ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிய நாள் இன்று (15.8.2023)
தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் ‘‘தகைசால் தமிழர் விருது’’ திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விருது பற்றிய விவரங்கள்
சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கை களுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் ஒருவருக்கு, ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெ டுப்பதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டுக்கான விருதை ஆசிரியர் கி. வீரமணிக்கு வழங்கினார். விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
ஆசிரியர் கி.வீரமணியின் பங்களிப்பு
நீண்ட கால சமூகப் பணி, ‘விடுதலை’ ஆசிரியர், திராவிட இயக்கங்களின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர், சமூக நீதியின் பால் அக்கறை கொண்ட இந்தியாவின் முக்கிய கட்சித் தலைவர்களால் புகழப்படுபவர், சிந்தனை மற்றும் செயலில் சமூக சீர்திருத்தங்கள், கல்வி மற்றும் இடஒதுக்கீடு போராட்டங்கள், பெண்ணுரிமைக்கான பெரியார் வழியில் தொடர்ந்து சளைக்காமல் நின்று களமாடும் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களுக்கு நீண்ட கால சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிதியைப் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கினார்.
தகவல்: பாணாவரம் பெ.வீரமணி
