புதுடில்லி, ஆக.8- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம் பாட்டுத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. இந்த மசோதா மாநிலங் களவையில் ஏற்கெனவே நிறை வேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை 7.8.2026 அன்று காலை 11 மணிக்கு கூடியதும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி டில்லியில் நடத்திய பேரணியின்போது காவல் துறையினர் நடத்திய தாக்கதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தொடர்ந்து முயன்ற நிலையில், அமளி நீடித்ததால் அவை பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறு வனங்களிடம் இருந்து பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறு வோர், அதற்கான பணத்தை செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் அல்லது சேவையைப் பெறும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள், அதற்கான கட்டணங்களை ‘வர்த்தக வரவுத் தொகை தள்ளுபடி அமைப்பு’ (Trade Receivables Discounting System – TReDS) மூலமாகவே செலுத்த வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
மேலும், ‘இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி தோல்வி அடைந்தால், அந்த முயற்சி முடிவுக்கு வந்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் நடுவர் மன்ற தீர்வுக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.
மேலும், வாதங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பு நிறைவடைந்த தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு வழக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்தால், தீர்ப்பளிக்கப்பட்ட தொகையில் குறைந்தது 50 சதவீதத்தை விநியோகஸ்தருக்குச் செலுத்த வேண்டும்’ என இந்த மசோதா வலியுறுத்துகிறது.
அவையை நடத்திய திலீப் சைகியா, இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். பின்னர், குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக திலீப் சைகியா தெரிவித்தார்.
தொடர்ந்து அமளி நீடித்ததால் அவையை அவர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதையடுத்து, மீண்டும் அவை வரும் 10.8.2026 அன்று கூடுகிறது. இதேபோல், மாநிலங்களவையும் தொடர் அமளி காரணமாக 10.8.2026க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
