காஞ்சிபுரம், ஆகஸ்ட் 1- கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் க.சுந்தர் 70,694 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை விட 14,223 வாக்குகள் அதிகம் பெற்று, 84,917 வாக்குகளுடன் தவெக வேட்பாளர் முனிரத்தினம் வெற்றி பெற்றார்.
இருப்பினும், வாக்குப்பதிவு முடிவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்த தி.மு.க. வேட்பாளர் க.சுந்தர், 10 குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளின் வாக்குப் பதிவுகளை சரிபார்க்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார். அதற்கான கட்டணங்களை செலுத் தியதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணை யத்தின்உத்தரவுப்படி காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாதலைமையில், பெல் பொறியாளர்கள் உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
வாக்குச்சாவடி இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கிலேயே இந்தப் பணிகள் நடைபெற்று வந்தன. வாக்குப்பதிவு சரிபார்ப்பு தொடங்கியபோது மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு காட்டப்பட்டன. ஆனால் பழைய வாக்குப்பதிவின் போது விவிபேட்டில்பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று க.சுந்தர் கோரிக்கை வைத்தார். தேர்தல் ஆணைய விதிப்படி அதை எண்ண முடியாது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, க.சுந்தர் ஆட்சேபனைக் கடிதம் கொடுத்துவிட்டு, அதன் பிறகு வாக்குப்பதிவு சரிபார்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், வாக்குப்பதிவு சரிபார்ப்பு நடவடிக்கைகள் நேற்று முடிவதாக இருந்தது. கடைசியாக 314-ஆவது வாக்குச் சாவடியின் வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்படும்போது, அதை விவிபேட் உடன் இணைக்க முடியவில்லை. இதனால் பணியைத் தொடர முடியாமல் போனது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சினேகா கூறுகையில், `ஆகஸ்ட் 1-ஆம் தேதி காலை 9 மணிக்குள் பழுதான இயந்திரத்துக்குப் பதிலாக வேறு இயந்திரத்தைத் தேர்வு செய்வதா அல்லது அதே இயந்திரத்தை பொறியாளர் மூலம் சரிசெய்து பார்க்க வேண்டுமா என்பதை திமுக வேட்பாளர் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதுகுறித்து திமுக வேட்பாளர் க.சுந்தர் கூறும்போது, “நாங்கள் சந்தேகத் துக்குரியதாகக் குறிப்பிட்டதே 10 இயந்திரங்களைத்தான்.
அதில் ஒன்று பழுது எனக் கூறுவதை ஏற்க முடியாது. மேலும், நாங்கள் கேட்டபடி விவிபேட் வாக்குச்சீட்டுகள் சரி பார்க்கப்படாததால், தற்போதைய நடவடிக்கை எங்களுக்குத் திருப்தி அளிக்க வில்லை. எனவே இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்றார்.
