எழுத்தாளர் க.சரஸ்வதி
பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு
மண்டல் ஆணையத்தின் வரலாறு என்பது வெறும் சட்ட அல்லது நிர்வாக வரலாறு மட்டுமல்ல; அது நவீன இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான திருப்புமுனையாகும். ஒரே கட்சியின் ஆதிக்க அரசியலிலிருந்து, அந்தந்தப் பகுதியில் உள்ள சக்திகள், கூட்டணி அரசுகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சியை மய்யமாகக் கொண்ட புதிய அரசியல் யுகத்திற்கு இந்தியாவை இட்டுச் சென்ற வரலாற்றுச் சம்பவமாக அது அமைந்தது.
மண்டல் ஆணையம்
1978 டிசம்பரில் பிரதமர் மொரார்ஜி தேசாய், சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். அதன் தலைவராக பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் நியமிக்கப்பட்டார்.
சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (SEBC) என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட இந்த ஆணையம், பொதுவாக மண்டல் ஆணையம் என அறியப்பட்டது. ஜாதி அமைப்பு சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிலைநிறுத்துகிறது என்பதை ஆழமாக ஆய்வு செய்த இந்த ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய பரிந்துரைகளை முன்வைத்தது.
1980ஆம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்த மண்டல் குழு, இந்திய மக்கள்தொகையில் சுமார் 52 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) சேர்ந்தவர்கள் என கண்டறிந்தது. சமூக, பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த 11 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் அடிப்படையில், ஒன்றிய அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.
பல தலைமுறையாக உயர் ஜாதியினருக்கும், பட்டியலினத் தவர் மற்றும் பழங்குடியினருக்கும் இடையில் உள்ள இந்தப் பெரும் சமூகக் குழுக்கள், நாட்டின் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தபோதும், அரசு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மிகவும் குறைவாகவே பிரதிநிதித் துவம் பெற்றிருந்தனர் என்பதை அறிக்கை வெளிப் படுத்தியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகஸ்ட் 7, 1990
மண்டல் கமிஷன் அறிக்கை கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுக் காலத்திற்கும்மேல் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இறுதியாக, 1990 ஆகஸ்ட் 7ஆம் தேதி, சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி. சிங், தனது தேசிய முன்னணி அரசின் சார்பில், ஒன்றிய அரசுப் பணிகளில் பிறப்டுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முடிவை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
வி.பி. சிங்கின் வரலாற்றுப் பாராட்டு
அந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை விளக்கிய வி.பி. சிங்,
“இது மாபெரும் தந்தை பெரியார் மற்றும் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோரின் கனவை உண்மையில் நனவாக்கும் நிகழ்வாகும்”
என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
காலவரிசை
1979: சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை அடையாளம் காணவும், அவர்களின் முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்கவும் பி.பி. மண்டல் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
1980: இந்திய மக்கள்தொகையில் சுமார் 52% பேர் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என அறிக்கை தெரிவித்தது. அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
1980–1989: ஆட்சிக்கு வந்த அரசுகள் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த தயக்கம் காட்டின. இந்தக் காலகட்டத்தில் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரி திராவிடர் கழகம் புதுடில்லி உள்பட இந்தியா முழுவதும் 16 போராட்டங்கள், 42 மாநாடுகளை நடத்தியது. அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி வடபுலத் தலைவர்களை ஓரணியில் திரட்டி, மண்டல் குழு அறிக்கைக்கு ஆதரவைப் பெருக்கினார்.
1990: ஆகஸ்ட் 7ஆம் தேதி வி.பி. சிங் நாடாளு மன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். ஒன்றிய அரசு அலுவலக ஆணையை ஆகஸ்ட் 13ஆம் தேதி பிறப்பித்து, ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. சுதந்திர தின உரையிலும் வி.பி. சிங் இந்த முடிவை சமூக நீதிக்கான முக்கிய முன்னேற்றமாக விளக்கினார். எனினும், இந்த நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன.
மண்டலுக்கு எதிராக கமண்டலைத் தூக்கிய பா.ஜ.க., அதுவரை வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசுக்குத் தந்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது வி.பி.சிங் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்தார்.
1992: இந்திரா சாஹானி எதிர் இந்திய ஒன்றியம் (Indra Sawhney vs Union of India) வழக்கில் உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டினை உறுதி செய்தது.
மண்டல் எதிர்ப்புப் போராட்டங்கள்
சமூகநீதி குறித்த புரிதல் வரத் தொடங்கியதால் லாலு பிரசாத், முலாயம் சிங் போன்ற சமூகநீதித் தலைவர்கள் அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றனர். அதேபோல், 1995ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முதலாவது தாழ்த்தப்பட்டப் பெண் முதலமைச்சராக மாயாவதி பதவியேற்கும் பாதையும் இதன் மூலம் உருவானது.
தொடரும் சமூக நீதிப் பயணம்
மண்டல் ஆணையம் என்பது வெறும் இடஒதுக் கீட்டுக் கொள்கைக்கானது மட்டுமல்ல; இந்தியா சமூக நீதியை அணுகும் முறையில் ஏற்பட்ட அடிப்படை மாற்றமாகும். 1990களில் தெருக்களில் நடைபெற்ற போராட்டங்களிலிருந்து இன்று நீதிமன்றங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடரும் விவாதங்கள் வரை, அதன் தாக்கம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.
மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் மய்யத்தை மாற்றியது. பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்டிருந்த மக்களின் குரலை தேசிய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியது. இன்று அதன் வெற்றி அரசு வேலைகளில் கிடைத்த இடங்களால் மட்டுமல்ல; இந்திய அரசியல் மற்றும் சமூக சிந்தனையில் ஏற்படுத்திய நிரந்தர மாற்றத்தாலும் அளவிடப்படுகிறது.
ஒரு ஜனநாயகம் உண்மையிலேயே வெற்றி பெற வேண்டுமெனில், வரலாற்றாக புறக்கணிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மண்டல் ஆணையம் நமக்கு நினைவூட்டுகிறது.
“ஆகஸ்ட் 7 – மண்டல் அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமலான நாள் மட்டுமல்ல; நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உரிமை அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.”
