“என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்” என்று அவர் இயக்கிய திரைப்படம் துவங்குவதற்கு முன் ஒலிக்கும் கம்பீரமான அந்தக் குரல் இனி தமிழ் திரைப்படங்களில் ஒலிக்காது.
தனது திரைப்படைப்புகள் மூலம் நமது கண்களை கிராமங்களை நோக்கித் திருப்பியவர். கிராம மக்களின் வாழ்வியலை உயிர்ப்புடனும், உணர்ச்சியுடன் பதிவு செய்தவரின் கண்கள் இனி இவ்வுலகை காணாது.
முதல் படமான ‘16 வயதினிலே’யிருந்து (1977) இறுதி படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’ (2020) என மொத்தம் 34 தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார் அவர். தனது திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் எடுக்காமல், சமூக அக்கறையுடன், இச் சமூகத்தில் புரையோடி கிடக்கும் ஜாதி, மதம், மூட நம்பிக்கைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க வைத்தவர். இந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட மனிதர், தந்தை பெரியார் கொள்கைகள் மீது பற்றுக் கொண்டவர்.
தனது படைப்புகளின் மூலம் தந்தை பெரியாரின் சிந்தனைகளை விதைத்தவர். அந்த அடிப்படையில் தான் அவருக்கு ஆசிரியர் அவர்களால் ‘புரட்சிக் கலைவேந்தர்’ என்று புகழாரம் சூட்டி நம்மாள் போற்றப்பட்டவர்.

அவருடைய பகுத்தறிவு சிந்தனைக்குச் சான்றாக அமைந்த திரைப்படம், தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி பகுத்தறிவுப் பாதையில் இந்நாள் வரை பயணிக்கும் புரட்சித் தமிழர் சத்தியராஜ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த “வேதம் புதிது” திரைப்படம். (அண்மையில் அதுகுறித்த பல தகவல்களுடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை ‘விடுதலை’யில் வெளிவந்தது).
மற்றொருபடம் ‘முதல் மரியாதை’. இப் படத்தில் வரும் வடிவுகரசி அவர்கள் நடித்த ‘பொன்னாத்தா’ கதாப்பாத்திரம். இந்தப் பெண் வேறொரு ஆணால் ஏமாற்றப்பட்டு, அதனால் ஒரு குழந்தை உருவான நிலையில், அவர் தந்தை வேண்டுக் கோளுக்கிணங்க பொன்னாத்தாவை திருமணம் செய்து கொள்வார் மலைச்சாமி (சிவாஜி).
அந்த மலைச்சாமி தான் திருமணம் செய்து கொண்ட பெண், ஏற்கனவே வேறு ஒருவனிடத்தில் ‘கெட்டுப் போனவள்’ என்ற காரணத்தால், அவளைத் தொடாமலேயே, அவளுடன் வாழ்ந்து கொண்டியிருப்பார். (அதனாலேயே அந்த பெண் எல்லோரிடத்திலும் வெறுப்பாகவே பேசிக் கொண்டிருப்பார்). ஆனால் அவருக்கோ, வேறு பெண்ணுடன் காதல் தோன்றுவது போன்று திரைப்படம் அமைந்திருக்கும்.
பென்னாத்தா ஒரு இடத்தில் பேசுவார், “நான் எப்போதோ செய்த தவறுக்காக, வாழ்நாள் முழுவதும் நீ என்னை தண்டிக்கலாமா?” என்று கேட்பார். அந்தக் கேள்வியின் மூலம் பெண்களின் வலிகளையும், கற்பு குறித்த இச் சமூகத்தின் பார்வையைச் சொன்னவர்.
கிராமங்களில் ஜாதியும், மூட நம்பிக்கையும் எந்தளவுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் திரைப்படம் 1978-ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’. இது கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஒரு வெள்ளந்தியான காதல் கதையாகும். படத்தின் கதைச் சுருக்கம்.
தாயை இழந்த பாஞ்சாலி (ராதிகா) தன் அக்கா மற்றும் அக்கா கணவரின் ஆதரவிற்காக ஒரு கிராமத்திற்கு வருகிறாள். அதே கிராமத்தைச் சேர்ந்த பரஞ்சோதி (சுதாகர்) நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்தவன். பாஞ்சாலி மீது அவளது அக்கா கணவனுக்குத் தவறான எண்ணம் இருக்கிறது. இந்நிலையில், பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இடையே காதல் மலர்கிறது.
ஜாதி, மற்றும் கிராமத்துப் பஞ்சாயத்துகளின் எதிர்ப்பு களை மீறி, இந்த இணை எப்படி ஒன்று சேர்கிறது என்பதே அப்படத்தின் கதை.
இத் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு சடங்குக் காட்சி, கிராமத்து மூடநம்பிக்கைகளையும் அதன் கொடூர முகத்தையும் வெளிப்படுத்தியது. கதையின் ஒரு பகுதியில், அந்தப் பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கிராமமே வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது. மழையை நிறுத்த வேண்டுமானால், கிராமத்தின் பழங்கால வழக்கப்படி ஒரு கன்னிப் பெண் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நிர்வாணமாக கிராமத்தைச் சுற்றி வர வேண்டும் என்ற கொடூரமான சடங்கை ஊர் பெரியவர்கள் முன்வைக்கிறார்கள்.
ஆதரவற்றவளாக இருக்கும் பாஞ்சாலியை (ராதிகா) அவள் ஜாதிமாறி கொண்ட காதலால், அவளை அவமானப்படுத்த, அவளை அடக்க, இந்தச் சடங்கைச் செய்ய ஊர் மக்கள் வற்புறுத்தி அவளை தேர்வு செய்கிறார்கள்.
அந்தச் சடங்கின்படி பாஞ்சாலி ஆடையின்றி அந்தப் பாதையில் நடந்து வரும்போது, இப்படத்தின் கதைநாயகன் சிறைச் சென்று தண்டனை முடிந்து அதே நேரத்தில் பரஞ்சோதி (சுதாகர்) ஊருக்குள் நுழைவான். அவமானம் மற்றும் பயத்தில் இருக்கும் பாஞ்சாலியைக் கண்டு அதிர்ச்சியடையும் பரஞ்சோதி, உடனடியாகத் தன் வேட்டியைக் கழற்றி அவளுக்குக் கொடுத்து அவளது மானத்தைக் காப்பான். ஊர்க் கட்டுப்பாட்டையும் சடங்கையும் மீறிவிட்டதாகக் கூறி ஒட்டுமொத்த கிராம மக்களும் ஆத்திரமடைந்து இவர்களைக் கொல்லத் துரத்துவார்கள் அங்கிருந்து தப்பித்து ஓடும் இருவரும், ‘கிழக்கே போகும் ரயிலில்’ ஏறித் தப்பித்து ஒன்று சேர்வார்கள்.
இப்படி பல படங்களில் புரட்சி இயக்குநர் பாரதிராஜா கிராமங்களின் அழகை மட்டுமல்லாது, அவர்கள் ஆழ் மனதில் புதைந்திருக்கும் மூடநம்பிக்கைகளையும் தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியவர்.
பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்து எழும் ‘புதுமைப் பெண்’ பெண் சிசுக் கொலைக்கு எதிராகப் பேசிய ‘கருத்தம்மா’, காதலுக்கு முன்னால் ஜாதி, மதங்கள் ஒன்றுமில்லை என்று சொன்ன ‘அலைகள் ஓய்வதில்லை’.
கிராமத்து நிலப்பிரபுத்துவம் மற்றும் ஜாதிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு புரட்சிகரமான காதல் கதை வெளிவந்த “புதிய வார்ப்புகள்” என்று ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
குறிப்பிட்டு சொல்லுவது என்றால், சமுகத்திலிருக்கும் மூடத்தனங்கள், ஜாதி, மத வேற்றுமைகள், பெண் அடக்கு முறைகளுக்கு எதிரான தந்தைபெரியார் பகுத்தறிவு சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கியவர். தனது திரைப்படங்கள் மூலம் அவரின் சிந்தனைகளை விதைத்தவர் . அதில் அன்றும், என்றும் இவரே முதன்மை யானவர்.
தந்தை பெரியார் மீது பற்றுக் கொண்டவர். ஒருமுறை, தந்தை பெரியார் சிலைகளை உடைத்தெறிவோம் என்று ஒரு நபர் பேசியபோது, அவரைப் பார்த்துத் தன் சிங்கக் குரலில் எச்சரித்து கர்ஜித்தார் இப்படி.
“பெரியார் என்பவர் தனிமனிதர் அல்ல; ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் அடையாளம். சிலை மீது கை வைத்துப் பார், உன் கையை வெட்டி வீசி விடமாட்டோம்” என்று.
அவரது மறைவின் போது ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல..
கவியுலகில் புரட்சிக் கவிஞர் பரம்பரை உருவானது போல “புரட்சி இயக்குநர்” என்று நம்மால் சிறப்பிக்கப்பட்ட பாரதிராஜா பரம்பரை திரையுலகில் உருவாகி, இன்று வரை ஆண்டு கொண்டிருக்கிறது.
அவர் படைத்திட்ட படைப்புகளால் என்றும் தமிழ்த் திரையுலகில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்!
புரட்சி இயக்குநருக்கு நமது பகுத்தறிவு மரியாதைகள்!
