அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகள்

2 Min Read

புதுடில்லி, ஆக. 3- அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தமிழ்நாட்டில் 38 காவல் நிலையங்களில் இருந்த 41 ஆவணங்கள் திருடுபோய் உள்ளன. சிலை கடத்தல் வழக்கின் ஆவணங்கள், சி.டி.க்கள் காணாமல் போனது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எப்.அய்.ஆர் கணினிமயமாக்கப்பட்டு விட்டதா? சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன, அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளை எழுப்பியது. அதோடு, இது குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு அதிகாரி உடனடியாக நியமிக்கப்பட்டு, வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 3,000 சிலைகள் மற்றும் பழங்கால கலைப் பொருட்கள் அமெரிக்க அருங்காட்சியகங்களில் உள்ளன என்று அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, பஞ்சலோக செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், மகாவீரர், புத்தர் சிலைகள் உள்ளிட்டவையும்,  மற்றும் பழங்கால கலைப் பொருட்களும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, மகாராஜா போஜாவால் நிறுவப்பட்ட 11ஆம் நூற்றாண்டின் பளிங்கு கல்லாலான சரஸ்வதி தேவி சிலையானது இங்கிலாந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை தூதரக அளவிலான பேச்சு வார்த்தை மூலம் இந்தியாவுக்கே கொண்டு வர வேண்டும். அதற்கு ஏதுவாக உள்துறை அமைச்சகம் மற்றும் ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சகத்தையும் இந்த வழக்கில் இணைத்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மும்பையில் இறந்தவர்களின் பெயரில்

ஆதார், பான் பயன்படுத்தி ரூ.2.29 கோடி நில மோசடி

அய்வர் கைது

நவி மும்பை, ஆக. 03- நவி மும்பையின் கரஞ்சடே பகுதியைச் சேர்ந்த ஒரு நிலம், நாதன் எலியாஹூ சின்சோல்கர் மற்றும் ஷாலோம் எலியாஹூ சின்சோல்கர் ஆகிய இரு சகோதரர்களுக்கு சொந்தமானது.

இருவரும் இஸ்ரேல் நாட்டுக்கு புலம்பெயர்ந்து, அங்கேயே காலமானார்கள். இதை அறிந்த சூரஜ் ஷிண்டே, தனது தந்தை மற்றும் மைத்துனரை, மறைந்து போன நில உரிமை யாளர்கள் நாதன் மற்றும் ஷாலோம் போல ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.

இதற்காக போலி பான் கார்டு மற்றும் போலி ஆதார் கார்டு போன்ற அடையாள ஆவணங்களைத் தயாரித்துள்ளார். பின்னர் அந்த நிலத்தை ரூ. 2.29 கோடிக்கு போலி விற்பனைப் பத்திரம் மூலம் விற்றுள்ளனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில், நவி மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், கோவாவின் திவிம் பகுதியில் சூரஜ் ஷிண்டே கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சித்தப்பா சதீஷ் நம்தேவ் ஷிண்டே (41) மற்றும் மைத்துனரான தேஜஸ் பிரமோத் சுர்வே (26) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *