உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி!
புதுடில்லி, ஜூலை 24 ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகளை இந்தியா வாங்கி உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 4 நாள்கள் போரின்போது இந்த ஏவுகணைகள் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன.
எஸ் 400 ஏவுணை கவசத்தில் 40 கி.மீ, 120 கி.மீ. 250 கி.மீ. 400 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஒரே நேரத்தில் 72 வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
இந்த சூழலில் ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணையை போன்று உள்நாட்டில் குஷா என்ற பெயரில் அதிநவீன ஏவுகணை கவசம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கிய இந்த ஏவுகணை கவசத்தில் 150 கி.மீ. 250 கி.மீ. 400 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் குஷா ஏவுகணை சோதனை நேற்று (23.7.2026) நடத்தப்பட்டது. அப்போது தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட வான் இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது.
அமெரிக்காவின் தாட், ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணை கவசத்துக்கு இணையாக இந்தியாவில் குஷா ஏவுகணை கவசம் உருவாக்கப்பட்டு உள்ளது. 2028-ஆம் ஆண்டில் இந்த ஏவுகணை கவசங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும்.
கேரளத்தில் பெண்களுக்கான
பிங்க் பேருந்து சேவை தொடக்கம்
பிங்க் பேருந்து சேவை தொடக்கம்
திருவனந்தபுரம், ஜூலை 24 கேரளாவில் அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்களுக்கான தனிச் சிறப்பாக பிங்க் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் மாநில அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நேற்று (23.7.2026) பிங்க் பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிபி ஜான் கலந்துகொண்டு, பெண்களுக்கான தனிச் சிறப்பாக பிங்க் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், ‘‘பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
டெக்னோபார்க் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இரவு 8 மணி மற்றும் 10 மணிக்கு சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படும். இந்த திட்டம் விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
