சென்னை, ஆக.20 தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று (19.8.2026) சட்டப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள் முதல் விலை உயர்வு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக் கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு, அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாகனம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை
வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான “பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை” அமைக்கப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல் பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னி யாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 660 பி.எஸ்சி செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஏற்ெகனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், “முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்” (Chief Minister’s Cancer Care Mission) 673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஜி+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
