தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் தமிழர்களின் தொன்மைக்குச் சான்றாக ‘நடுகல்’ எனப்படும் அடையாளச் சின்னங்கள் கண்டறியப் படுகின்றன. இக் கண்டுபிடிப்புகள் தொடர் நிகழ்வாகவும் இருந்து வருகின்றன.
போரில் மடிந்த வீரர்கள்
தமிழர்களின் சங்க காலத்திற்கு முற்பட்டது நடுகல் மரபாகும். வீர மரபுக்குப் பழுதில்லாத பல போர்கள் அக் காலத்தில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற போரின்போது புறமுதுகு காட்டாது வீரர்கள் பலர் இறந்துவிடுவார்கள்.
அந்த வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அல்லது போர்க்களத்தில் அந்த வீரன் உயிர் துறந்த குறிப்பிட்ட இடத்தில் அவ் வீரனை நாளும் நினைவு கூரத்தக்க வண்ணம் ஒரு கல்லை வைப்பார்கள். அதுவே ‘நடுகல்’ எனப்படுவதாகும். வரலாறு, பண்பாடு, வணிகத் தொடர்புகளைப் பற்றிய தகவல்களையும் இவை வெளிப்படுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக சில நடுகற்களைப் பற்றி அறிவோம்.

பெருங்கற்காலத்தைப் பற்றி அறியலாம்
ஆதிச்சநல்லூர் நாகரிகம் தொன்மைச் சிறப்புடையது. அண்மையில் கண்டெ டுக்கப்பட்ட நடுகல் ஒன்று அதனை உறுதிப்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகில் உழுகுடி என்னும் ஊரின் ஏரிப் பகுதியில்தான் அந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
15 அடி உயரமும், 4 அடி அகலமும் உடைய இதனைத் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் கண்டெடுத்தனர். இந்த ஆண்டு (2026) பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கிடைத்தது.
வரலாற்றுக்கு முந்தையது ‘பெருங் கற்காலம்’ எனப்படுகிறது. அக் காலத்தைச் சேர்ந்த இந்த நடுகல் போரில் இறந்துபட்ட வீரனின் நினைவுச் சின்னமாகவும், அன்றைக்கு வாழ்ந்த மக்களின் நாகரிக வாழ்வையும், பண்பாட்டையும், வணிகத் தொடர்பு களையும் கூறுகின்றது.
மாடுகளுக்காக சண்டை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆனந்தூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று நடு கற்கள் 10 மற்றும 12ஆம் நூற்றாண்டிற்குரியனவாகும்.

இந்த ஆண்டின் (2026) மார்ச் மாதத்தில் இந்த நடுகற்கள் கிடைத்தன. அக் காலத்தில் நிலவி வந்தது நொளம்பா கலைப்பாணி. பல்லவர் காலத்தின் கலைச் செழுமை களில் குறிப்பாக சிற்பக் கலையின் சிறப்பைக் குறிப்பதே நொளம்பா கலைப்பாணி ஆகும்.
அதிலிருந்து தமிழ்நாட்டுச் சிற்பக் கலை சோழர் கலைப் பாணிக்கு மாறியது எவ்வாறு என்பதை விளக்கும் முக்கிய சான்றுகள் உள்ளவையாக இந்த நடுகற்கள் அமைந்துள்ளன.
சங்க காலத்தின் தமிழ்ப் பாடல்களில் ‘ஆநிரை மீட்டல்’ என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி வீரன் ஒருவன் மாடுகளுக்காகப் போரிட்டு மடிந்ததை இந்த நடுகல் வெளிப்படுத்துகின்றது. பசுக்களின் உருவங்கள் அழகாக இந்த நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
‘கட்டியங்காரன்’ நடுகல்
தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலை மரபின் வெளிப்பாடாக டிசம்பர் 2025இல், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பழங்காலத்தில் மக்கள் பொழுதுபோக்குக் கலைகளில் ‘தெருக்கூத்து’ முக்கிய இடம்பெற்று வந்தது. அத் தெருக்கூத்துகளில் கோமாளி, அரங்கக் காவலனாகத் தோன்றுபவரை ‘கட்டியங்காரன்’ என்று அழைப்பர். இது அந்தக் ‘கட்டியங்காரன்’ ஒருவனின் நடுகல் ஆகும். சுமாராக 187 ஆண்டுகள் பழைமைக்குரியது இது எனலாம்.
சமூகத்தின் கண்ணாடிகள்
இவை போன்ற நடுகற்கள், கல்வெட்டுகள், அகழாய்வின்போது கிடைக்கின்ற மக்களின் பயன்பாட்டுப் பொருள்கள், அணிகள், கட்டட அமைப்புகள், நீர்வழிக் கால்வாய் அமைப்புகள் தொன்மைக்கால தமிழர் களின் வாழ்க்கை முறையை, பண்பாட்டை விளக்குகின்ற சமூகத்தின் கண்ணாடி களாகத் திகழ்கின்றன.
நடப்பட்ட ஒரு கல்லைத் தெய்வமாகக் கருதி வணங்கும் வழக்கம் மக்களிடம் ஏற்பட்டது. தொல்காப்பியம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. போரில் ஈடுபட்டு வீரமரணமடைந்த வீரர்களுக்குப் பிடித்த கள், அவர்கள் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகள் முதலானவற்றை நடுகல்லின் முன்பாகப் படைத்தனர்.
அந்த நடுகற்களுக்கு மயில் தோகைகளைச் சூட்டி, பூக்களால் அழகுபடுத்துவர்.இவ் வழக்கமே பின்னர் சிறுதெய்வ வழிபாடாக மாறியது எனலாம்.
பழங்காலத்தில வாழ்ந்த மக்கள் கால்நடைகளின் மீது மிகவும் அன்புகாட்டி வளர்த்தனர். கால்நடைகளைத் தங்களது முக்கிய செல்வமாகக் கருதினர். நடுகற்களில் வீரனின் உருவத்தோடு, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களான வில், வாள், வேல் போன்றவற்றோடு ஆசையாக வளர்த்து வந்த மாடு, குதிரை, நாய் போன்ற விலங்குகளின் உருவங்களும் பல நடுகற்களில் காணப்படுகின்றன.
சண்டையில் இறந்துபோன சேவற் கோழிக்கு…
இருவேறு ஊர்களுக்குச் சொந்தமான சேவல் கோழிகளுக்கு இடையே சண்டைப் போட்டி நடைபெறும். அச் சண்டையின்போது இறந்துபட்ட சேவற் கோழிக்கும் நடுகல் அடையாளம் உள்ளது.
அந்த நடுகல்லில் சேவற் கோழியின் கொண்டையும், தோகையும் (இறகு) அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நடு கல்லின் மேலும், கீழும் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. அந்தச் சேவற் கோழியின் ஊர், எப்போது அது இறந்தது என்பன போன்ற தகவல்கள் உள்ளன.
தமிழ்மொழியின் எழுத்து வடிவ பரிணாம வளர்ச்சியை ஆராய்வதற்குப் பெரிதும் உதவுகின்ற வட்டெழுதது அமைப்பைக் கருத்தில் கொண்டு இக் கல்வெட்டு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம்.
கோழிகளை அடையாளப்படுத்திக் கண்டெக்கப்பட்ட நடு கற்களில் திருவண்ணாமலை – இந்தளூரில் ஒன்றும், விழுப்புரம் – செஞ்சி சாலையில் உள்ள அரசலாபுரம் கிராமத்தில் ஒன்றும் உள்ளன.
நடுகற்களை வரலாற்று அடையாளமாகக் கொள்ளலாம். வழிபாட்டு மன்றங்களாக மாற்றக் கூடாது.
