறைவேற்றுவதற்கு ஏற்ப, அமெரிக்கா அதன் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைப் படிப்படியாக நீக்கும். மேலும், முடக்கப்பட்ட ஈரானின் நிதிகள் விடுவிக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, நிபந்தனைகளைச் செயல்படுத்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தற்போது, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இறுதி முடிவை அறிவிக்க ஈரானுக்கு அமெரிக்கா 48 மணி நேரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
போர் தொடங்கிய காலத்திலிருந்து, இரு நாடுகளும் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு இவ்வளவு நெருக்கமாக வந்திருப்பது இதுவே முதல்முறை என்பதால், பன்னாட்டு அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
