துவக்கத்திலேயே வேலையைக் காட்டிய ஒன்றிய அரசு அதிகாரிகள் அஞ்சல் வாக்குப்பதிவில் முறைகேடு செய்த இருவர் பணியிடைநீக்கம்!

2 Min Read

வேலூர், ஏப். 14- வேலூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணியின் போது ஏற்பட்ட புகார்களை அடுத்து, இரண்டு மண்டல அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆம்பூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து வாக்கு சேகரித்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் முற்றுகை மற்றும் பணியிடைநீக்கம்

வேலூர் மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அஞ்சல் வாக்கு சேகரிக்க 51 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டு தொகுதியில் நேற்று முன்தினம் (12.4.2026) இப்பணிகள் நடந்தபோது, ஒடுகத்தூர், ஈச்சங்காடு மற்றும் அன்பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.

குறிப்பாக, வாக்காளர்களின் விருப்பத்திற்கு மாறாக மண்டல அலுவலர்களே வாக்களித்து விட்டு, வாக்காளர்களிடம் கையொப்பம் மட்டும் பெற்றதாகக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து, பணியில் மெத்தனமாக இருந்த மண்டல அலுவலர்கள் நாகலிங்கம் மற்றும் குணசேகரன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

ஆம்பூரில் நிகழ்ந்த குளறுபடி

ஆம்பூர் தொகுதியில் 513 வாக்காளர்களிடம் அஞ்சல் வாக்கு பெறும் பணி நேற்று முன்தினம் (12.4.2026) தொடங்கியது. கதவாளம் ஊராட்சியில் 85 வயதான சின்னராஜ் (த/பெ சாமன்) என்பவரிடம் வாக்கு பெற அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கு அதே பெயரைக்கொண்ட ராமலிங்கம் மகன் சின்னராஜ் (72) என்பவரிடம் அதிகாரிகள் அஞ்சல் வாக்கை பெற்றுள்ளனர்.

வயது மற்றும் தந்தை பெயரில் உள்ள வித்தியாசத்தை கவனிக்காமல் அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்து வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலை தளங்களில் வைரலானதை அடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார் சம்பந்தப் பட்ட குழுவினரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பரபரப்பான சூழல்

தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை வேலூர் மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சல் வாக்குப்பதிவு பணிகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *