நெய்வேலி மணிவண்ணன்!-வி.சி.வில்வம்

6 Min Read

“எங்கள் ஊரில் வசித்த தோழர், உங்கள் ஊருக்கு வருகிறார், பயன் படுத்திக் கொள்ளுங்கள்”, எனத் தோழர்களை அறிமுகம் செய்து வைக்கும் வழக்கம் நம் இயக்கத்தில் உண்டு. அப்படித்தான் நெய்வேலி வெ.ஞானசேகரன், காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்களுக்குத் தொலைப்பேசி மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் கொ.மணிவண்ணன். சிவகங்கை மாவட்டம், உருப்போக்கி கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவருக்கு, தற்போது 76 வயதாகிறது. தம் 16 ஆவது வயதில் நெய்வேலிக்குச் சென்றவர், 60 ஆவது வயதில் ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார்.‌ இப்போது தேவகோட்டையில் வசித்து வரும் அவரை இந்த வாரம் ஞாயிறு மலருக்காகச் சந்தித்தோம்!

நெய்வேலியில் என்ன பணி செய்தீர்கள்?

எனது தாய் பெயர் அழகிய அம்மாள், தந்தை பெயர் கொங்கப்பன். என்னுடன் பிறந்தோர் இரண்டு சகோதரிகள். கல்வி கற்காத நிலையிலும், அந்தக் குக்கிராமத்தில் எங்களைப் படிக்க வைத்தார்கள் எங்கள் பெற்றோர். நான் 8 ஆம் வகுப்பு வரை படித்தேன். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (Neyveli Lignite Corporation – NLC) நண்பர் ஒருவர் உணவகத்தில் (Canteen) வேலை பார்த்தார். அவர் மூலம் எனக்கும் அங்கு வேலை கிடைத்தது. அந்த உணவகத்தில் மேலாளராக இருந்த திராவிடர் கழகத் தோழர் வெ.ஜெயராமன் மூலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் ஏற்பட்டது. அதுவரை தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் உலகத் தமிழ்க் கழகத்தில் இருந்தேன். கணேசன் என்கிற எனது இயற்பெயரை, மணிவண்ணன் என அப்போதுதான் மாற்றினேன். நிறுவனத்தில் தனித்தமிழ்ப்  பற்றாளர்களும் கணிசமாக இருந்தனர்.‌

உணவகத்தில் 15 ஆண்டுகள் வேலை செய்த நிலையில் மேற்படிப்புப் படிக்கவும், ஓட்டுநர் உரிமம் எடுக்கவும் வெ.ஜெயராமன் தூண்டுதலாய் இருந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் முதுகலைச் சமூகவியல் படித்தேன். பிறகு ஓட்டுநர் உரிமமும் பெற்று, வாகனம் இயக்குபவராக (Vehicle Operator) நிறுவனத்தின் உள்ளே பணிக்குச் சென்றேன். சாதாரண வாகனம் தொடங்கி “கிரேன்” வரை இயக்குமளவு உயர்நிலையில் பணிபுரிந்தேன். அதேபோல ஜெயராமன் அவர்களும் மேற்படிப்பு முடித்து “போர்மென்” வரை உயர்ந்தார். நெய்வேலியில் 44 ஆண்டுகள் பணிபுரிந்து, 2010 இல் நான் ஓய்வு பெற்றேன்.

பணியில் இருந்த காலத்தில், இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

ஜெயராமன், ஞானசேகரன், கனகசபாபதி, இராஜாராம், தண்டபாணி, அதியமான், இசக்கிமுத்து, கோவிந்தராஜ், கண்ணன், பாஸ்கர் உள்ளிட்ட தோழர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்போது அடுப்புக்கரி கொண்டு, பெரியார் கருத்துகளைச் சுவற்றில் எழுதுவோம். 1996 இல் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் விளைவாக 15 நாட்கள் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டோம். இதனால் எங்கள் வேலைக்குச் சில பிரச்சினைகள் வந்தன. ஆசிரியர் அவர்கள் தான் உடனடியாக நிறுவனத்துடன் பேசி சரிசெய்தார்கள். பிறகு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறை சென்ற தோழர்களுக்கு ஆசிரியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இப்போதும் அதைப் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

அதேபோல ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் எதிரிகள் சிலரால் தாக்கப்பட்டோம். வெ.ஜெயராமன், வெ.ஞானசேகரன், இராஜாராம், நான் உள்ளிட்ட மேலும் சில தோழர்கள் 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். பிறகு ஆசிரியர் ஏற்பாட்டில் வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் சட்டபூர்வமாகத் தீர்ப்பு பெற்றோம். தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநாடுகளுக்கும் சென்றுவிடுவோம். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் போயுள்ளோம். ஆசிரியர் அவர்களின் சகோதரர் கி.தண்டபாணி அவர்களின் சக்தி டிரான்ஸ்போர்ட் பேருந்தின் மூலம் பல நிகழ்ச்சிகளுக்கும் சென்றுள்ளோம். பேருந்திலேயே உணவு, தண்ணீர் என அனைத்தையும் எடுத்துச் செல்வோம்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தோழர் தீவிர செயல்பாட்டில் இருந்தீர்களா?

தந்தை பெரியார் அடிக்கடி நெய்வேலி வருவார். எனக்குத் தெரிந்து வெ.ஜெயராமன், வெ.ஞானசேகரன், சாக்ரடீஸ் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணங்களைத் தந்தை பெரியார் நடத்தி வைத்தார். நிறுவனத்திற்கு வெளியிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். ஆசிரியர் பொய்யாமொழி என்பவர் ஏற்பாட்டில், நெய்வேலி அருகே காட்டுக்குடலூருக்குப் பெரியார் பேச வந்திருந்தார். நாங்கள் மிதிவண்டியில் 20 கி.மீ பயணம் செய்து போனோம். அப்போது எங்கள் வண்டியைச் சிலர் “பஞ்சர்” ஆக்கிவிட்டார்கள். நிறுவன வளாகத்தில் மட்டுமின்றி, நெய்வேலியைச் சுற்றிலும் நடைபெறும் கூட்டங்களுக்குத் தோழர்கள் இணைந்து போவோம்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பார்ப்பனர்களும், வடநாட்டாரும் அதிகம் இருப்பார்கள். இதைக் கண்டித்துப் பேசிய தந்தை பெரியார், “வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், அய்.டி.அய், டிப்ளமோ முடித்தவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும்”, என்றும் கேட்டுக் கொண்டார். நிர்வாகமும் உடனே அதைச் செயல்படுத்தியது. தந்தை பெரியார் மறைந்த நேரத்தில் ஒரு லாரியை வாடகைக்கு எடுத்து, 30 தோழர்கள் சென்னைக்குச் சென்றோம். இறுதி நிகழ்ச்சியில் முழுவதுமாகப் பங்கேற்றுத் திரும்பினோம்.

அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டம் உள்ளிட்ட பலவற்றிலும் கலந்து கொண்டுள்ளோம். நிறுவன வளாகத்தில் பகுத்தறிவுக் கண்காட்சி, ஈழத்தமிழர் கண்காட்சி போன்றவையும் நடத்தியுள்ளோம். கடலூர் மாவட்டத் திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவராக வெ.ஞானசேகரன் இருந்த போது, செயலாளராக நான் இருந்தேன். நிறுவன வளாகத்தில் திராவிடர் கழகக் கொடிக் கம்பமும், கல்வெட்டுகளும் உள்ளன.  அதேபோன்று நுழைவாயிலிலும் இருக்கிறது.

பணி ஓய்விற்குப் பிறகு தங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

எனது சொந்த ஊரைப் போலவே நெய்வேலியும் மாறிப்போனது. ஓய்விற்குப் பிறகு தேவகோட்டையில் ஒரு வீடு வாங்கி வசித்து வருகிறோம். எனது இணையர் பெயர் வள்ளியம்மை. எங்கள் திருமணம் 1973 இல் காளையார்கோயில் ஒன்றியம் உருப்போக்கி கிராமத்தில் நடைபெற்றது. எங்களுக்கு மூன்று மகன்கள். சு.அறிவுக்கரசு இரண்டு திருமணங்களையும், சாமி.திராவிடமணி ஒரு திருமணத்தையும் நடத்தி வைத்தார்கள். ஆசிரியர் அவர்களுடன் பயணத்தில் சாமி.திராவிடமணி நெய்வேலிக்கு வந்துள்ளார். அப்போதே எனக்கு அறிமுகம்.

இங்கு வந்தவுடன் தேவகோட்டை ஒன்றியத் திராவிடர் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றேன். முன்பு சிவகங்கை மாவட்டத்திலும், தற்போது காரைக்குடி கழக மாவட்டத்திலும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சென்றுவிடுவேன். மாநாடு, பொதுக்குழு உள்ளிட்ட பெரிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தனி வாகனம் பிடித்து, காரைக்குடி கழக மாவட்டத் தோழர்கள் சென்றுவிடுவோம். தேவகோட்டையில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் “பெரியார் பெருந்தொண்டர்” எனும் விருதை ஆசிரியர் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். தற்போது காரைக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் துணைத் தலைவராக இருந்து வருகிறேன்.

நாற்பது ஆண்டுகளாக ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து வருகிறீர்கள். அதுகுறித்த தங்கள் கருத்துகள் என்ன?

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வளாகத்திற்கும், நெய்வேலி நகரத்திற்கும் ஆசிரியர் அவர்கள் அதிகமாக வந்துள்ளார்கள். சமூகம் சார்ந்த போராட்டங்களில் நாங்கள் பங்குபெறும் போது, பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவையனைத்தையும் மிக நுணுக்கமாக, சட்டப்பூர்வமாகச் சரிசெய்து கொடுத்தவர் ஆசிரியர் அவர்கள் தான். ஒரு போராட்டத்தின் போது எனக்குக் காயம் ஏற்பட்டது. ஓய்வில் வீட்டில் இருந்த போது, ஆசிரியர் நேரடியாக வந்து பார்த்தார்.  அவையெல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்.

நாமெல்லாம் ஒரு குடும்ப உறவுகள் என்பதை ஆசிரியர் தம் செயல்களால் உணர்த்திக் கொண்டே இருப்பார். தோழர்களை ஒருங்கிணைப்பதில் ஆசிரியருக்கு நிகர் யாருமில்லை. அதேபோல அனைவருக்கும் கைகொடுக்கும் அந்த ஈர்ப்பு, பாச உணர்வு எப்போதும் எனக்குப் பிடிக்கும். நட்புக்கு இலக்கணமாகவும் ஆசிரியரை நான் பார்க்கிறேன். ஆசிரியரின் உடல்நலம், குரல்வளம் சிறப்பாக இருக்கிறது. அது தொடர்ந்து நமக்குக் கிடைக்கும். கோழி தம் குஞ்சுகளைக் காப்பதைப் போல, பருந்துகளிடம் இருந்தும் பாதுகாப்பதைப் போல,

காலத்திற்கு ஏற்ப இயக்கத்தைத் தொய்வின்றி காத்து வருகிறார் ஆசிரியர்”, எனக் கொ.மணிவண்ணன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *