புதுடில்லி, ஆக.3 “இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் எந்த மன்னிப்பும் தேவையில்லை; அரசாங்கம்தான் அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பகிரங்க மன்னிப்பை வழங்க கடமைப்பட்டுள்ளது” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த ராகுல் காந்தி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கட்டாய மறுதேர்வு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட கோபிகா, ரோஷிணி மற்றும் வெற்றி ஆனந்தன் ஆகிய மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு தொடர்பான காணொலியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
முறைகேடான அமைப்பால்
பறிபோகும் உயிர்கள்
நேர்மையாகவும் கடினமாகவும் உழைக்கும் மாணவர்கள், ஒரு நேர்மையற்ற கல்வி அமைப்பின் குளறு படிகளுக்கு ஏன் பலியாக வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தும் நடவடிக்கைகளால் இளம் மனங்கள் மீது ஈடுசெய்ய முடியாத மன அழுத்தம் திணிக்கப்படுகிறது. ஒவ்வொரு புள்ளிவிவரத்துக்கு பின்னாலும் ஒரு குழந்தையின் கனவும், ஈடு செய்ய முடியாத இழப்பும் உள்ளது. தேர்வுகள் நியாயமாக நடத்தப்பட்டு, கல்வி நிறுவனங்களின் தோல்வியால் எந்தவொரு மாணவரும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படாத சூழலை உருவாக்கவே காங்கிரஸ் போராடி வருகிறது. மாணவர்கள் மீது தவறு இருப்பது போல பிரதமர் மோடி மன்னிப்பைப் பற்றி பேசுகிறார். ஆனால், இங்குள்ள மாணவர்களுக்கு பிரதமரின் மன்னிப்பு தேவையில்லை; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையும் நீதியும் வழங்கி, அரசுதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
