புதுடில்லி, ஆக. 1 தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளால் நேரிடும் விபத்துகளினால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பான நடைமுறையை உருவாக்கும்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (31.7.2026) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாபை சோ்ந்த ஒருவா் சாலையில் நடந்து சென்றபோது தெருவில் சுற்றித் திரியும் மாடு முட்டி தலையில் காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரின் மனைவி தனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி பஞ்சாப்- அரியானா உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, அந்தப் பெண்ணுக்கு அவரின் கணவரின் வருமானம், வயது உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து, 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட விதியின்கீழ் ரூ.29.32 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
எனினும், பஞ்சாப் – அரியானா உயா் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு, இழப்பீடு வழங்குவது தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த இழப்பீடு உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அந்தப் பெண் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோரை கொண்ட நீதிபதிகள் அமா்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தெருவில் சுற்றித் திரியும் ஒவ்வொரு விலங்கும் அன்றைய நாள் முடிவில் அதன் உரிமையாளரின் வசிப்பிடத்தை அடைவதை உரிமையாளா் உறுதி செய்ய வேண்டும். விலங்குகளின் உரிமையாளரே அவற்றால் நேரிடும் விபத்துகளுக்குப் பொறுப்பாவா். இதை அடிப்படையாகக் கொண்டு, தெரு விலங்குகளால் நேரிடும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பான நடைமுறையை அனைத்து மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் உருவாக்க வேண்டும். இதுதொடா்பான சட்டங்களை மாநில அரசுகள் இயற்ற வேண்டும். தேவைப்பட்டால் சட்டத் திருத்தங்களை கொண்டு வரலாம் அல்லது விதிகளை அமல்படுத்தலாம்’ என்று உத்தரவிட்டனா்.
அதேபோல் வீட்டு விலங்குகளுக்கு அடையாளம் அறியும் கண்காணிப்புப் பட்டை வசதி கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றும், இப்படி செய்வதால் அது எங்கு செல்கிறது என்பதைக் கண்காணிப்பதோடு, அதற்கு கால்நடை மருத்துவா்கள் மூலம் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற நீண்ட காலம் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
