தஞ்சாவூர், ஆக.7- தமிழ்நாடு வேளாண் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளித்துள்ளது, விவசாயி களின் எதிர்பார்ப்பு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தெரியவில்லை என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: வேளாண் நிதி நிலை அறிக்கையில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லை.சிறுதானியங்கள், குறுதானியங்கள், மானாவாரி பயிர்களின் உள்ளூர் விற்பனைக்கான உத்தரவாதம், அரசு கொள்முதல், மானியத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம். பதிலுரையிலாவது கரும்புக்கு ஆதாரவிலையாக ரூ.4500, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்குவது, நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்வு, நிவாரணம் போன்ற வற்றை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: சில திட்டங்கள் வரவேற்கும்படி இருந்தாலும் மாநில வேளாண் நிதி நிலை அறிக்கையில் நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவிக்காதது, பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது, தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யாதது மற்றும் புதிய மின் இணைப்பு தொடர்பான அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளை ஏமாற்றியும், வஞ்சித்தும் உள்ளது. விவசாயிகளின் வலியும், வேதனையும், எதிர்பார்ப்பும் முதலமைச்சருக்கு தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்த கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, நெல்லுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என அறிவித்த எதுவுமே நிதி நிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. கவர்ச்சி அறிவிப்புகளை ரத்து செய்துவிட்டு தேர்தல் வாக்குறுதியின்படி விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி ப.கல்யாணம்: நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தரப்படும் என்பது உட்பட விவசாயம் தொடர் பாக தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் நடவு மானியம் வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கடன்களை கூட தள்ளுபடி செய்துள் ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் காவிரி தனபாலன்: மண்வள பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.122 கோடி ஒதுக்கீடு, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம், திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் ஏற்றுமதி மண்டலங்கள் அறிவித்தல் போன்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை, நெல்லுக்கான ஊக்குவிப்பு மானியம், விவசாயி களுக்கான ஓய்வூதியம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம் பெறா தது விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
