பட்டுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் வீ.ஆத்மநாதன்!-வி.சி.வில்வம்

6 Min Read

“ஒரு மனிதருக்குப் பணம் வேண்டும் அல்லது சொல்லிக் கொள்வது போல ஜாதியாவது இருக்க வேண்டும், இரண்டுமே இல்லாத மோசமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன்”, என்கிறார் பட்டுக்கோட்டைக் கழக மாவட்டம், பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் வீ.ஆத்மநாதன். ஜாதி ரீதியாக ஹிந்துக்களுக்கு இந்த மன உளைச்சலைக் கொடுப்பதும் அதே ஹிந்து மதம்தான்.

ஜாதியில் இருந்து மீளும் போராட்டம்!

இந்த மன உளைச்சலுக்கு ஒரே மருந்து பெரியாரியம்! அதுதான் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளிவர உதவுகிறது, பிறரின் கீழான பார்வையை உதாசீனம் செய்கிறது, முன்னேற்றப் பாதைக்கும் இட்டுச் செல்கிறது, மனம் திறந்து பேசுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயம் படைக்கவும் வழிவகுக்கிறது. அப்படியான ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவர்தான் வீ.ஆத்மநாதன்.

ஹிந்து மதத்தில் எந்த ஜாதி தன்னை மூழ்கடிக்க நினைத்ததோ, அதிலிருந்து ஒவ்வொரு முறையும் மூச்சுப்பிடித்து எதிர்நீச்சல் அடித்தவர் இவர்.  உலகம் முழுவதும் மனிதர்கள் “வாழ்வதற்கு” மட்டுமே போராடுவார்கள். ஹிந்து மதத்தில் ஜாதியில் இருந்து மீளவே சாகும் வரை போராட வேண்டும். இல்லையேல், “ஒரு மனிதருக்குப் பணம் வேண்டும் அல்லது சொல்லிக் கொள்வது போல ஜாதியாவது இருக்க வேண்டும்”, என்கிற மனம் கனக்கிற வார்த்தைகள் வந்திருக்குமா? இன்றைக்குப் பெரியாரியக் கொள்கைகளால் அது நல்லளவு மாறியிருக்கிறது என்பது வேறு செய்தி.

“ஹிந்து மதத்தை மட்டும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்?”, எனக் கேட்கிறார்கள். ஹிந்துக்களை, ஹிந்து மதம் மட்டும் தானே கொடுமை செய்கிறது. இந்த மதத்தை ஒழிக்கவும், இவற்றில் ஒளிந்துள்ள ஜாதிகளை அழிக்கவுமே பெரியார் பெருந்தொண்டர்கள் தம் வாழ்நாளை அர்ப்பணிக்கிறார்கள்.

தனக்கும் வாழ்ந்து, சமூகத்திற்கும் வாழ்பவர்கள்!

வீ.ஆத்மநாதன் அய்யாவிற்கு 78 வயது. இணையர் மறைந்து 13 ஆண்டுகள் ஆகிறது. ஓய்வாக இருக்க வேண்டாமே என, சிறிய அளவில் எழுதுபொருள் அங்காடி வைத்திருக்கிறார். கணவர்கள் இறந்த பிறகு மனைவிகள் வாழ்ந்து விடுகிறார்கள். மனைவிகள் இறந்த பிறகு கணவர்கள் வாழ்வதில் சிரமங்கள் அதிகம். ஏனெனில் அவர்கள் சுயமாக வாழ்ந்திருக்க மாட்டார்கள். அதிகப் பெரும்பாலும் சார்பு வாழ்க்கையே. இதில் விதிவிலக்குகள் உண்டு.

நமது பெரியார் பெருந்தொண்டர் ஆத்மநாதன் அவர்களோ வீட்டைப் பராமரித்து, உணவு தயாரித்து, சிறிய அளவில் வணிகம் செய்து, தோழர்களை நாள்தோறும் சந்தித்து, வரிவிடாமல் விடுதலை வாசித்து, முடிந்தவரை நிகழ்ச்சிகளுக்குச் சென்று, தமிழ்நாட்டின் அரசியல் குறித்துச் சிந்தித்தும், விவாதம் செய்துமாகத் தனக்கு மட்டுமின்றி, சமூகத்திற்காகவும் வாழ்ந்து வருகிறார்!

வாங்க… கருப்புச் சட்டைக்காரரே!

கல்வி கற்கும் போதே, இடையிடையே கூலி வேலைக்கும் சென்றுள்ளார். போராட்டங்களுக்கு இடையே 10 ஆம் வகுப்பை முடித்து, பட்டயப் படிப்பையும் நிறைவு செய்துள்ளார். தமிழர்களுக்கு இதுபோன்ற கல்விச் சிரமங்களைக் களையவே இடஒதுக்கீட்டையும், கல்வி உதவிகளையும் இரு கண்களாய் பார்க்கின்றன திராவிட அரசுகள். இறுதியில் கல்வியை முடித்த ஆத்மநாதன் அய்யா, 1971 இல் மின்சாரத்துறையில் பணியில் சேர்கிறார். ஆவுடையார்கோயில், பட்டுக்கோட்டை, வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி, 2007 ஆம் ஆண்டு ஓய்வும் பெற்றுவிட்டார்.

பணி செய்கிற போது அவ்வப்போது கருப்புச் சட்டை அணிவதும், அலுவலகத்தில் அய்யா பெரியார் படம் மாட்டுவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளது. மின் பணிகள் தொடர்பாக எங்கேனும் அடிக்கடி புகார்கள் வந்தாலோ, நிலுவை வேலைகள் அதிகம் இருந்தாலோ இவரைப் பணி மாற்றம் செய்து விடுவார்களாம். காரணம் கருப்புச் சட்டைக்காரர் கடமையே கண்ணாயிருந்து, விரைந்து வேலைகளை முடித்துவிடுவாராம். “வாங்க, கருப்புச் சட்டைக்காரரே” என்கிற அடைமொழியும் இவருக்கு இருக்கிறது.

ஜாதி மறுப்புடன், சுயமரியாதைத் திருமணம்!

நாள்தோறும் சந்தித்துக் கொள்கிற, உற்ற தோழர் அரு.நல்லதம்பிதான் பெரியார் கொள்கைக்கு இவரை இட்டுச் சென்றுள்ளார். வலங்கைமானில் பணியில் இருந்தபோது, மதுக்கூர் கிராமத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஊர்வலம்  மூலமாக விழிப்புணர்வு பெற்றுள்ளார். இணையர் திலகவதியும், பெரியாரியக் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளார். குடும்ப விழா நடத்துவது, கொடி பிடிப்பது, அக்னிச் சட்டி ஏந்துவது, தோழர்களுக்கு விருந்து உபசரிப்பது, ஒன்றியத் திராவிடர் கழகச் செயலாளராக இருந்து பணியாற்றியது என நிறைவான பகுத்தறிவுப் பணியைச் செய்து அவர் மறைந்திருக்கிறார்.

இவர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. தற்போது ஓசூரில் வசிக்கிறார். பெரியாரின் கொள்கைகளுக்கு ஏற்ப பளுதூக்கும் வீராங்கனையாக உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி ஜார்கண்ட், லக்னோ, இராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆந்திரா, கருநாடகா எனப் பல மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார். தவிர நார்வே நாட்டிற்கும் சென்று பெருமை சேர்த்துள்ளார். மேலும் அமெரிக்கா, பல்கேரிய நாடுகளுக்கும் செல்லவிருந்த நிலையில், விசா தொடர்பான பிரச்சினைகளால் பயணம் தடைப்பட்டுப் போயுள்ளது. மகளுக்கு ஜாதி மறுப்புடன் கூடிய, சுயமரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்துள்ளார்கள்.

கிறுக்கன் கிறுக்கிய கீதைப் பணி!

பட்டியலின மாணவர்கள், இளைஞர்கள்பால் கவனம் கொண்டு, அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பகுத்தறிவு மேம்பாட்டிற்கு நிறைய செலவு செய்துள்ளார். தமிழ்நாடு அளவில் நடைபெறும் பெரிய நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். “முத்தமிழ் பகுத்தறிவு இசைக்குழு” என்கிற ஒன்றைத் தொடங்கி பாடகர்களையும் உருவாக்கியுள்ளார். தவிர ஏராளமான பாடல்களையும்  இயற்றியுள்ளார்.

“பெரியார் திடலுக்கு வர வேண்டும், பெரியார் நினைவைப் பெற வேண்டும், இளையோர் அங்கு நிலை வேண்டும், இன உணர்வோடு அங்கு நிறை வேண்டும் என்றும், கிறுக்கன் கிறுக்கிய கீதைப் பணி, அய்யா கிண்டி கிழங்கெடுத்தார் கி.வீரமணி, கீதைக்கு அடிப்பார் அவர் சாவுமணி, இதைக் கிடைக்கும் நேரம் பார்த்து வாங்கிப்படி”, என்பன போன்ற பாடல்கள் அவரால் உருவாக்கப்பட்டவை.

மாணவர்களுக்கும், பள்ளிக் கூடத்திற்கும் உதவி செய்வதையே வாழ்நாள் கடமையாக எண்ணி வருகிறார். தான் பெற்ற கல்விக்குப் பல சிரமங்களும், பொருளாதாரத் தடைகளும் இருந்தன. அதுபோன்ற சுமை யாருக்கும் வரக் கூடாது எனத் தன்னால் இயன்றவரை சேவை செய்கிறார். இவரின் எழுதுபொருள் அங்காடியைத் “தாத்தா கடை” என்றே அன்போடு அழைக்கிறார்கள்.

பூஜையால் நன்மையில்லை; என்னால் பலனுண்டு!

பள்ளத்தூர் கிராமத்தில் மரங்கள் அடர்ந்த தோட்டத்தின் நடுவே ஒரு வீடு வைத்துள்ளார். அதன் கட்டுமானத் தொடக்கத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஆளுக்கொரு சாஸ்திர, சடங்குகள் சொல்லி இருக்கிறார்கள். எதற்கும் அசையவில்லை அய்யா ஆத்மநாதன்.‌ “அய்யோ… பூஜை செய்யாமல் கட்டுமானம் தொடங்கினால் என்ன ஆகுமோ”, எனப் பொறியாளரும் அவர் பங்கிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார். பிறகுதான் ஆத்மநாதன் ஒரு சமாதானத்திற்கு வந்துள்ளார். அவரே மண்வெட்டியை எடுத்து, தரையில் மூன்று முறைக் கொத்தியுள்ளார். அப்போது கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இறுதியாகச் சொன்னாராம், “நீங்கள் நல்ல முறையில் வேலை செய்து கொடுங்கள், நான் சற்றுக் கூடுதலாகவே ஊதியம் தருகிறேன், வேறு சில வசதிகளும் செய்து தருகிறேன் என்றதோடு, பூஜைகளால் உங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது; ஆனால் என்னால் உங்களுக்குப் பயன்கள் உண்டு”, என்றாராம்.

இவரின் இணையர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.‌ இது ஆத்மநாதன் அவர்களின் தீவிர பெரியாரியக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.‌ அரிஜன் தெரு, மேல தெரு, பறையர் தெரு என்றெல்லாம் இருந்ததை மாற்றி “பெரியார் நகர்” என வைத்த பெருமை பள்ளத்தூர் திராவிடர் கழகத்தவர்களையே சாரும். அதேபோல தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் பெயரிலான நூலகத்தில் ஏராளமான நூல்களை வாங்கி, வாசிப்பின் முக்கியத்துவத்தையும் அதிகப்படுத்தியுள்ளனர்.

152 பக்கம் நோட்டு அன்பளிப்பு!

டில்லியில் நடைபெற்ற பெரியார் மய்யத் திறப்பு விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டதுடன், இயக்கப் போராட்டத்தில் அவரின் வாழ்விணையர் மற்றும் மகளும் கைதாகி இருக்கின்றனர். இறப்பிற்குப் பிறகு தமது உடலை, தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குக் கொடையாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் ஆத்மநாதன். ஹோமியோபதி மருத்துவர் அழகு,
அரு.நல்லதம்பி, ஆத்மநாதன் மூவரும் கூட்டாளிகளாக இருந்து, தங்களுக்குள்ளேயே உற்சாகமும், நம்பிக்கையும் கொடுத்துக் கொண்டு, வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.

பேட்டியின் நிறைவில், “இதோ… இதை அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்”, என 152 பக்கங்கள் கொண்ட ஒரு நோட்டைக் கொடுத்தார். குறிப்பறிந்து கொடுக்கப்பட்ட அந்த நோட்டு, அவரைப் போலவே இன்னொரு பெரியார் தொண்டருக்குப் பயன்படும். இதுதான் இந்த இயக்கத்தின் தொடர்ச்சி; வளர்ச்சி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *